First Published : 09 Feb 2012 12:01:48 PM IST
திருச்சி, பிப். 8: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குநர் ந. மணிமேகலையின் பணி இடைநீக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என, சுற்றுச்சூழல் பாதுகாப்புக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கே. சந்திரசேகர் அனுப்பியுள்ள மனு விவரம்: ‘பாரதிதாசன் பல்கலைக்கழக மகளிரியல் துறை இயக்குநர் ந. மணிமேகலை, பெண்கள் விழிப்புணர்வு அடைய வேண்டும் என்ற நோக்கில் தொடர்ந்து செயல்பட்டு வரும் பெண்ணியவாதி. பெண்களுக்கு தொழில் பயிற்சிகள் அளித்து அவர்களை தொழிலதிபர்களாக உருவாக்கியவர். கிராமப்புற பெண்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பயிற்சிகளை தொடர்ந்து அளித்து வருபவர். சுற்றுச்சூழல் பிரச்னைகளிலும் பல ஆலோசனைகளை வழங்கி மாசில்லா திருச்சியைக் காண ஆர்வம் கொண்டவர். சமூக அக்கறையுள்ள அனைத்து நடவடிக்கைகளிலும் தயங்காமல் பங்கேற்பவர். பெண்களின் நல்வாழ்வுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வரும் முதல்வர், திருச்சியில் பெண்களின் முன்னேற்றம், நலவாழ்வு இவற்றில் கவனம் செலுத்தி வரும் மணிமேகலைக்கு விதிக்கப்பட்டுள்ள இடைநீக்க உத்தரவை ரத்து செய்தும், முறையான விசாரணைக்கு உத்தரவிடவும் ஆணையிட வேண்டும்' என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக