புதன், 27 ஜூன், 2012

இலங்கையில் தமிழர்கள் நிலம் பறிப்பு : பிரான்சு பாராளுமன்றம் முன்பு ஈழத் தமிழர்கள் போராட்டம்

இலங்கையில் தமிழர்கள் நிலம்  பறிப்பு : பிரான்சு பாராளுமன்றம் முன்பு ஈழத் தமிழர்கள் போராட்டம்

இலங்கையில் விடுதலை புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த போர் முடிவுக்கு வந்து 3 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. போரின்போது இடம் பெயர்ந்த தமிழர்கள் ராணுவத்தின் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தமிழர்கள் பகுதிகளில் அவர்கள் வாழ்ந்த நிலப்பரப்பு ராணுவத்தால் அபகரிக்கப்பட்டு அங்கு சிங்களர்கள் குடியமர்த்தப்படுகின்றனர். தமிழர்களின் வழிபாட்டு தலங்கள் மற்றும் அடையாள சின்னங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இலங்கையில் தமிழர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்லும் வகையில் பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை சார்பில் பாரீசில் உள்ள அந்நாட்டின் பாராளுமன்றம் முன்பு போராட்டம் நடத்தப்பட்டது.

தமிழீழ மக்கள் பேரவை தலைவர் திருகோதி தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டனர். பிரான்சில் தற்போது பாராளுமன்ற கூட்டம் நடைபெற்று வருகிறது. அந்த நேரத்தில் கட்சிகள் தங்களது பிரதிநிதிகளை அனுப்பி தமிழீழ மக்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

போராட்டத்தில் திருச்சோதி பேசும்போது எமது மண் எமக்கு வேண்டும். தமிழர்களின் பாரம்பரிய பிரதேசங்களான இலாபம் முதல் அம்பாறை வரை நிலங்கள் தமிழர்களிடம் ஒப்படைக்கபட வேண்டும். அதை இலங்கை செய்யாத பட்சத்தில் தமிழர்களின் நிலங்களை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் போராட்டம் ஒவ்வொரு வாரமும் பிரான்சு பாராளுமன்றம் முன் நடைபெறும்.

பிரான்சு வெளியுறவு துறை அமைச்சருக்கு தமிழீழ மக்களின் இன்றைய நிலையை கடிதம் மூலம் விளக்கி பிரான்ஸ் அரசாங்கம் ஐ.நா. சபைக்கு கொண்டு செல்ல வலியுறுத்தப்படும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக