அடித்து விரட்டியபோது பணிந்து போன அரசியல் தலைமைகளை வைத்து வீரம் காட்டிய சிங்களத்திற்கு திருப்பி அடித்து தமிழனின் வீரத்தை தலைவன் உணர்தியது முதல் முள்ளிவாக்காலில் அனைத்துலக சதிக்கு மத்தியில் வேறு வழியின்றி தமிழர்களது பாதுகாப்பிற்காக ஏந்தப்பட்ட ஆயுதங்களை மௌனிப்பதாக முடிவெடுத்த தருணம் வரை தமிழர்தரப்பு சிங்களத்திற்கு சிம்ம சொப்பனமாகவே இருந்து வந்துள்ளது. முள்ளிவாய்க்காலில் எல்லாவற்றிற்கும் முடிவுகட்டிவிட்டதாக சிங்களம் மார்தட்டி நின்ற வேளை விடுதலைப் போராட்டத்தின் உந்துசக்தியாக நாம் எப்போதும் இருப்போம் என்று நெற்றிப் பொட்டில் அறைந்தாற்போல் புலம்பெயர் தமிழர்கள் உணர்த்தி நிற்கின்றனர்.

களத்தில் நேரிடையாக எதிர்கொண்ட சிங்களத்திற்கு புலத்தில் உள்ள புலிகள் எங்கிருந்து எப்போது எப்படி தாக்கப் போகின்றார்கள் எனத் தெரியாது கலங்கி நின்றது. அதன் அச்சத்திற்கு சாட்சியாக பல்வேறு தரப்புகளில் இருந்து எடுக்கப்பட்ட கடின முயற்சிகளிற்கு பின்னர் இன்று ஜெனீவாவில் சிங்களத்தை சர்வதேச முற்றுகைக்குள் சிக்கவைத்துள்ளது.

இந்த சர்வதேச முற்றுகைக்குள் இருந்து தப்பிப்பதற்கு தமிழினத்தை அழிக்கும் போது துணைநின்ற இந்தியா சீனா போன்ற சக்திகளின் ஆதரவுடன் கடும் பிரயத்தனம் செய்து வருகின்றது சிங்களம்.

சிங்களத்திற்கு விரித்த வலையில் தமிழின அழிப்பின் ஆணிவேராகத் திகழ்ந்த இந்தியாவும் மாட்டிக் கொண்டு முழிக்கின்றது. சிங்களத்தை வெளிப்படையாக ஆதரிப்பது தொடர்பாக எந்தவித முடிவும் எடுக்க முடியாது சோனியா தலைமையிலான இந்திய மத்திய அரசு தவித்துவருகின்றது.

அமெரிக்கா சமர்ப்பித்துள்ள பிரேரணையினை ஆதரித்து சிங்களத்தை பகைத்துக் கொள்ளும் தைரியமும் இன்றி ஒன்றுபட்டு குரலெடுத்து நீதிகேட்கும் தமிழகத்தின் குரலிற்கு எதிராக முடிவெடுக்கவும் முடியாது ஆப்பிழுத்த குரங்கின் நிலையில் திணறிவருகின்றது காந்தி தேசம்.

தமிழினத்தை அழிக்க முடிவெடுத்த போதுகூட இவர்கள் இவ்வளவு நெருக்கடிகளை எதிர் கொண்டிருக்கவில்லை.

தாம் தற்போது எதிர்கொண்டிருக்கும் சர்வதேச நெருக்கடிகளின் பின்னணியில் புலம்பெயர்ந்த தமிழர்களது அததீவிரமான செயற்பாடுகள் இருப்பதால் அவர்களை முடக்கி மூலையில் இருத்தும் வேலைகளில் சிங்கள அரசு தீவிரம் காட்டிநிற்கின்றது.

தமிழீழத் தேசியத் தலைவரது இறுதி நிமிடங்கள் என்று கூறி சனல்4 தொலைக்காட்சி வெளியிடவுள்ள ஆவணப்படம் மூலமும் அதற்கு போட்டியாக என்று கூறிக்கொண்டு சிங்களத்தரப்பால் வெளியிடப்பட இருக்கும் பிரத்தியேக ஆவணத் தொகுப்பு மூலமும் அதனை நிறைவேற்ற சிங்களம் தீர்மானித்துள்ளது.
எந்த விடையத்தை கையிலெடுத்தால் தமிழர்களை முடக்கிவிட முடியும் என்பதை நன்குணர்ந்து காரியமாற்றும் சிங்களத்தின் சதிமுயற்சியை அங்கீகரிப்பது போன்றே தமிழ் இணையங்களின் செயற்பாடு காணப்படுகின்றது.

கொல்லப்பட்டு விட்டார் பிரபாகரன்! உறுதிப்படுத்துகின்றது சனல்4…. பிரபாகரன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக திடுக்கிடும் உண்மைகள்!... என்று சிங்களவனது மனநிலையில் ஒரு தமிழ் இணையமும்…

சனல்4 தொலைக்காட்சி நிறுவனத்திடம் புலிகளின் தலைவர் பிரபாகரன் குறித்த “பரபரப்பான” வீடியோவும் சிக்கியது?.... இரத்தத்தை உறைய வைக்கும் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை… என்றும் முன்னைய இணையத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாத உற்சாகத்துடன் இன்னொரு தமிழ் இணையமும்…

தலைவர் மகன் கொலை! புதிய ஆதாரங்கள் வெளிவந்துள்ளன… என்று இன்நொரு தமிழ் இணையமும் தனது பங்கிற்கு தலைப்பிட்டு பரபரப்பை கிளப்பி சிங்களத்தின் எண்ணத்தை செயல்படுத்தியுள்ளார்கள். இவர்களது நோக்கம் வெறுமனே தமது தளங்களிற்கு அதிகளவான பார்வையாளர்களை வரவைக்க வேண்டும் என்பதோடு நிற்காது தமிழினத் துரோகமிழைப்பதாகவே அமைந்துள்ளது.

தமிழினத்தின் விடுதலை ஒன்றையே உயிர் மூச்சாக்கி ஐ.நா. சபையில் தமிழனின் கொடி பறக்க வேண்டும் என்ற உண்ணதமான விருப்புடனும் கோடான கோடி தமிழர்களின் பிரதிநிதியாக களமாடிய தேசியத் தலைவர் மேதகு.வே.பிரபாகரன் அவர்களை மரியாதைக்குரிய சொல்லாடல்களுடன் விளிக்காத இந்த இணையங்கள் கொலைவெறியன் மகிந்தவையும் அவனதுசகாக்களையும் பதவி நிலைகொண்டும் கௌரவ பெயர்களை தவறாது பயன்படுத்தியும் வருவதில் இருந்தே இவர்களது மனவிருப்பு எப்படிப்பட்டது இவர்களது பாதை எத்தகையது இவர்களது பின்னணி எது என்று விளங்கிவிடுகின்றது.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாரன் அவர்களது இருப்புத் தொடர்பாக நாம் பலதடவை உறுதிபடத் தெரிவித்துள்ள நிலையில் மே-20 அன்று சிறிலங்கா அரசால் வெளியிடப்பட்ட புகைப்பட காணொளி ஆதாரங்கள் தொடர்பான போலித்தன்மை குறித்த தகவல்களை ஆதாரத்துடன் வெளியிட்டுள்ளோம்.

அந்த புகைப்படங்களையும் காணொளிகளையும் ஆதாரமாக வைத்தே சனல்4 தொலைக்காட்சியும் சிங்கள அரசதரப்பும் மீண்டும் புதிய கோணத்தில் வெளியிட உள்ளன. மூன்று வருடங்களிற்கு முன்னர் வெளிவந்த இந்த பதிவுகளை புதிய வடிவத்தில் வெளியிட்டு குளப்பத்தை உண்டுபண்ண உள்ளார்கள்.(சனல்4 தொலைக்காட்சி வெளியிட உள்ள காணொளியில் தலைவர் அவர்கள் கொல்லப்பட்டதாக உறுதிப்படுத்தவில்லை என்றும் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.ஊர்யீதமற்ற வகையில் தமக்கு கிடைத்த புகைப்படங்களையும் காணொளியையும் வைத்தே தாம் தலைவர் தொடர்பாக செய்தியை இணைத்துள்ளதாகவும் சனல்4-இன் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.)

புது மொந்தையில் பழைய கள்ளு கொடுத்து ஏமாற்றுவது போன்று இன்றைய பரபரப்பான சூழ்நிலையினை குளப்புவதற்கு மீண்டும் அதனை கையிலெடுக்கத் துணிந்துள்ள சிங்களத்தின் துரோகத்திற்கு தமிழ் இணையங்களும் துணைபோவதை அவதாணிக்க முடிகின்றது.

பாலச்சந்திரனது புகபைப்பட காணொளி ஆதாரங்கள் ஏற்கனவே 2009 மே மாதத்தில் வெளியிடப்பட்ட போதிலும் இன்று அதனை சனல்4 வெளிப்படுத்தியதன் நோக்கம் வேறாக இருந்தாலும் உலகத் தமிழர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

12 வயது சிறுவன் ஒருவன் மிக மிக அருகாமையில் வைத்து சிறிலங்காப் படைகளால் திட்டமிட்டுப் படுகொலை செய்யப்பட்டடுள்ளான் என்பதையும் அவனுடன் சரணடைந்த ஏனையவர்கள் ஆடைகள் களையப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டு கைகள் கண்கள் கட்டப்பட்டு சுட்டுக் கொள்ளப்பட்ட விடையத்தை ஆதாரத்டதுடன் நிரூபிப்பதற்கே மீண்டும் அதனை
கையிலெடுத்துள்ளது.

ஆனால் இந்த விடையத்தை முழுமையாக புரிந்து கொள்ளாது அவசரகுடுக்குத்தனமாக செய்திகளை வெளியிட்டுள்ள இணையங்கள் ஏதோ நேற்று பாலச்சந்திரன் கொல்லப்பட்டு இன்று அதற்கான ஆதாரங்கள் புதிதாக வெளியிடப்பட்டது போன்று பரபரப்புக் காட்டியதன் விளைவு உலகத் தமிழினம் கதிகலங்கி நிற்கின்றது.

தமிழகமே இந்த செய்தியால் ஆடிப்போயுள்ளது. இந்த இணையங்களில் வந்த செய்தியை ஆதாரமாக கொண்டு தமிழகத்தில் உள்ள பத்திரிகை தொலைக்காட்சிகளில் பரபரப்புடன் செய்தி வெளியாகியிருந்தது. இதனை பார்த்தவர்கள் அவசர அவசரமாக எம்மைத் தொடர்பு கொண்டு உண்மை நிலையினை விசாரித்தவண்ணமுள்ளனர்.

இந்த பத்தி எழுதுவதற்கு சற்று முன்னர் சென்னையில் இருந்து தொடர்பிற்கு வந்த உணர்வாளர் ஒருவர் இந்த செய்தியை பார்த்தது முதல் என்ன செய்வது என்றே தெரியாதுள்ளதாகவம்.. வேலைக்கு போகாது வீட்டிலேயே முடங்கிக் கிடப்பதாகவும் பதற்றத்துடன் தெரிவித்தார். பின்னர் உண்மை நிலைப்பாட்டை விளங்கப்படுத்தி அவரை தெளிவுபடுத்துவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

தமிழகத்தில் உள்ள இவரை முடக்கியது போன்று உலகத் தமிழினம் முழுமையும் முடங்கிக் போய் இருந்துவிட வேண்டும் என்ற சிங்களத்தின் எண்ணத்தை எமது தமிழ் இணையங்கள் அரங்கேற்றி ஒத்தாசை செய்துள்ளன.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் நலமுடன் உள்ளார். அதனை வெறுமனே தமிழர்களை நம்பிக்கை கொள்வதற்காக கூறவில்லை. அதுதான் உண்மை. வரலாற்றில் இருந்து பாடங்களை கற்றுக் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்துவந்த தலைவர் இவர்கள் சொல்வது போன்று வீரவசனம் பேசியும் உணர்ச்சிவசப்பட்டும் இறுதிவரை களத்தில் நின்று மரணத்தை தேடிக் கொள்வதற்கு தமிழர்களின் விடுதலைப் போராட்டம் ஒன்றும் தமிழ் சினிமா இல்லை என்பதை அன்பானவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

தனது தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களிற்கு இடம் கொடுக்காது தமிழினத்தின் விடுதலை ஒன்றையே குறிக்கோளாக கொண்டு போராடிவந்தவர் என்பது உலகறிந்த உண்மை. நிச்சயமாக சிங்களத்தால் பறிக்கப்பட்ட தமிழர்களது தாயகத்தை வென்றெடுத்து தமிழர்களிற்கான அரசை அமைக்கும் வரை ஓய்ந்துவிடப் போவதில்லை.

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவரது குடும்பத்தினரது இறுதி நிமிடங்கள் குறித்து வெளிவந்துள்ள வெளிவர உள்ள தகவல்கள் எதுவும் உறுதிப்பாடு அற்றவை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். இதுதொடர்பாக வெளிவரும் செய்திகளை அன்பார்ந்த தமிழ்மக்கள் பொருட்டாக கருதாது இருக்கும் படியும் பொறுப்புவாய்ந்த தமிழ் இணையங்கள் தமது வரலாற்று கடமையினை உணர்ந்து தமிழீழத் தேசியத்தின் அடிப்படையில் செய்திகளை வெளியிடுமாறும் உரிமையோடும் அன்போடும் ஈழதேசம் இணையம் கேட்டுக் கொள்கின்றது.

“தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்”

ஈழதேசம் இணையம் அது ஈழம் அமைக்கப் பயணம்.

ஈழதேசம் இணையத்தள ஆய்வாளர் : ம.செந்தமிழ்.(13-03-2012)