ஈழத் தமிழர்களுக்கு எதிரான முக்கோணச் சதி!– இளந்தி
(செய்தி தொகுப்பு – இளந்தி 10/03/2012) அமெரிக்கா, இந்தியா, தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆகிய முத்தரப்பும் தனித் தனியாகவும் கூட்டாகவும் ஈழத் தமிழர்களுக்கு எதிரான மிக மோசமான சதியில் ஈடுபடுகின்றன. அமெரிக்காவுடன் ஒத்துழைக்க மறுப்பது போல் பாசாங்கு செய்யும் இந்தியா உண்மையில் அமெரிக்காவின் நோக்கத்தையே கொண்டிருக்கிறது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சுயமாக இயங்க முடியாத கையறு நிலையில் அமெரிக்கா, இந்தியா ஆகிய இரு நாடுகளின் வழிகாட்டலில் இயங்கத் தீர்மானீத்துள்ளது. அமெரிக்காவும் இந்தியாவும் இலங்கை அரசிற்குச் சார்பான நிலைப் பாட்டை எடுத்துள்ளன. இதை நன்கு அறிந்தும் கூட்டமைப்பு இரு நாடுகளின் ஆலோசனைப்படி நடக்கத் தயாரகியுள்ளது.
இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனித நேயச் சட்டங்களுக்குப் புறம்பான குற்றச் செயல்களை சர்வதேச மட்டத்தில் விசாரணை செய்வதைக் தடுப்பதற்கு அமெரிக்காவும் இந்தியாவும் மிக நுட்பமான திட்டங்களைத் தீட்டியுள்ளன. இதற்காக இலங்கை அரசு நியமித்த நல்லிணக்க ஆணைக் குழுவின் அறிக்கைக்கு அவை ஆதரவு தெரிவிக்கின்றன.
இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் பற்றீசியா புட்டெனிஸ் நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையை வாயாராப் புகழ்ந்து பாராட்டியுள்ளார். போர்க் குற்ற விசாரணையை இலங்கைத் தீவின் எல்லைக்கு அப்பால் போகவிடாமல் தடுப்பது தான் அமெரிக்காவின் திட்டம். ஈழத் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பிற்கு இந்தியாவிற்கு நிகரான பங்களிப்பை அமெரிக்கா வழங்கியது.
எம்.கே நாராயணனும் சிவ சங்கர் மேனனும் சோடியாக வந்து இறுதிப் போரைத் துரிதப் படுத்தி சென்றனர். ஜநா பொது செயலரின் அலுவலக அதிகாரி விஜே நம்பியார் கொழும்புக்கு வந்து சென்ற பிறகு இனப் படுகொலை இறுதி நிலை அடைந்தது. அண்மையில் எஸ்.எம் கிறிஷ்ணா வருகை தந்த பிறகு போர்க் குற்ற விசாரணைகளை இலங்கைக்குள் முடக்கி நிறுத்தும் சதிக்கு வித்திடப்பட்டது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பிரதிநிதிகள் புது டெல்லி, இலண்டன், வாஷிங்ரன், தொரன்ரோ என்று நெடிய சுற்றுப் பயணத்தை மேற்கொண்டனர். இந்தப் பயணம் தொடர்பான அறிக்கையை அவர்கள் இதுவரை வெளியிடவி;ல்லை. மேற்கூறிய பயணம் மேற்கொள்வதற்கு வலுவுள்ள கூட்டமைப்பு ஜெனிவாவுக்கு செல்லாமல் படுத்து உறங்குகின்றது. அவர்களுடைய பயணக் களையும் அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆலோசனையும் இதற்குக் காரணமாகின்றன.
மனித உரிமைக் காப்பகம் நல்லிணக்க ஆணைய அறிக்கை பற்றிப் பின்வருமாறு கூறுகிறது. “இந்த அறிக்கையில் உள்ள மிகப் பாரதூரமான குறைபாடுகள் இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றங்களை சர்வதேச மட்டத்தில் விசாரணை செய்ய வேண்டிய அவசியத்தை உணர்த்துகின்றன. ஜநா நிபுணர் குழு அறிக்கை சர்வதேச விசாரணையின் அவசியத்தை வலியுறுத்துகிறது”
மேலும் நல்லிணக்க ஆணைய அறிக்கை இராணுவம் புரிந்த படுமோசமான போர்க் குற்றங்களைக் கருத்தில் எடுக்காமல் விட்டுள்ளது. அது எல்ரிரிஈ மீதும் தமிழ்க் குழுக்கள் மீதும் குற்றம் கூறுகிறது. பொறுப்புக் கூறும் கடப்பாடு பற்றி பேசாமல் விட்டுள்ளது. நல்லிணக்கத்திற்கு மாறான பரிந்துரைகளை அது செய்துள்ளது.
மேற்கூறிய மனித உரிமைக் காப்பகத்தின் அறிக்கையைப் போன்ற அறிக்கையைக் கனடா வெளி விவகார அமைச்சர் ஜோன் பெயர்ட் அவர்கள் 2012 ஜனவரி 18ம் நாள் “நாங்கள் தொடர்ச்சியாகத் தனிப்பட்ட சர்வதேச விசாரணைக்காகக் குரல் கொடுக்கிறோம். போர் இறுதி நாட்களில் நடந்த மனித உரிமை மற்றும் மனித நேயச் சட்டமீறல்கள் பற்றி நல்லிணக்க ஆணைய அறிக்கையில் ஒன்றுமே இல்லை.” என்று கூறினார்.
ஆனால் கூட்டமைப்பின் பாராளுமன்றப் பிரதிநிதியும் பேச்சாளருமான சுமந்திரன் பீபீசி சிங்கள செய்திச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் “அரசு நல்லிணக்க ஆணையத்தின் பரிந்துரைகளை நடைமுறைப் படுத்தத் தவறினால் மாத்திரமே சர்வதேச விசாரணைக்கு நாம் குரல் கொடுப்போம்” என்று சொன்னார்.
அதே சுமந்திரன் பீபீசி தமிழ்ச் சேவைக்கு வழங்கிய செவ்வியில் “ஜெனிவாவிற்குப் போக வேண்டாமென்று எமக்கு சக்தி வாய்ந்த நாடுகள் ஆலோசனை வழங்கின” என்றார். மொத்தத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தானும் ஜெனிவாவில் பேசாமல் பிற தமிழ்ப் பிரதிநிதிகள் அங்கு சென்று பேசுவதையும் தடுக்க முயற்சிக்கிறது.
புலம்பெயர் தமிழர்கள் ஒன்றை நன்றாக உணரவேண்டும். தமிழ்தேசிய கூட்டமைப்பு பழைய கூட்டணியைப் போல் சிங்கள அரசிற்கு விலை போய்விட்டது. சுமந்திரனின் கொடும்பாவியை யாழ் பல்கலைக் கழகத்தில் தொங்க விடுவது மாத்திரம் போதாது. கூட்டமைப்பு பிரதிநிதிகள் அனைவரையும் நிராகரிக்க வேண்டும்.
சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி மாத்திரம் ஜெனிவாவிற்குப் போகாமல் விட்டதைக் கண்டித்துள்ளார். மற்றவர்கள் எல்லோரும் பழைய பெருச்சாளி சம்பந்தன் உட்பட கொழும்பு அரசிற்கு அனுசரணை வழங்குகின்றனர். புலம் பெயர் தமிழர்கள் தலைமையில் மாத்திரம் ஈழத்தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக