செவ்வாய், 26 ஜூன், 2012

ஆழ்துணைக் கிணறுகள் பற்றிய உச்சநீதிமன்ற ஆணைகள்



அரியானா மாநிலத்தில், ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஐந்து வயது சிறுமியை, நீண்ட போராட்டத்துக்கு பின்னரும் காப்பாற்ற முடியவில்லை. இதையடுத்து, நாடு முழுவதும் ஆழ்துளை கிணறுகள் குறித்து, பொது மக்களிடையே பீதி நிலவுகிறது.
ஆழ்துளை கிணறுகளில் குழந்தைகள் தவறி விழுந்து மரணங்கள் ஏற்படுவதைத் தடுக்க, பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை, சுப்ரீம் கோர்ட் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், உத்தரவாக வெளியிட்டுள்ளது. இந்த ஆணை பின்பற்றப்படுகிறதா என்பதே இப்போது எழுந்துள்ள கேள்வி.


விளம்பரம்: சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் வெளியிடப்பட்ட உத்தரவு விவரம்:ஆழ்துளை கிணறு தோண்டுபவர், அதுகுறித்து 15 நாட்களுக்கு முன், மாவட்ட கலெக்டர் அல்லது அவர் வசிக்கும் உள்ளாட்சி அமைப்பிடம் தெரிவிக்க வேண்டும். ஆழ்துளை கிணறு தோண்டும் இயந்திர நிறுவனத்தினர், அந்நிறுவனத்தை அரசிடம் பதிவு செய்ய வேண்டும். ஆழ்துளை கிணறு தோண்டும் போது, அதற்கு அருகில் கிணறு தோண்டுவது குறித்த விளம்பரப் பலகை வைக்க வேண்டும்.அதில், கிணறு
தோண்டுபவரின் முகவரி மற்றும் கிணறு தோண்டும் இயந்திர நிறுவனத்தின் முகவரி ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். கிணறு தோண்டியதும் அதைச் சுற்றி கம்பி வேலி அமைக்க வேண்டும். மேலும், கான்கிரீட் மேடையையும் கிணற்றைச் சுற்றி அமைக்க வேண்டும்.கிணற்றின் வாய் பகுதியை இரும்பு பிளேட் கொண்டு மூட வேண்டும். கிணறு தோண்டி முடித்ததும், அப்பகுதியைச் சுற்றி ஏற்படும் குழியை முற்றிலும் மூட வேண்டும். பயன்படுத்தப்படாத ஆழ்குழாய் கிணற்றை, அதன் அடிப்பாகம் வரை மண்ணிட்டு மூட வேண்டும். கண்காணிப்பு:இந்த வழிகாட்டி நடைமுறைகள்
பின்பற்றப்பட்டுள்ளதா? என, "மாவட்ட கலெக்டர்' கண்காணிக்க வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் மூடப்பட்டுள்ளதை, வேளாண்மை பொறியியல் துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மாவட்ட கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். பயன்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகள் குறித்த முழு விவரங்களையும் மாவட்ட கலெக்டர் தொடர்ந்து பராமரிக்க வேண்டும்.இந்த வழிகாட்டி நடைமுறைகளை, மக்கள் அறியும் வகையில், நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சிகளில், மாவட்ட கலெக்டர் விளம்பரம் செய்ய வேண்டும்.
மேலும், ஆழ்துளை கிணறுகள் குறித்த பதிவேடுகளை, சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் வைத்திருக்க வேண்டும்.மாவட்ட கலெக்டர் நடத்தும் மாதாந்திர கூட்டங்களில், ஆழ்துளை கிணறுகள் குறித்து அதிகாரிகள் மத்தியில் ஆலோசிக்க வேண்டும். அதற்குரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை எனில், சட்ட ரீதியான நடவடிக்கையையும் எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறு தோண்டும் போது, சுப்ரீம் கோர்ட்டின் நடைமுறைகளை ஒப்பந்தமாக,கிணறு தோண்டும் நிறுவனமும், நிலத்தின் உரிமையாளரும் ஏற்க வேண்டும். தவறும் பட்சத்தில், சட்ட நடவடிக்கையை மாவட்ட கலெக்டர் எடுக்க வேண்டும்.குறிப்பாக, தமிழ்நாடு நீர் ஆதார அமைப்பு, நிலத்தடி நீர் துறை, பொதுப்பணித் துறை ஆகியன தோண்டும் ஆழ்துளை கிணறுகளை மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு, கோர்ட் ஆணை பின்பற்றப்பட்டுள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவை, தமிழக அரசு ஆணையாக அனைத்து அரசு துறைகளுக்கும், தமிழக தலைமைச் செயலர் அனுப்பியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. -நமது சிறப்பு நிருபர்-

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக