புதன், 8 பிப்ரவரி, 2012

மனித நேய ஆர்வலர்களே எங்களின் உயிர் காக்க உதவுங்கள்: ஆப்பிரிக்க தடுப்பு முகாமிலிருந்து ஈழத்தமிழர்கள்

மனித நேய ஆர்வலர்களே எங்களின் உயிர் காக்க உதவுங்கள்: ஆப்பிரிக்க தடுப்பு முகாமிலிருந்து ஈழத்தமிழர்கள்

Africa-tamilrefugees-060212_002
அனைத்து சர்வதேச மனித அமைப்புகளுக்கும், மனிதநேயம் மிக்க மக்களுமாய் ஒரு கண்ணீர் மடலை வரைந்துள்ளனர். அனைத்து சர்வதேச மனித அமைப்புகளே!, மனிதநேயம் கொண்ட அன்பு உள்ளங்களே! எனத் தொடங்கும் அந்த மடலில்;
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்டு, இலங்கையில் இனி வசிக்க முடியாதென முடிவெடுத்து அகதிகளாக கனடா செல்வதற்காக மூன்று மாதங்களுக்கு முன் புறப்பட்ட நாங்கள் மேற்கு ஆபிரிக்க நாடான டோகோவில் உள்ள லோம் எனும் இடத்தில் தற்போது அந்த நாட்டு இராணுவத்தின் பிடியில் சிக்கி சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்து வருகின்றோம்.
500 பேருக்கு மேல் இவ்வாறு இலங்கையில் இருந்து புறப்பட்ட எங்களில் 209 பேர் மாத்திரமே இவ்வாறு இராணுவத்தினரின் பிடியில் சிக்கி உள்ளோம். இவர்களில் இரு தடவைகளில் 30 பேர் வரையில் தற்போது IOM நிறுவனத்தின் உதவியுடன் இலங்கைக்கு திரும்பியுள்ளனர் ஆனால் மிகுதியாக உள்ள நாங்கள் பல தடவைகள் இலங்கை இராணுவத்தினரின் இன்னல்களுக்கு உள்ளாகி சொல்லொண்ணா துயரங்களை அனுபவித்ததால் இலங்கை திரும்ப மனமின்றி இலங்கை இராணுவத்தினரின் கொடுமைகளைவிட இந்த சிறை வாழ்க்கை பரவாயில்லை என எண்ணி இங்கு வாழ்கின்றோம்.
IOM நிறுவனம் எங்களை விசாரணைசெய்து இலங்கை அரசுடனும் கனடா அரசுடனும், இரகசிய ஒப்பந்தங்களை செய்து எங்களை எப்படியாவது இலங்கைக்கு நாடுகடத்தி சிறையில் தள்ளுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் இதற்கு டோகோ நாட்டு இராணுவமும் உடந்தையாக செயற்படுவதாகவும் அறிகின்றோம்.
இந்த இரகசிய உடன்படிக்கையின் காரணமாக எங்களை அடைத்து வைத்திருக்கின் இராணுவம் கடந்த மூன்று நாட்களாக பாரிய கொடுமைகளுக்கு உள்ளாக்கி சித்திரவதை செய்கின்றது. இதன் உச்சக்கட்டமாக இன்றைய தினம் எங்களுடன் உள்ள இளம்பெண்களை அழைத்த இராணுவம் மலசலகூட கழிவுகளை உணவு உண்ணும் பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு வேறொரு இடத்தில் போடுமாறு கட்டளை இட்டுள்ளது வேறு வழி இன்றி பெண்களும் அந்தக் கட்டளையை நிறைவேற்றி உள்ளனர்.
அத்துடன் தற்போது ஒரு நாளைக்கு ஒரு தடவை மாத்திரமே எங்களை மலசலம் கழிப்பதற்கு இராணுவம் அனுமதிக்கின்றது. அதாவது காலை 6 மணிக்கு மலசலம் கழித்தால் மீண்டும் அடுத்த நாள் காலை 6 மணிக்குத்தான் மீண்டும் மலசலம் கழிக்க முடியும். இதனால் பலவாறான உபாதைகளை நாங்கள் தற்போது எதிர்கொள்கின்றோம்.
எங்களிடம் இருக்கின்ற சிறிய குழந்தைகள் தற்போது பல தொற்று நோய்களுக்கு உள்ளாகி உள்ளனர். நாங்கள் இருக்கும் இடத்தில் UNHCR, ICRC போன்ற நிறுவனங்கள் இல்லை இதனால் எங்களை வந்து கவனிப்பதற்கு யாரும் இல்லை இந்த அமைப்புகளுக்கு எங்களின் நிலை தெரிந்திருந்தும் அவர்கள் எங்களை வந்து பார்ப்பதில்லை. தென் ஆபிரிக்க நாடான கானா நாட்டில்தான் இந்த நிறுவனங்கள் இருக்கின்றன.
உணவு உடை மருத்துவ வசதிகள் இன்றி இராணுவத்தினரின் கொடுமைகளைத் தாங்கிக்கொண்டு எத்தனை நாட்களுக்கு நாங்கள் இன்னும் உயிருடன் இருப்போமென்று எங்களுக்கே தெரியாது.
எனவே உலகில் உள்ள மனித நேயம் கொண்ட அமைப்புகளே மனித நேய ஆர்வலர்களே, எங்களின் இந்த பரிதாப நிலையைக் கருத்தில்கொண்டு எங்களின் உயிர் காக்க உதவுங்கள் போரினால் பாதிக்கப்பட்ட இலங்கைத் தமிழர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளுகின்ற எந்த நாடாவது எங்களையும் அகதிகளாக ஏற்றுக்கொண்டு அடைக்கலம் தாருங்கள் என தங்களை மன்றாடிக் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
உதவிகளை வழங்கக் கூடிய அமைப்புக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் விரைந்து இவர்களுக்கான உதவிகளை வழங்க முன் வரவேண்டுமென கோரிக்கை விடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக