திங்கள், 25 ஜூன், 2012

தூயக்காற்றை நுகருங்கள்!

"சுவாசிக்கவேண்டும் சுத்தமான காற்று!'
சொல்கிறார்கள்

நுரையீரல் சிறப்பு மருத்துவர் மஞ்சு: காற்றோட்டத்திற்கு வாய்ப்பில்லாத வீடு, தூசு, புகை மத்தியிலான வாழ்க்கை, சமையல் புகை, வீட்டு ஆண்களின் புகைப் பழக்கம், சிமென்ட் மற்றும் வேதிப் பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலை பகுதியில் பணிபுரிதல் மற்றும் குடியிருத்தல் போன்ற காரணங்களால் மூச்சுக் குழாய் அடைப்பு நோய் ஏற்படுகிறது. ஆஸ்துமா, இன்ன பிற சளி தொடர்பான நோய்களாகக் கருதி, சுய மருத்துவத்தில் இறங்குவதும், அலட்சியம் காட்டுவதும், நீடித்த பாதிப்புகளை தரும். பொதுவாக, 40 வயதைக் கடந்தவர்களையே இந்தத் தொந்தரவு அதிகம் பாதிக்கும். முழுமையான நிவாரணத்திற்கு வாய்ப்புகள் குறைவு என்றாலும், பாதிப்புகளைக் குறைத்து, வாழ்க்கையை இயல்பாக எதிர்கொள்ள, அன்றாட மருந்துகளில் துவங்கி, "இன்ஹேலர்கள்' வரை சுலப முறைகள் உள்ளன.மருத்துவச் சிகிச்சைகளுக்கு இணையாக, நம்மைச் சுற்றியுள்ள, சுற்றுப் புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வது முக்கியம். வீடு முழுக்க தூய்மை பேணும் பெண்கள், தாங்கள் அதிகம் புழங்கும் சமையலறைத் தூய்மைக்கு, அதிக அக்கறை காட்டுவதில்லை. ஜன்னல்கள் உதவியுடனும், புகை நீக்கும் மின் விசிறியை நிறுவியும், சமையலறையை காற்றோட்டமாக வைத்திருத்தல் அவசியம். மண்ணெண்ணெய், விறகு அடுப்பு போன்றவற்றில் புழங்குவதாக இருந்தால், இரு மடங்கு கவனம் தேவை.சமையலறை மட்டுமல்லாது, பூஜை அறைக்கான சாம்பிராணி, ஊதுவத்தி புகைகளும் வீட்டில் அளவாக இருக்க வேண்டும். வீட்டின் அமைவிடம் உள்ளடங்கி இருப்பதும், அளவில் சிறியதாக இருக்கும் போதும், பாதிப்புகள் பன்மடங்காக உயர வாய்ப்புகள் உண்டு.உணவில் மசாலா பொருட்களை குறைத்துக் கொள்ள வேண்டும். புரதச் சத்து அதிகமுள்ள பால், சோயா, பருப்பு ஆகாரங்களை அதிகமாக்கிக் கொள்ள வேண்டும். ஒரேடியாக உண்ணுவதை தவிர்த்து, மூன்று வேளை உணவை, ஆறு வேளையாக எடுத்துக் கொள்வது, பயன் தரும். அதிக இறுக்கமான உடைகளைத் தவிர்க்கலாம், மூச்சுப் பயிற்சியும் பழகலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக