சொல்கிறார்கள்
நேர்மை ராணி உமா ராணி!
அரவக்குறிச்சி பேரூராட்சியின் நிர்வாக அதிகாரி உமா ராணி: நான் சாதாரண வரி வசூலிப்பவராக இருந்து, நிர்வாக அதிகாரியாக வந்துள்ளேன். அரவக்குறிச்சி பேரூராட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு ஆகிறது. இங்கு வந்ததும், நிர்வாகத்தைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விட்டேன். இரண்டு ஆண்டுகளாக ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்களுக்கு பி.எப்., பணம் கட்டவில்லை. பெட்ரோல் பங்க்கிலிருந்து, எலக்ட்ரிக் கடை வரை, எங்கு பார்த்தாலும் கடன். பொது நிதியில் பைசா கூட கிடையாது. இது மட்டுமல்ல, பேரூராட்சியில் நடந்த ஊழல்களை விசாரிக்க, திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் இரண்டு நாள் முகாம் நடத்தி, பொதுமக்களிடம் மனு வாங்கினர். லஞ்ச ஒழிப்பு போலீசார் முகாம் போட்டு மனு வாங்கியது, எங்கும் நடைபெறாதது. பல முக்கிய ஆவணங்கள் காணாமல் போயிருந்தன. மிகச் சீரழிந்த நிர்வாகத்தைச் சீரமைக்க, பல முயற்சிகளைக் கையாண்டேன். அதில் ஒன்று தான், எஸ்டேட் சீரமைப்பு. எனக்கு முன்பு இருந்தவர்கள் சட்டத்தை மதிக்காமல், பல மனைப் பிரிவுகளுக்கு என்.ஓ.சி., கொடுத்து, அதை விற்க ஒத்துழைத்திருந்தனர். பணம் ஒன்றே குறிக்கோளாக செயல்பட்டதால், அதில் இடம் வாங்கி, வீடு கட்டிய ஒரு குடும்பம், குடிநீரும், மின் இணைப்பும் கேட்டு வந்த போது, "இது அங்கீகாரமில்லாத வீட்டு மனைப் பிரிவு; இதற்கு கரன்ட், தண்ணீர் தர முடியாது' என்றேன். அவர்கள் கதறித் துடித்து விட்டனர். அப்போது தான் முடிவெடுத்தேன்... நம் பேரூராட்சியைச் சுற்றி, எத்தனை அங்கீகாரமில்லாத நகர்கள் உருவாகியுள்ளன என்று லிஸ்ட் எடுத்து, அதை வரிசைப்படுத்தி, பதிவாளர் அலுவலகம், தாலுகா அலுவலகம் என, பல இடங்களில் வைத்தேன். வீட்டுக்கு வீடு, நோட்டீஸ் மூலம் எச்சரிக்கை விடுத்தேன். மக்கள் தற்போது கவனமாக உள்ளனர். என் அதிரடி நடவடிக்கையால், இன்று பேரூராட்சியின் கடன்கள் அடைக்கப்பட்டு விட்டன; பொது நிதியில், 50 லட்ச ரூபாய் உள்ளது; அதில் 30 லட்சத்திற்கு, இப்போது தான் வெவ்வேறு வளர்ச்சிப் பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. மனதில் உறுதியும், நேர்மையும் இருந்தால், எதையும் சாதிக்கலாம்! வாழ்த்து சொல்ல: 0432 0230878
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக