101 பட்டங்களை பெற்ற படிப்பாளி!
கடந்த, 40 ஆண்டுகளாகப் படித்து, 101 டிகிரி வாங்கியிருக்கும் சென்னையைச் சேர்ந்த பேராசிரியர் பார்த்தீபன்: சின்ன வயதில் இருந்தே நன்றாகப் படிப்பேன். படிப்பைத் தவிர, விளையாட்டு, சினிமா என்று எந்தப் பொழுதுபோக்கிலும், எனக்கு ஆர்வம் இல்லை. பள்ளிப் படிப்பு முடித்து, பச்சையப்பன் கல்லூரியில், பி.ஏ., பட்டம் வாங்கினேன். மேலும் படிக்க வேண்டும் என்று, மனம் ஏங்கியது. 1988ல், வேலை பார்த்துக் கொண்டே, பகுதி நேரமாக சென்னை அம்பேத்கர் கல்லூரியில், பி.ஜி.எல்., சட்டப் படிப்பை முடித்தேன். அதே ஆண்டு, எனக்கு திருமணமும் நடந்தது. என் படிப்பில், என் மனைவி உறுதுணையாக இருந்தார். லயோலாவில் பகுதி நேர எம்.பி.ஏ., படித்துக் கொண்டிருக்கும் போது, வேலைப் பளுவும், உயர் அதிகாரிகளின் நெருக்கடிகளும், படிப்புக்கு இடைஞ்சலாக இருந்தன. படிப்பா, வேலையா என்று கேள்வி எழுந்த போது, படிப்பு தான் முக்கியம் என்று முடிவு செய்து, அரசு வேலையை உதறினேன். என் குடும்பத்துக்காக, வீட்டிலேயே டியூஷன் எடுக்க ஆரம்பித்தேன். அந்த வருமானத்தில் தான், என் படிப்பு, குடும்பம், குழந்தைகளையும் கவனித்துக் கொண்டிருந்தேன். பல இக்கட்டான சமயத்தில் கூட, படிப்பை மட்டும் நிறுத்தவே இல்லை. சில சமயங்களில், ஒரே நேரத்தில் இரண்டு மூன்று தேர்வுகள் வரும். அனைத்திற்கும் படித்தாலும், எந்த தேர்வு முக்கியமோ, அதை மட்டும் எழுதுவேன். எனக்குள்ள இன்னொரு பெரிய பலம் ஞாபக சக்தி. நான் படித்த எந்தப் பாடத்திலிருந்து கேள்விகள் கேட்டாலும், நான் பதில் சொல்வேன். நான் படித்து முடித்த புத்தகங்களை, வீட்டில் வைப்பது இல்லை. ஏழை மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுத்து விடுவேன். அவர்களுக்கு இலவச டியூஷனும் எடுப்பேன். அதில் கிடைக்கும் ஆத்ம திருப்தி, வேறு எதிலும் கிடையாது. என் வருமானம் அனைத்தையும், படிப்பிற்காக தான் செலவு செய்கிறேன். இந்த உலகத்தில், கல்வியை விட உயர்ந்த செல்வம் வேற எதுவும் இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக