சனி, 11 பிப்ரவரி, 2012

Drama of punishing srilanka by U.N.O. : ஐ.நாவில் ‘இலங்கை அரசு தண்டிக்கப்படும்’ நாடகக் காட்சி : கோசலன்

ஐ.நாவில் ‘இலங்கை அரசு தண்டிக்கப்படும்’ நாடகக் காட்சி : கோசலன்

இலங்கையின் இனப்படுகொலை மிகக் குறுகிய கால எல்லைக்குள் வன்னி நிலப்பரப்பில் நிகழ்ந்த மிகப்பெரும் படுகொலை. உலகின் அத்தனை அதிகார மையங்களும் அண்ணார்ந்து பார்த்து மனிதப் பிணங்களை எண்ணிக்கொண்டிருக்க சாரி சாரியாக நடத்தப்பட்ட படுகொலை. ஒரு தேசத்தின் எல்லைக்கு உட்பட்ட சிறுபான்மைத் தேசிய இனம் என்பதால், ஒடுக்கப்படும் தேசிய இனம் என்பதால் கொலையுண்டுபோனவர்கள் அப்பாவித் தமிழ்மக்கள். உலகம் முழுவதும் எதிர்ப்பியக்கங்கள் அதிகார வர்க்கத்தை அசைத்துப் பார்க்கின்றன. மில்லினியத்தின் முதலாவது பத்தாண்டின் இறுதியில், சரி தவறு என்ற விவாதங்களுக்கு அப்பால், தமிழீழ விடுதலைப் புலிகள் ஆயுத பலம் மிக்க இயக்கமாக வளர்ச்சி பெற்றிருந்தனர் என்பது மட்டுமன்றி உலகின் விரல்விட்டெண்ணக்கூடிய இராணுவ இயக்கங்களில் ஒன்றாகக் காணப்பட்டது.
ஏகாதிபத்திய நாடுகள் ஒவ்வொன்றாக சரிந்து விழ ஆரம்பித்த வேளையில், தெற்காசிய நாடுகள் மீதான சுரண்டல் தீவிரமடைந்தது. இந்த நிலையில் உலக மக்களின் விரோதிகளான வல்லாதிக்க சக்திகளுக்கு இரண்டு பிரதான எதிர்ர்பு வடிவங்களைக் கையாள வேண்டிய அவசியம் ஏற்பட்டிருந்தது.
1. எதிர்ப்பு இயக்கங்களின் இராணு பலம்
2. மக்கள் எழுச்சிகள்.
தமிழீழ விடுதலைப் புலிகள் எந்த அளவிற்கு அரசியல் எதிர்ப்பியக்கமாக வளர்ச்சியடைந்திருந்தனர் என்ற விவாதங்களுக்கு அப்பால் இந்த இரண்டையும் அழிப்பதற்கான வழிமுறைகளின் பரிசோதனைக் களமாகவே இலங்கை பயன்பட்டது எனலாம்.
இந்த அடிப்படையில் இந்திய அரசின் நேரடியான பங்களிப்பில் இலங்கையில் இன அழிப்புப் பரிசோதனை நடந்தேறியது.
இதற்கு ஐரோப்பிய நாடுகள், அமரிக்கா போன்ற அத்தனை ஏகபோகங்களும் அவற்றின் துணை நிறுவனங்களான ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமைகள் அமைப்புப் போன்ற அனைத்தும் பக்கபலமாக அமைந்தன. இனப்படுகொலையை எதிர்ப்பின்றி நிறைவேற்ற அவர்கள் தம்மாலான எல்லா வசதிகளையும் ஏற்படுத்திக் கொடுத்திருந்தனர்.
இந்த ஒருங்கிணைந்த உலக அரசியல் நாடகத்தின் ஒவ்வொரு முனையிலும் ஒரு பகுதித் தமிழர்களாவது பயன்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டனர்.
படுகொலையின் போது மிக அவசியமானதாகக் கருதப்பட்டது உலகின் எந்தப்பகுதியிலும் பொதுவான மக்கள் எழுச்சி இனப்படுகொலையை நிறைவேற்றிக்கொண்டிருந்த இலங்கை அரசிற்கு எதிராகவும் அதன் பங்காளர்களுக்கு எதிராகவும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதே.
அதற்கான பொறிமுறையை அவர்கள் கச்சிதமாக வகுத்துக்கொண்டனர்.
1. இனப்படுகொலையை அதிகாரமட்டத்தில் எதிர்ப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குதல்.
2. மக்கள் எழுச்சி ஏற்படும் வாய்ப்புக்கள் உருவாகும் வேளைகளில் அவற்றிற்கு இதனை அதிகார மட்டத்தில், லொபி அரசியலூடாகத் தீர்த்துவிடலாம் என்ற நம்பிக்கையை உருவாக்குதல்.
இவற்றின் நேரடியான அனுபவத்தை கோதாபய ராஜப்கச எவ்வாறு இந்தியாவுடன் இணைந்து நாடகமாடினோம் என்பதை தனது நேர்காணல் ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஐக்கிய நாடுகள் நிறுவனம் மற்றும் மனித உரிமை அமைப்புக்கள் இனப்படுகொலை நிறுத்தப்பட வேண்டும் என்றும் இலங்கை அரசு தண்டிக்கப்படும் என்றும் அடிக்கடி அறிக்கை விடுத்துக்கொண்டிருந்தனர். உலகின் மற்றைய பகுதிகளில் இதே வகையான இன அழிப்பை நடத்திக்கொண்டிருக்கும் அமரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் எதிர்ப்புக்குரல் எழுப்பின. அதுவும் இலங்கை அரசிற்கும் இனப்படுகொலைக்கும் எந்தத் தீங்கும் வந்துசேராத வகையில் மிகவும் அவதானமாக எதிர்ப்புக் காட்டப்பட்டது.
இவற்றை எல்லாம் நம்பிய புலிகளும், அறிவீலிகளான அவர்களின் ஐரோப்பிய முன்னணி நபர்களும் “ஒபாமாவிற்கான தமிழர்கள் அமைப்பு” என்பன போன்ற கேலிக்குரிய அமைப்புக்களைக் கூட உருவாக்கிக் கொண்டனர்.
இவர்கள் எல்லோருன்ம் இணைந்து தமிழ்ப் பேசும் மக்களை ஏமாற்றிவிடப் போகிறார்கள் என்ற சில குறித்த உதிரிகளின் கூக்குரல்கள் கவனிக்கப்படவில்லை. பல சந்தர்ப்பங்களின் இவர்கள் துரோகிகளாக ஒதுக்கிவைக்கப்பட்டனர்.
மொழி ரீதியான பிணைப்பு என்ற அடிப்படையில் தமிழ் நாட்டில் எழுச்சிகள் எதிர்பார்க்கப்பட்டன. அவை கூட உலக நாடுகளின் துணையுடன் மிக நுணுக்கமாகக் கையாளப்பட்டன. இவற்றின் பின்னணியில் புலிகள் நம்பிக்கை வைத்திருந்த அரசியல் வியாபாரிகள் பங்கும் இந்த அழிவிற்கு அளப்பரியாதக அமைந்தது
குறிப்பாக பிரபாகரன் கொலைசெய்யப்பட்ட போது தமிழ் நாட்டில் எழுச்சியை கட்டுப்படுத்துவதற்காக அவர் இன்னமும் வாழ்கிறார் அல்லது இறப்பு குறித்த சந்தேகங்கள் உள்ளன போன்ற வதந்திகள் தமிழ் நாட்டு மற்றும் புலம் பெயர் வியாபாரிகளால் பரப்பப்பட்டன.
எல்லாவற்றையும் திட்டமிட்டு மிகவும் நுணுக்கமான அரசியலின் வழியாக முடித்துவிட்டார்கள்.
இனப்படுகொலையின் இரண்டாவது பகுதியாக இனச்சுத்திகரிப்பு திட்டமிடப்பட்டது.
நிலப்பறிப்பு, கலாச்சார வன்முறை, பௌத்த சிங்கள மயமாக்கல், சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான திட்டமிட்ட அழிப்பு, மக்கள் மத்தியில் முரண்பாடுகளை ஆழப்படுத்தல் போன்ற அனைத்து அழிப்புகளும் திட்டமிடப்பட்டன.
இவை அனைத்துக்கும் எதிரான மக்கள் எழுச்சிகள் இலங்கையின் ஒவ்வோரு பகுதிகளிலும், இராணுவ ஒடுக்கு முறைகளையும் மீறி எழுந்தன. இவற்றைக் கண்டுகொள்ளாத “தேசிய அறிவிலிகளால்” , அமரிக்கா ராஜபக்சவைக் கைது செய்கிறது, ஐக்கிய நாடுகளில் இலங்கையை தூக்கிலிடப் போகிறார்கள் என்ற போலிப் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டன. இன அழிப்பைத் திட்டமிட்டு நடத்திய அதே அதிகாரங்களை மீண்டும் ஒரு முறை நம்புமாறு கோருகின்ற புலி சார் அரசியல் தலைமைகளுக்கு எதிராக காத்திரமான மக்கள் சார்ந்த அரசியலை முன்வைப்பவர்கள் இன்னமும் துரோகிகளளாகவே சித்தரிக்கப்படுகின்றனர். இது தான் நாடகத்தின் இயக்குபவர்களின் அதி முக்கிய திறமை.
ரொபேர்ட் பிளேக் இலங்கை செல்கிறார், கிளிங்டன் அழுத்தம் கொடுக்கிறார் என்ற பூச்சாண்டிகள் இன்னமும் மக்களை மாயைக்குள் வைத்திருக்கிறது. வியாபாரத்திற்கு வசதியான இந்த அழிவு அரசியல் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் சிதைக்கப்படும் வரை நிகழும். அதிகாரவர்க்கங்களதும் அரசியல் வியாபாரிகளதும் இந்த நாடகங்களுக்கு எதிரான புதிய அரசியலை நோக்கி இன்னமும் நீண்ட பயணம் செல்ல வேண்டிய நிலையே காணப்படுவது சாபக்கேடு.
இந்த நாடகங்களின் இறுதியில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை நடைமுறப்படுத்துமாறு ஐ.நா வில் பரிந்துரைக்கப்படும். சில சலசலப்புக்களுக்குப் பின்னர் இன்னுமொரு நாடக அரங்கம் தயாராகும். இந்த இடைவெளிக்குள் அழிக்கப்படும் அப்பாவிகளின் எண்ணிக்கை கூட எமக்குத் தெரியாத ஒன்றாகிவிடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக