புதன், 8 பிப்ரவரி, 2012

தமிழுக்காகப் பலியாகக் கைதானார் இலக்குவனார்

"பிறர் தூக்கிச் சென்ற பிறகுதான் நம் சொத்து என்பதே தெரிகிறது'

First Published : 05 Feb 2012 03:18:31 PM IST


திருச்சி, பிப். 4: பிறர் தூக்கிச் சென்ற பிறகுதான் அது நம் சொத்து என்பதே தமிழனுக்குத் தெரிகிறது என்றார் மூத்த தமிழறிஞர் தமிழண்ணல்.  திருச்சிராப்பள்ளி மாவட்டத் தமிழ் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழறிஞர் மு. அருணாசலனார், முனைவர் சி. இலக்குவனார், முனைவர் மு. வரதராசனார் ஆகியோரின் நூற்றாண்டு விழாவில் அவர் மேலும் பேசியது:  "இலக்குவனார் எனக்கு ஆசிரியராக இருந்தவர். மு. அருணாசலனார் எனது வழிகாட்டி. இலக்குவனார் தன்னை இழந்தவர். தனக்கு வர வேண்டிய பதவிகளை இழந்தார். ஆனால், அருணாசலனார் வேறு தளத்தில் இருந்தார். தமிழறிஞன் தன்காலில் நிற்க வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவர் அவர்.  எனக்கு மூத்தவராகப் பணியாற்றி தமிழாசிரியர் பெற்ற ஊதியம் ரூ. 18. அப்போது கணிதம் உள்ளிட்ட வேறு பாட ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ. 84. பிறகு பணியில் சேர்ந்த எனக்கு மாத ஊதியம் ரூ. 84. தமிழாசிரியரா? என ஏளனமாகப் பார்ப்பார்கள். பின்னாளில்தான் இந்த நிலை மாறியது.  தமிழின் சொத்தை, நம் சொத்தை நாம் காப்பாற்றுவதில்லை. பிறர் தூக்கிச் சென்ற பிறகுதான் என்னுடையது, என்னுடையது என்று கூச்சல் போடுகிறோம். தமிழிசையும் அப்படியே.  மு. அருணாசலனாரின் இந்த நூல்களை தமிழ் மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். ஏராளமான ஆய்வுகள் இவற்றிலிருந்து வெளிவர வேண்டும்' என்றார் தமிழண்ணல். 
விழாவில், முதுமுனைவர் இரா. இளங்குமரனார் பேசியது:  "தேவாரம், திருவாசகத்துக்கு கோயிலில் இடம் இல்லையென்றால் அந்தக் கோ  யிலைப் பூட்டு போட்டு பூட்டு என்றவர் மு. வரதராசனார். லட்சுமணன் என்ற பெயரை இலக்குவனாக்கியது சாமி சிதம்பரனார். அதன்பிறகு, "இலக்கை நோக்கிச் செல்பவன் இலக்குவன்' என்று மறுமொழி சொன்னார் இலக்குவனார்.  பெயரின் பின்னால் "ஆர்' சேர்த்துவிட்டால் அதைத் தாண்டி சாதிப் பெயரை ஒட்ட முடியாது. அதனால்தான் இலக்குவன், இலக்குவனார் ஆனார்.  தாய்மொழி பயிற்று மொழியாக வேண்டும் என்று போராடியதற்காக, இலக்குவனாரை சிறைப்படுத்த காவல் துறை முயற்சி செய்தது. இதை உளவுத் துறையைச் சேர்ந்த எனது பழைய மாணவர் மூலம் அறிந்து கொண்டு இலக்குவனாரிடம் தெரிவித்தேன்.  தமிழுக்காக பழியைச் சுமக்கவும், பலியாகவும் தயாராக இருப்பதாக கைதானார் அவர். வேலூர் சிறையில் 105 நாள்கள் சிறையில் இருந்தார்.  குட்ட வேண்டிய இடங்களில் குனிந்து குனிந்து வாழ்ந்தோம். இப்போது பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறோம். எனவே, தமிழர்கள் இலக்குவனாரின் வழியைப் பின்பற்ற வேண்டும்' என்றார் இளங்குமரனார்.  
விழாவில் மு. அருணாசலனாரின் "தமிழ் இசை இலக்கண வரலாறு', "தமிழ் இசை இலக்கிய வரலாறு' ஆகிய இரு நூல்களையும் இலக்கிய விமர்சகர் வீ.ந. சோமசுந்தரம் வெளியிட, திருச்சிராப்பள்ளித் தமிழ்ச் சங்க அமைச்சர் புலவர் சி. சிவக்கொழுந்து, காவேரி மகளிர் கல்லூரிச் செயலர் கி. அரங்கராசன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.  பேராசிரியர் த. கனகசபை, "மு. அருணாசலனாரின் இசைக் கொடை' என்ற தலைப்பில் பேசினார். விழாவில், புலவர் தமிழகன், பாவலர் முவ. பரணர், பதிப்பாளர் உல. பாலசுப்பிரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.  விழாவுக்கு பாவாணர் தமிழியக்கத்தின் அமைப்பாளர் முனைவர் கு. திருமாறன் தலைமை வகித்தார். திருக்குறள் அஞ்சல் வழிக் கல்வி மையத்தின் தலைவர் சு. முருகானந்தம் வரவேற்றார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவைச் செயலர் கவிஞர் ராஜா ரகுநாதன் நன்றி கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக