சிங்கள அரசு தப்பிச் செல்லப் பாதை அமைக்கும் அமெரிக்கா!
ஆசிரியர் தலையங்கம் (12/03/2012) www.eelampress.com
அமெரிக்க அரசு ஜெனிவா மனித உரிமைக் கவுன்சிலில் சமர்ப்பித்த தீர்மான வரைவு இலங்கை அரசு தப்பிச் செல்வதற்கு அமைத்துக் கொடுக்கப்பட்ட பாதையாகும். அதைக் கூட இலங்கை அரசு ஏற்க மறுக்கிறது. தன்மீது சிறிது குற்றத்தைக் கூட ஒருவரும் சுமத்தக் கூடாது என்பது இலங்கை அரசின் நிலைப்பாடு.
மீண்டுமொரு முறை உலகத் தமிழர்கள் ஏமாந்து விடக் கூடாது. அமெரிக்காவின் தீர்மான வரைவை அதனுடைய உண்மையான நோக்கத்தை உணரமால் தமிழ்ப் பொது மக்களும் படித்த மனிதர்களும் வரவேற்றுள்ளனர். தமிழக இன்நாள் முதல்வர் முன்நாள் முதல்வர் ஆகியோர் கூட அதை வரவேற்றுள்ளனர்.
மேற்கூறிய தீர்மான வரைவு மிக நுட்பமாக தயாரிக்கப்பட்டுள்ளது. நியாயம், நீதி, மனித உரிமைகளை நிலை நாட்டுதல், குற்றவாளியைத் தண்டித்தல் போன்ற வெளித் தோற்றங்கள் அதில் இருப்பது உண்மை. ஆனால் இந்தத் தீர்மான வரைவை ஏற்க கூடாது. அதில் பொதிந்துள்ள வஞ்சக நோக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும்.
அமெரிக்கா, நோர்வே, இந்தியா, ஆகிய நாடுகள் தான் உண்மையான குற்றவாளிகள். விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் செயற்பட்டன. போர் ஆரம்பமான நாள் முதல் அது முடிவுக்கு வரும் வரை இந்திய அரசின் நேரடியான, மறைமுகமான உதவி இலங்கை அரசிற்கு இருந்தது. இலங்கை அரசு தனித்துப் போரிட்டு இருக்குமாயின் வெற்றி பெற்றிருக்க முடியாது.
எத்தனை அப்பாவி மக்கள் கொல்லப்பட்டாலும் பரவாயில்லைப் புலிகள் அழிந்தாற் போதும் என்ற வெறியுடன் அமெரிக்கா, இந்தியா ஆகிய உலக நாடுகள் இலங்கை அரசிற்கு உதவின. இலங்கையின் போர்க் குற்றங்கள் தொடர்பாகச் சர்வதேச விசாரணை நடத்துவதற்கு அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஆதரவு தெரிவிப்பதற்குத் தயங்குவதின் முக்கிய காரணம் இது மாத்திரமே.
கற்ற பாடங்களும் நல்லிணக்க விசாரணை ஆணையமும் (Lessons Learned and Reconciliation Commission) என்ற அமைப்பை இலங்கை அரசு நியமித்து ஒரு போலி அரசியல் நாடகத்தை நடத்தியது. வரலாற்றில் தனது இராணுவத்திற்கு எதிராக விசாரணை நடத்தி அதைக் குற்றவாளியாகக் கண்டதை உலகின் எப்பகுதியிலும் காணமுடியாது.
இலங்கை விதிவிலக்கல்ல. மேற்கூறிய ஆணையம் வெளியிட்ட 388 பக்க அறிக்கையில் இராணுவத்திற்கு எதிராக ஒரு குற்றச் சாட்டையும் காணமுடியாது. அதை இராணுவத்தின் அறிக்கை என்று கூறுவதில் தவறில்லை. இந்த அறிக்கை புலிகள் அமைப்பு மீதும் அரச படைகளோடு இணைந்து செயற்பட்ட கருணா குழு டக்கிளஸ் தேவானந்தா குழு ஆகியவை மீதும் பல குற்றச்சாட்டுக்களைச் சுமத்துகிறது.
ஜநாவின் நிபுணர் குழு தயாரித்த அறிக்கை இராணுவம் புரிந்த போர்க் குற்றங்கள், மனித உரிமை மற்றும் மனிதநேயச் சட்டங்களை மீறிய குற்றங்கள், மனித குலத்திற்கு எதிராகச் செய்த படுகொலைகளைப் பட்டியலிடுகிறது. இராணுவம் பொது மக்கள் மீது நடத்திய தாக்குதல்களில் 40,000 வரையான பொதுமக்கள், அதாவது தமிழர்கள் கொல்லப்பட்தாகவும் நிபுணர்கள் குழு அறிக்கை கூறுகிறது.
அதே அறிக்கை தனிப்பட்ட சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்துகிறது. அப்படியான விசாரணை நடக்கும் பட்சத்தில் இலங்கை இராணுவம் புரிந்த போர்க் குற்றங்கள் மாத்திரமல்ல அவற்றிற்கு அனுசரனை வழங்கிய நாடுகள் பற்றிய விபரங்களும் வெளிவரும் வாய்ப்புக்கள் நிறைய இருக்கின்றன.
தான் தப்பிச் செல்வதற்காகவும் தனது சகாவான இலங்கை தப்பிச் செல்வதற்காகவும் நல்லிணக்க ஆணைக் குழுவின் மோசடி அறிக்கையை ஆதாரமாகக் கொண்ட தீர்மான வரைவை ஜெனிவாவில் அமெரிக்கா சமர்பித்துள்ளது. அதைக் கூட சீனா, ருஷ்யா, பாக்கிஸ்தான் ஆகிய நாடுகள் எதிர்க்கின்றன. இந்தியா இன்னும் திரிசங்கு நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
வரலாற்றில் முதன் முறையாகக் குற்றவாளி தயாரித்த அறிக்கையை சர்வதேச அரங்கிற்குக் கொண்டு செல்லும் கேவல நிலைக்கு அமெரிக்க அரசு ஒபாமா தலைமையில் இறங்கியுள்ளது. ஏதேனும் குற்றவியல் விசாரணைகள் நடந்தால் அது இலங்கைத் தீவுக்குள் மாத்திரம் நடக்க வேண்டும் என்பதே அமெரிக்க நிலைபாடு
போரின் போது நடந்த இனப் படுகொலை இன்னும் முடியவில்லை. வடக்கு கிழக்கில் நடக்கும் துரித சிங்களக் குடியேற்றம் ஈழத்தமிழர்களின் கட்டமைப்புப் படுகொலையாகத் தொடர்கிறது. இலங்கை மண்ணின் ஒரு பகுதியும் தனியொரு இனத்திற்குச் சொந்தமாக இருக்கக் கூடாது என்ற நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
உலகத் தமிழர்கள் தொடர்ந்து சர்வதேச போர் குற்ற விசாரணைக்குத் குரல் கொடுக்க வேண்டும். ஈழத் தமிழர்களின் சுய நிர்ணய உரிமைக்காகப் போராட வேண்டும். இறைமைக் கோட்பாட்டின் அடிப்படையில் தன்னாட்சி பெற்ற தமிழீழம் ஒன்றே தீர்வு என்ற அடிப்படையில் உலகத் தமிழர்கள் ஒருமித்த குரலில் சர்வதேச சமூகத்திற்கு இடித்துரைக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக