வெள்ளி, 10 பிப்ரவரி, 2012

Tamil imprints in New Zealand :நியூ சீலாந்து கடற்பரப்பில் ஒலித்த தமிழ் மணி!

நியூ சீலாந்து கடற்பரப்பில் ஒலித்த தமிழ் மணி! -க.வீமன்

கடல் கடந்து சென்ற தமிழர்கள் வெகு தூரத்தில் இருக்கும் நீயூ சீலாந்து நாட்டுடன் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு தொடர்பை ஏற்படுத்தியுள்ளனர். இது மேற்கு நாட்டவர்களின் நீயூ சீலாந்துக் குடியேற்றத்திற்கு முந்திய வரலாற்று நிகழ்ச்சி.
14ம் 15ம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட கப்பலில் தொங்க விடப்படும் வெண்கல மணி பற்றிய செய்தி 1836ம் ஆண்டு வெளியாகியது. செம்பும் தகரமும் உருக்கிக் கலந்து வார்க்கப்பட்ட மணியில் “முகைய்ய தீன் வக்குசு உடைய கப்பல் உடைய மணி”என்ற தமிழ் வாக்கியம் காணப்படுகிறது.
மணியின் வார்ப்பின் போது இந்த எழுத்துக்களும் மணியின் வெளிப்புறத்தில் வார்க்கப்பட்டன. எழுத்துக்கள் இன்றும் மிகத் தெளிவாக இருக்கின்றன. இந்த மணி முகைய்ய தீன் வக்குசு என்ற தமிழ் இஸ்லாமியரின் கப்பலுக்குரியது என்பது இந்த எழுத்துக்கள் மூலம் தெரிகிறது.
இந்த மணிக்குரிய கப்பல் கடலில் சேத மடைந்ததால் மணியும் கப்பலும் வெவ்வேறாகின. நீயூ சீலாந்தின் பூர்வ குடிகளான மாஓறி (Maori) இனத்தவர்கள் மணியைக் கடலில் இருந்து மீட்டதாக நம்பப்படுகிறது. மணி பற்றிய மேலதிகத் தகவல் இவ்வாறு. மாஓறி இனத்தவர்களிடம் இந்த மணி இருந்ததைக் கிறிஸ்தவப் பாதிரியார் வில்லியம் கொலென்சோ (William Colenso) 1836ல் கண்டுபிடித்தார்.
நீயூ சீலாந்தின் டியூனெடின் நகரில் 1862ம் ஆண்டு அதே மணி காட்சிப் படுத்தப்பட்டது. மேற்கூறிய வில்லியம் கொலென்சோ பாதிரியார் மாஓறிகளிடம் இருந்து மணியைப் பெற்றுக் காட்சியை ஒழுங்கு படுத்தினார்.
சில காலத்தில் அதே மணி நீயூ சீலாந்து வெலிங்ரன் (Wellington) தே பாப்பா (Te Papa) அரும் பொருள் காட்சியகத்தில் வைக்கப்பட்டது. ஈழத்து தமிழார்வலரும் 1961ல் மலாயாப் பல்கலைக் கழகத்தின் இந்திய ஆய்வியல் துறைப் பேராசிரியரும் 1966ல் முதலாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டை மலேசியாவில் நடத்திய வருமான தனிநாயகம் அடிகள் இந்த மணி பற்றி முதன் முதலாக உலகிற்கு அறிவித்தார்.
நீயூ சீலாந்தில் தமிழ் அடையாளங்கள் (Tamil imprints in New Zealand) என்று தலைப்பிட்ட சிறு நூல் 2007ம் ஆண்டு தமிழில் வெளி வந்தது. இதை எழுதியவர் நீயூ சீலாந்துக் குடியுரிமை பெற்ற ஏ.ரி ஆறுமுகம் என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவராவார்.
இந்த நூல் ஆங்கிலத்திற்கு மாற்றப்பட்டு 2012ல் வெளியீடு காண்கிறது. நூலாசிரியர் ஆறுமுகம் யாழ் புன்னாலைக் கட்டுவனில் பிறந்தவர், தெல்லிப்பளையில் வளர்ந்தவர், மாதகலில் வாழ்ந்தவர். இவர் ஆசிரியராகவும் கல்லூரி அதிபராகவும் பணியாற்றிய பிறகு 1996ல் நீயூ சீலாந்தில் குடும்பத்தோடு கால் பதித்தவர். அவருக்கு இப்போது வயது 87.
நீயூ சீலாந்திற்கும் தமிழர்களுக்கும் இடையிலான பன்நெடுங்காலத் தொடர்பு பற்றிய ஆய்வுக்கு இந்த 52 பக்க நூல் உதவுமென்று நம்பப்படுகிறது. இந்த மணியிலுள்ள தமிழ் எழுத்துக்களைப் போன்றவை நீயூ சீலாந்தின் கன்ரர்பெறி (Canterbery) வேக்கா கணவாய்ப் (Weka pass) பாறைகளில் பொறிக்கப்பட்ட நிலையில் காணலாம்.
மேலும் றகலன், மானு குடாவிலும் (Raglan Manu Bay) அதே வகைத் தமிழ் எழுத்துக்களைக் காணமுடியும். பசுபிக் மாகடல் பிராந்தியத்திலும் தூர கிழக்குக் கடல்களிலும் 14ம் 15ம் நூற்றாண்டுகளில் தமிழ்க் கடலோடிகள் சஞ்சரித்துள்ளனர். இந்த மணியில் பொறிக்கப்பட்ட தமிழ் எழுத்துக்களுக்கு நிகரானவை சீனா, கொரிய தீபகற்பம் ஆகியவற்றில் காணப்படுகின்றன.
மேற்கில் எகிப்து வரையும் கிழக்கில் வியற்நாம் வரையும் பழங் காலத்தில் தமிழ்க் கப்பல்கள் சென்றதற்கான சான்றுகள் புதைபடிவ ஆய்வில் பெறப்பட்ட தமிழ் பிரம்மி எழுத்துக்கள் மூலம் அறியப்படுகிறது.
மேலும் தமிழ் பிரம்மி, தென் இந்திய கிரந்த எழுத்துக்கள் தான் தாய்லாந்து, வியற்நாம், இந்தோனேசியத் தீவுகள் ஆகியவற்றில் மீட்கப்பட்ட மிகப் பழமை வாய்ந்த எழுத்துக்களாகும்.
தமிழ் வர்த்தகர்களின் குடியேற்றங்கள் சீனாவில் இருந்ததற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன. சீன மொழி, கொரிய மொழி, ஜப்பான் மொழி ஆகியவற்றில் தமிழ்ச் சொற்கள் இருப்பது பற்றிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. கொரிய மக்களின் உணவு வகைகளில் தமிழர் உணவு வகைகளும் இருப்பதை இத்துறை சார்ந்த ஆய்வுகள் நீருபிக்கின்றன.
இந்த மணியின் சொந்தக்காரர் ஒரு இஸ்லாமியர் என்றபடியால் தமிழ் மொழியைத் தம்மொழியாக வரித்துக் கொண்ட இஸ்லாமியர்கள் பற்றிய ஆய்வும் அவசியமாகிறது. கவிக்கோ அப்துல் ரகுமான் மிகவும் அழகாகச் சொன்னார், “உருது என் தாய், தமிழ் என் காதலி”
கடல் வணிகம் செய்த இஸ்லாமியர்கள் தெரிவு செய்த மிகப் பழமை வாய்ந்த தெற்கு ஆசிய மொழி தமிழ் தான். மத்திய காலத்தில் (Medieval Period) பாரசீக மொழி அல்லது அரபு மொழியில் ஹன்சுநாம் அல்லது அஞ்சுநாம் (Hagngunam Agnjunam) என்று பெயரிடப்பட்ட தமிழ் முஸ்லிம் வர்த்தகக் குழுக்கள் தென்னிந்தியாவில் செயற்பட்டன.
யாழ் மாவட்டத்தில் அஞ்சனந்தாழ்வு என்ற கிராமம் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தோடு தொடர்புடைய இஸ்லாமியர்கள் தங்கள் பெயர்களை தமிழ் மயமாக்கியுள்ளனர். இதற்கு மணிக்குச் சொந்தக்காரர் தனது பெயரை மணியில் வார்பிட்ட விதம் சான்றாக அமைகிறது.
கன்யாகுமரி மாவட்டத்தில் தேங்காய்ப்பட்டணம் என்ற ஊர் இருக்கிறது. அங்கு 1,400 வருடம் பழமை வாய்ந்த கருங்கல்லால் கட்டப்பட்ட மசூதி இன்றும் காணப்படுகிறது. தேங்காய்ப் பட்டணத்தில் நிறையத் தேங்காய் மரங்கள் இருக்கின்றன. அங்கு இயற்கைத் துறைமுகமும் இருந்திருக்கிறது. அரபு வணிகர்கள் தேங்காய் வாங்கிச் செல்ல அடிக்கடி வருவார்கள்.
கடல் வாணிபமும் வரலாற்றுப் பின்னணியும் கொண்ட தேங்காய்ப்பட்டணத்தில் அரபுக்கள் மேற்கூறிய மசூதியை அமைத்து மதப் பரபரப்பலை மேற்கொண்டனர். இவ்வாறு இஸ்லாமுக்கும் தமிழுக்கும் இணைப்பு ஏற்பட்டது.
மாஓறி இனத்தவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய ஆய்வு ஆரம்ப கட்டத்தில் மாத்திரம் இருக்கிறது. மாஓறி இனத்தின் முன்னோர்கள் பொலினீசியன் (Polynesian) இனக் குடும்பத்தைச் சேர்ந்த தென் கிழக்கு ஆசிய நாட்டவர்கள். சில வரலாற்று ஆசிரியர்கள் அவர்கள் சீனாவில் தோன்றியவர்கள் என்று கூறுகின்றனர்.
எப்படிச் சொல்லப்பட்டாலும் அவர்கள் தென் கிழக்கு ஆசியாவிலிருந்து தென் பசுபிக் மாகடல் மார்க்கமாக நீயூ சீலாந்திற்கு வந்து குடியேறியதாகப் பரவலாக நம்பப்படுகிறது. நோர்வே நாட்டவரான ஆய்வாளர் டோர் ஹெயர்தால் (Thor Heyerdhal)தனது சொந்த கடற் பயணத்தின் மூலம் மாஓறிகள் தென்னமரிக்காவில் இருந்து நீயூ சீலாந்து வந்ததாகக் கூறுகிறார்.
இவருடைய கூற்றை பெரும்பாலான ஆய்வுகள் நிராகரித்துள்ளன. கடந்த 50 வருட காலமாக மாஓறிகள் ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் இருந்து பயணித்து நீயூ சீலாந்து வந்தனரா அல்லது சிறு சிறு குழுக்களாக வௌ;வேறு இடங்களில் இருந்து வந்தனரா என்ற கோணங்களில் ஆய்வுகள் நடக்கின்றன.
இந்து மாகடல் கடலோடித் தமிழர்களின் ஏரி என்று சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இதில் பசுபிக் மாகடலையும் சேர்க்க வேண்டும். 10ம் நூற்றாண்டு ராஜ ராஜ சோழன் போன்றோருக்கு முன்பும் பின்பும் தமிழர்கள் கடலை வரலாற்றுப் பின்னணியாகக் கொண்டிருந்தனர் என்பது ஏற்றுக் கொள்ளப்பட்ட விடயம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக