சனி, 17 மார்ச், 2012

நாய் வளர்ப்பவர்களின் கவனத்திற்கு...: 


கால்நடை மருத்துவர் ஜவஹர்: வீட்டில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகள், நமக்கு அனுகூலமாக இருக்க, சில கவனக் குறிப்புகளை பின்பற்ற வேண்டும். புதிதாக வீட்டில் நாய் வாங்கி வந்தால், பெரியவர்கள் ஓரளவிற்குப் பழகிய பின்னரே, குழந்தைகளிடம் விட வேண்டும். வாந்தி, வயிற்றுப் போக்கு, சரியாகச் சாப்பிடாமல் துவண்டு போய் முடங்குவது போன்றவை, பிராணிகளின் சுகவீனத்திற்கான ஆரம்பகட்ட அறிகுறிகள். இவை தென்பட்டால், நாயைத் தனிமைப்படுத்தி உடனே, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். இது போன்ற சமயங்களில், நாயின் வயிற்றிலிருக்கும் கொக்கிப் புழு, உருண்டைப் புழு போன்றவற்றின் முட்டைகள், அதன் கழிவில் அதிகம் வெளிப்படும்; வீட்டில் உள்ளவர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியமாக இருக்கும் நாயானலும் கூட, அதனுடன் விளையாடி முடித்ததும், கைகளை நன்றாக சோப் போட்டு கழுவ வேண்டும். நாய் பிறந்த ஒன்றரை மாதத்தில், தடுப்பூசி தற்காப்பைத் துவக்க வேண்டும். எலிக் காய்ச்சல் பாதிப்பு, வலிப்பு நோய் போன்ற நோய்களைத் தவிர்ப்பதற்கான கலவை மருந்துகளின் தடுப்பூசி இந்த சமயத்தில் போட வேண்டும். ஒரு வயதிற்கு மேற்பட்ட நாய்களுக்கு, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை குடற்புழு நீக்கம் செய்ய வேண்டும். வெளித்தள்ளிய நாக்குடன் எச்சில் ஒழுகுவது, சாப்பிடாமலிருப்பது, தண்ணீர் அருந்தாமலிருப்பது, அருகில் யாரையும் அனுமதிக்காமலிருப்பது போன்றவை இருந் தால், "ரேபீஸ்' எச்சரிக்கை அவசியம். ஒரு வயதுக்கு மேற்பட்ட நாய், பருவமெய்தியதன் அறிகுறியாக, வீட்டிற்குள் தங்காது, இணை தேடி வெளியில் பாயும். குட்டி நாய் வேண்டுபவர்கள், தங்கள் நாய்க்கான ஆரோக்கிய இணையை அறிந்து கலக்க விடலாம் அல்லது மருத்துவரிடம் அழைத்துச் சென்று, ஆண்மை நீக்கமோ, கருப்பை நீக்கமோ செய்துவிடலாம். ஒரு வயதுக்கு முன், இவற்றை மேற்கொண்டால், பிராணியின் வளர்ச்சி பாதிப்பிற்குள்ளாகும். அதிக வயதான நாய்கள், நோய்க்கு அதிகம் இலக்காகும் என்பதால், குழந்தைகள் உள்ள வீடுகளில் அவற்றை தவிர்ப்பது நல்லது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக