திங்கள், 12 மார்ச், 2012

Women upbringing Kangeyam bulls : பெண்கள் வளர்ப்பில் காங்கேயம் காளைகள்: அழியும் இனத்தை காப்பதாக உறுதி



ஈரோடு: திருப்பூர் மாவட்டம் காத்தசாமிபாளையத்தில், இரு பெண்கள் இணைந்து, ஏழு காங்கேயம் காளைகளை வளர்த்து வருகின்றனர். ""அழிந்து வரும் காங்கேயம் இனத்தை அழிவில் இருந்து தடுப்பதே எங்கள் குறிக்கோள்,'' என, அப்பெண்கள் உறுதியாக கூறுகின்றனர்.

ஆந்திராவில் சிறப்பு வாய்ந்த, "ஓங்கோல்' பசுவுக்கும், கர்நாடக மாநிலத்தில் சிறப்பு வாய்ந்த "ஹெலிகர்' இனக் காளைக்கும் பிறந்த கம்பீரமான இனமே, "காங்கேயம்' இனம். காங்கேயத்தில் இவை அதிகமாக வளர்க்கப்பட்டதால், இதற்கு இத்தகைய சிறப்பு பெயர் பெற்றது.மற்ற சாதாரண மாடுகளை விட, காங்கேயம் காளைகளின், முகத்தோற்றம், கொம்பு, கால், திமிழ், பல், தாடை, எலும்பு, தொப்புள், பின்புறம், வால் ஆகியவை மிடுக்காக இருப்பதால், தோற்றத்தில் காங்கேயம் காளைகள் மிரள வைக்கும்.ஆரம்ப காலத்தில் காங்கேயம் காளைகள் விவசாயிகளின் உற்ற தோழனாக விளங்கி வந்தது. அதிக டன் வரை இழுவை திறன் கொண்டு, வலிமை உள்ளதாக விளங்கியதால், காங்கேயம் காளைகள், மாடுகளுக்கு நல்ல மவுசு ஏற்பட்டது.

பாலை மட்டுமே முக்கியமாக கருதி, சீமைப்பசுக்களை மக்கள் விரும்ப ஆரம்பித்ததால், காங்கேயம் காளைகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து, தற்போது காணாமலேயே போனது. காங்கேயம் காளைகளை இன விருத்திக்காக மட்டுமின்றி, அதன் இனத்தை காக்க போராடும் இரு பெண்கள், திருப்பூர் மாவட்டத்தையே மிரள வைக்கின்றனர்.வெள்ளகோவில் மயிலரங்கம் அருகே, காத்தசாமிபாளையத்தை சேர்ந்தவர் பழனியம்மாளின் (65), அவரது மகள் சவுந்திரம்(46). சிறு வயது முதலே சவுந்திரத்துக்கு, காங்கேயம் காளைகள் மீது ஈர்ப்பு இருந்ததால், அவற்றை வளர்க்க விரும்பினார்.இதனால் செவளை, மயிலை இன காங்கேயம் காளைகளை வீட்டிலேயே, தாயும், மகளும் வளர்த்து வருகின்றனர். தற்போது, ஏழு காளைகளை வளர்த்து, அவற்றை இன விருத்திக்காக பயன்படுத்தி வருகின்றனர்.

பழனியம்மாள், சவுந்திரம் ஆகியோர் கூறியதாவது:சிறு வயது முதலே எங்களுக்கு காங்கேயம் காளைகள் மீது ஈர்ப்பு அதிகம். என் தந்தை காலம் தொட்டே, எங்கள் வீட்டில் காங்கேயம் காளைகள் குழந்தைகள் போல் வளர்ந்துள்ளன. எங்களிடம், "செவலை'யில் ஐந்தும், "மயிலை'யில் இரண்டும் உள்ளன. ஏழு காளைகளையும், நாங்கள் பெற்ற பிள்ளைகள் போல் வளர்த்து வருகிறோம்.மற்றவர்களிடம் முரண்டு பிடிக்கும் காளைகள், எங்கள் கண் அசைவுக்கும், மிரட்டலுக்கும் கட்டுப்படும். கம்பீரத்துக்கு காங்கேயம் காளையைத்தான் எடுத்துக்காட்டாக கூறுவர். அக்காளை இனம் தற்போது அழிவுப்பாதையை நோக்கி செல்வது வருத்தமாக உள்ளது.காங்கேயம் இனக் காளைகளை இன விருத்தி செய்வதற்காவும், இந்த இனத்தை அழியாமல் காப்பதற்கும், எங்களாலான பணியை செய்கிற÷õம். இக்காளைகளை இன விருத்திக்கு பயன்படுத்தி வருகிறோம். நாங்கள் உள்ளவரை காங்கேயம் இனக் காளைகளை அழிய விட கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக