ஐ.நா.மனித உரிமைத் தீர்மானம்: எனது சிறு பங்களிப்பு!
இலங்கைக்கு எதிராக ஐ.நா.மனித உரிமைக் குழுவில் தீர்மானம் கொண்டு வரப்படுவதற்காக, 'இராமர் பாலம் கட்ட அணில் உதவிய' கதைபோல - நானும் ஒரு சிறு பங்களிப்பை செய்துள்ளேன்.
இது பசுமைத் தாயகம் எனக்களித்த நல்வாய்ப்பை பயன்படுத்தி செய்யப்பட்ட என்னாலானக் கடமை.
UNHRC - Geneva
ஜெனீவாவில் நடந்துவரும் ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களுக்கு எதிரானத் தீர்மானம் அமெரிக்காவால் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்கிற கோரிக்கை தமிழ்நாட்டின் பெரும்பாலான அரசியல் இயக்கங்களாலும், தமிழக முதலமைச்சராலும், உலகெங்கும் உள்ள மனித உரிமை அமைப்புகளாலும் வலியுறுத்தப்படுகிறது. உலகத் தமிழர்கள் ஐ.நா. மனித உரிமை அவைத் தீர்மானத்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இத்தகைய ஆதரவு குரல் எழுப்புவோரில் பெரும்பாலானோர் நேரடியாக ஐ.நா. மனித உரிமை குழுவில் வலியுறுத்தும் வாய்ப்பு இல்லை. ஆனால், மறுபுறம் இலங்கை அரசாங்கம் ஐ.நா.வில் ஓர் உறுப்பு நாடு என்கிற அடிப்படையில் தனது தூதுக்குழுவினரை நேரடியாக அனுப்பி ஐ.நா.அவையில் தீவிரப் பிரச்சாரத்தை செய்துவருகிறது. இதற்கு பதிலடி தரும் விதமாக செயல்பட்டு வருகிறது மருத்துவர் இராமதாசு அவர்களை நிறுவனராகக் கொண்டுள்ள பசுமைத்தாயகம் அமைப்பு (இதுகுறித்து மருத்துவர் இராமதாசு அவர்களின் அறிக்கையை இங்கே காணலாம்). பசுமைத் தாயகம் அமைப்பின் செயலாளர் என்கிற முறையில் அந்த முயற்சியை நான் மேற்கொண்டுள்ளேன்.
ஐ.நா. மனித உரிமைக் குழு கூட்டங்களில் பங்கேற்பதும், ஜெனீவா நகரில் உள்ள ஐ.நா. அவைக்கு உள்ளே சென்று ஐ.நா. மனித உரிமைக் குழு உறுப்பினர்களிடம் வலியுறுத்துவதும் எல்லோராலும் சாத்தியமாகக் கூடியது அல்ல. ஐ.நா. உறுப்புநாடுகளின் பிரதிநிதிகளும், ஐக்கிய நாடுகள் அவையால் அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்புகளாக அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளின் பிரதிநிதிகளும் மட்டுமே ஜெனீவாவில் உள்ள ஐ.நா. அவைக்குள் நுழைய முடியும் என்கிற நிலை உள்ளது. அத்தகைய பிரதிநிதிகள் மட்டுமே ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் நேரடியாகப் பங்கேற்க முடியும்.
தமிழ்நாட்டின் பசுமைத் தாயகம் அமைப்பினை ஐக்கிய நாடுகள் அவை அதிகாரப்பூர்வ ஆலோசனை அமைப்பாக அங்கீகரித்துள்ளது. எனவே, ஐ.நா'வின் அனைத்துக் கூட்டங்களிலும் பங்கேற்க பசுமைத் தாயகம் அமைப்பு உரிமைப் பெற்றுள்ளது. அதனடிப்படையில் 2012 பிப்ரவரி 27 முதல் மார்ச் 23 வரை நடைபெறும் ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்க பசுமைத் தாயகம் அமைப்புக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மனித உரிமைக் குழுவில இலங்கைக்கு எதிரான தீர்மானம் வரவுள்ள நிலையில், இக்கூட்டத்தில் இலங்கைத் தமிழ் அமைப்பினர் பங்கேற்பதே பொறுத்தமானதாக இருக்கும் என்று பசுமைத் தாயகம் கருதியது. இலங்கை அரசின் சார்பான பிரதிநிதிகள் இலங்கை அரசுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யும் நிலையில் அதற்கு எதிராக உலகத் தமிழ் அமைப்புகள் ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்று தமிழர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய வேண்டும் என முன்பே முடிவு செய்யப்பட்டது.
அதனடிப்படையில் உலகளவில் இலங்கைப் போர்க்குற்ற சிக்கலை முன்னெடுத்துச் செல்லும், லண்டனைத் தலைமையிடமாகக் கொண்ட உலகத் தமிழர் பேரவை (Global Tamil Forum - GTF), அமெரிக்கா இலங்கை மீது தீர்மானம் கொண்டுவர தூண்டுகோலாக இருந்த வாஷிங்டனிலிருந்து செயல்படும் அமெரிக்கத் தமிழ் அரசியற் பேரவை (The United States Tamil Political Action Council - USTPAC), ஆகிய அமைப்பினர் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில் ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
உலகத் தமிழர் பேரவையின் மக்கள் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன்
மருத்துவர் யெசோதா நற்குணம்,
அட்டர்னி அலி பைதூன்
உலகத் தமிழர் பேரவையின் மக்கள் தொடர்பாளர் சுரேன் சுரேந்திரன், அமெரிக்கத் தமிழ் அரசியற் பேரவை அமைப்பின் சார்பில் ஸ்டாண் ஃபோர்ட் மருத்துவப் பல்கலைக் கழகத்தின் மருத்துவர் யெசோதா நற்குணம், யேல் சட்டப்பல்கலைக் கழகத்தின் தாஷா மனோரஞ்சன் (PEARL), தமயந்தி ராஜேந்திரன், இலங்கை அரசு மீது அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்குத் தொடுத்துள்ள அட்டர்னி அலி பைதூன் (SPEAK) - ஆகிய ஐந்து பிரதிநிதிகள் பசுமைத் தாயகம் அமைப்பின் சார்பில ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளாக கலந்து கோண்டுள்ளனர்.
ஐ.நா. மனித உரிமைக் குழுவின் உறுப்பினர்களை நேரில் சந்தித்து அமெரிக்க தீர்மானத்துக்கு ஆதரவு திரட்டும் பணியில் பசுமைத் தாயகம் சார்பான பிரதிநிதிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இலங்கை அரசு நடத்திய துணைக்கூட்டத்திலும் இவர்கள் பங்கேற்று இலங்கை அரசுக்கு எதிரான வாதங்களை பதிவு செய்தனர்.
அந்த வகையில் ஐ.நா. அவையில் இலங்கை அரசுக்கு எதிரான நேரடிப் பிரச்சாரத்தை பசுமைத் தாயகம் அமைப்பு மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக