ஞாயிறு, 24 ஜூன், 2012

நம்பிக்கையே மூலதனம் - சொல்கிறார்கள்

சாதனைத் தமிழன்!

ஆண்டுதோறும், சிறந்த 10 பேருக்கு, "கூகுள்' நிறுவனம் வழங்கும், உதவித் தொகைக்கு தேர்வாகியுள்ள தஞ்சையைச் சேர்ந்த செல்வக்குமார்: எனக்கு ஒரு வயதாக இருக்கும் போது, போலியோ பாதிப்பால், இரு கால்களும் பாதிக்கப்பட்டன. அதனால், நடக்க முடியாமல் சக்கர நாற்காலியிலோ அல்லது தவழ்ந்தோ தான், எங்குமே செல்ல வேண்டும்.இருந்தாலும், என் அப்பா ராமச்சந்திரனும், அம்மா ஜோதியும் மனம் தளராமல் நம்பிக்கையுடன், என்னை பள்ளியில் சேர்த்து, படிக்க வைத்தனர். அவர்களின் ஊக்கத்தால் தான், இன்று வரை என்னால் தொடர்ந்து படிக்க முடிகிறது. என் வெற்றிகளுக்கான ஒவ்வொரு விதைகளும், என் பெற்றோர் இட்டது தான்.நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த நான், வங்கியில் கடன் வாங்கித் தான் இளங்கலை பொறியியல் படிப்பை முடித்தேன். அந்தக் கடனை, ஏழு ஆண்டுகள் வேலை பார்த்து அடைத்தேன்.பள்ளி நாட்களிலேயே வெளிநாட்டில், குறிப்பாக, ஐரோப்பாவில் மேற்படிப்பு படிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதன் முதல் படியாக, ஸ்வீடனில் முதுகலைப் பட்டம் முடித்தேன். இத்தாலியில் தற்போது, ஆராய்ச்சிப் படிப்பு படிக்கிறேன்."கூகுள்' நடத்திய போட்டியில் பங்கேற்று, நான் அனுப்பிய மென்பொருள் திட்டத்திற்கான வரைவு ஒன்று தான், எனக்கு இந்த கவுரவத்தைப் பெற்றுத் தந்துள்ளது."கினெக்ட்' என்ற கையசைவுகளின் வழியாக, கணினியில், விளையாட்டுகளை விளையாடும் ஒரு, "ஹார்டுவேர்' பற்றிய வரைவுத் திட்டத்தை சமர்ப்பித்தேன்.இதன் மூலம், மாற்றுத் திறனாளிகள் வெறும் கையசைவை வைத்து, "கூகுள்' வரைபடங்களில் எளிமையாக தேடலாம். அதோடு, சுற்றுலா பற்றியும் கொடுத்திருந்தேன். என் திட்டமும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும், அவர்களைக் கவர்ந்ததால், போட்டிக் குழுவினர் என்னைத் தேர்ந்தெடுத்தனர்.நான் ஸ்வீடனில் மேற்படிப்பு படித்துக் கொண்டிருந்த போது, ஏற்கனவே ஒரு முறை இந்தப் போட்டிக்காக விண்ணப்பித்திருந்தேன். அப்போது என் விண்ணப்பம் தேர்வு செய்யப்படவில்லை. ஆனாலும், மனம் தளராமல், நம்பிக்கையுடன் முயற்சித்தேன்; வென்றேன்.

"நம்பிக்கையே மூலதனம்'

மோட்டார் சைக்கிள், "ஒர்க் ஷாப்' நடத்தி வரும், பார்வையற்ற மாற்றுத் திறனாளியான கண்ணப் பன்: பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பம் எங்களுடையது; என் பெற்றோருக்கு, கல்பட் டறையில் வேலை.நான் பிறந்து நான்கு வயது வரை, நன்றாக பார்வை இருந்தது. ஒருமுறை எனக்கு, கடுமையான காய்ச்சல் வந்தது. ஒவ்வொரு நாளும் அதிகமானதே தவிர, குறையவில்லை. பல மருத்துவமனைகள் ஏறி இறங்கினர். இறுதியில், ஒரு மருத்துவமனையில், எனக்கு வந்தது மூளைக் காய்ச்சல் என கண்டுபிடித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின், உயிர் பிழைத்தேன்.மூளைக் காய்ச்சல் காரணமாக, பார்வை நரம்புகள் பாதிக்கப்பட்டு, கண் பார்வை பறிபோய் விட்டது. இனிமேல், பார்வை வர வாய்ப்பில்லை என, மருத்துவர்கள் கூறிவிட்டனர்.அதன்பின், என் பெற்றோரின் அழுகை தான், சுயமாக இந்த அளவிற்கு முன்னேற வைத்தது. என் 10 வயதில், பார்வையற்றோர் பள்ளியில் சேர்த்து விட்டனர். கழிப்பறை கழுவுவது, அறைகளைப் பெருக்குவது என கொடுமைப்படுத்தினர். ஒரு வாரம் தான் அங்கிருந்தேன்; அதன்பின், வீட்டிற்கு வந்துவிட்டேன்.வீட்டில் சும்மா இருக்கப் பிடிக்காமல், சைக்கிள் ரிப்பேர் கடையில் வேலைக்குச் சேர்ந்தேன். அது தான் ஆரம்பம். இரண்டு ஆண்டில், சைக்கிள் முழுவதையும் பிரித்துப் போட்டு, "ஓவராயில்' செய்வது வரை கற்றுக் கொண்டேன்.என் 17 வயதில், சாலையோரம் சொந்தமாக சைக்கிள் ரிப்பேர் கடை வைத்தேன். அப்போது, நிறைய மோட்டார் சைக்கிள்கள் என்னிடம் வந்தன. தெளிவாக வேலையை கற்றுக் கொண்டு தான், கடையை விரிவுபடுத்த வேண்டும் என நினைத்தேன். கடையை நிரந்தரமாக மூடிவிட்டு, மோட்டார் சைக்கிள் ஒர்க் ஷாப் கடையில், வேலைக்குச் சேர்ந்தேன்.கொஞ்சம் கொஞ்சமாக வேலையை கற்றுக் கொண்டு, மோட்டார் சைக்கிள், "ஒர்க் ஷாப்' கடை ஒன்று ஆரம்பித்தேன். அனைத்து வகை இரு சக்கர வாகனங்களையும் சரி செய்துவிடுவேன்; அவ்வப்போது, வேலையில், நண்பர்கள் உதவியாக இருப்பர். மற்றபடி, என் தொழில் சிறப்பாக உள்ளது.

2 கருத்துகள்:

  1. நன்றி ஐயா. இதுபோன்றோரை உலகின் பார்வைக்குக் காட்டி பார்வயிருந்தும் கண்களை மூடிக் கொண்டிருப்போரின் கண்களைத் வேகுவேகமாய் திறந்துவிடலாம். அதோடு, இன்னும் பல மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்கள் திறன் மதிக்கப்படல் புரிகையில் சற்று கூடுதல் நம்பிக்கையூட்டிய நிறைவும் கிட்டும்..

    தொடரும் தங்களின் மொழிசார்ந்த இனம் சார்ந்த பெரும்பணிகள் மிகுந்த மதிக்கத் தக்கதும் நன்றிக்கு உரியதுமாகும். வாழிய நலம்..

    வணக்கத்துடன்..

    வித்யாசாகர்

    பதிலளிநீக்கு
  2. நன்றி கவிஞரே. உங்கள் முகநூலில் இணைய முடியவில்லையே! உறுப்பினர் எண்ணிக்கை வரம்பு கடந்து விட்டதாக வருகிறதே!அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/

    பதிலளிநீக்கு