வியாழன், 28 ஜூன், 2012

குவளை தேநீர் 7 உரூபாய்! காணி தேயிலைத்தோட்டம் வெறும் 5 உரூபாய் மட்டுமே!

குன்னூரில் மட்டுமல்ல. எல்லா மலைத் தோட்டங்களிலும் இதே நிலைதான் உள்ளது. குத்தகைக்காரர்களுக்கு எதிராக எந்நடவடிக்கையும் எடுக்க இயலா வண்ணம் அவர்கள் ஆற்றல வாய்ய்நதவர்களாக உள்ளனர். எடுத்துக்காட்டாக மதுரையில் மேகமலையில் உள்ள தேயிலைத் தோட்டத்தை மீட்க நடந்த போராட்டங்களைக் குறிப்பிடலாம்.  ஒரு சேர அனைத்துத் தேயிலைத் தோட்டங்களையும் அரசே எடுப்பது போன்ற முடிவு மட்டுமே தீர்வாகும்.அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் / தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! /

சிங்கிள் டீ 7 ரூபாய்; அரசு நிலம் ஏக்கருக்கு 5 ரூபாய்

குன்னூர் தாலுகாவில் 8,000 ஏக்கர் அரசு நிலம் தனியார் குத்தகைக்கு விடப்பட்டுள்ளதாகவும், ஏக்கர் நிலத்துக்கு ஆண்டுக்கு வெறும் 5 ரூபாய் மட்டுமே குத்தகை வசூலிக்கப்படுவதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. சிங்கிள் டீ 7 ரூபாய்க்கு விற்கப்படும் இக்காலத்தில், ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு வெறும் ஐந்து ரூபாய் குத்தகைக்கு அரசு விட்டிருப்பது வியப்பளிக்கிறது.

நீலகிரியில் பல தனியார் எஸ்டேட்கள் உள்ளன. இவற்றின் கட்டுப்பாட்டில் பல்லாயிரம் ஏக்கர் வருவாய், ஊராட்சி நிலங்கள் உள்ளன. இதற்காக, எஸ்டேட் நிர்வாகங்கள் சொற்ப அளவிலான பணத்தையே, குத்தகையாக செலுத்தி வருகின்றன.

ஏக்கருக்கு 5 ரூபாய்: நீலகிரியில் தனியார் வசமுள்ள நிலங்கள் குறித்து, அமல்ராஜ் மற்றும் ஜெயமுருகன் ஆகியோர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், குன்னூர் தாசில்தாரிடம், தகவல் கேட்டனர். இதற்கு முழுமையான பதில் கிடைக்காத நிலையில், மேல் முறையீடு செய்தனர். "குன்னூர் தாலுகாவில் 8,000 ஏக்கர் அரசு நிலம் தனியார் வசம் உள்ளது. ஏக்கருக்கு வெறும் 5 ரூபாய் மட்டுமே ஆண்டு குத்தகை வசூலிக்கப்படுகிறது' என, அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். தனியார் வசமிருக்கும் அரசு நிலங்களை மீட்க கோர்ட்டில் வழக்குத் தொடரப் போவதாக, தகவல் பெற்ற இருவரும் தெரிவித்துள்ளனர்.

முதல்வர் கவனிப்பாரா? குன்னூர் தாலுகாவில் மட்டுமே 8,000 ஏக்கர் அரசு நிலம் தனியார் வசம் உள்ளது என்றால், நீலகிரி முழுவதும் எவ்வளவு நிலம் இருக்கும் என்பது மாவட்ட நிர்வாகத்துக்கே வெளிச்சம். மொத்த அரசு நிலங்கள் குறித்த விபரங்களையும் அரசு சேகரித்து, அவற்றுக்குரிய குத்தகை தொகையை, தற்போதைய நிலவரத்துக்கு ஏற்ப அதிகரித்தால், அரசுக்கான வருவாயை பெருக்க முடியும். இதற்கான நடவடிக்கையை முதல்வர் ஜெயலிலதா மேற்கொள்வார் என்ற நம்பிக்கையில் உள்ளனர், நீலகிரி மக்கள்.

- டி.சிவசங்கர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக