ஞாயிறு, 5 பிப்ரவரி, 2012


உயிர் உறையும் சாகசம்! 


கராத்தேவில் பல சாகசங்கள் செய்யும் செந்தில்: கும்பகோணம் அருகே, மேலையூர் தான் என் பூர்வீக கிராமம். நகை செய்வது பரம்பரை தொழில். ஒன்பது வயதில் கராத்தே வகுப்பில் சேர்ந்தேன். 18 வயதில் முறையாக பிளாக் பெல்ட்; அதன்பின், மொத்தம் நான்கு முறை பிளாக் பெல்ட் பெற்றுள்ளேன். கடந்த, 2000ம் ஆண்டு முதல், கராத்தே பயிற்சி பள்ளி நடத்தி வருகிறேன். கராத்தேவில் புதுப்புது உத்திகளைப் புகுத்தி, "ஒன்லி ரியல் கராத்தே' என்ற புதிய பாணி கராத்தே கலையை, கடந்த ஐந்து ஆண்டுகளாகப் பயிற்சியளிக்கிறேன். தேசிய அளவில், பல போட்டிகளில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கங்கள், மாநில அளவில், 40 போட்டிகளுக்கு மேல் முதல் பரிசு, பல அமைப்புகள் கொடுத்த சாகச விருதுகள் என, பல சாதனைகள் செய்துவிட்டேன். நூதனமான பல முயற்சிகள் செய்து காட்ட முடிவு செய்த போது தான், தூக்கில் தொங்கும் சாகசம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. பத்தாண்டுகளாக கடும் பயிற்சி எடுத்து, கடந்தாண்டு செய்து காட்டினேன். பொதுவாகவே, தூக்கில் தொங்கினால், 20 வினாடிகளில் உடலின் உயிர்ப்பு அடங்கிவிடும். ஆனால், நான் ஒரு நிமிடம், 50 வினாடிகள் தொடர்ந்து தூக்கில் தொங்கினேன். அதன் பதிவுகளை, லிம்கா மற்றும் கின்னஸ் பதிவிற்கு அனுப்பியுள்ளேன். என் கராத்தே பள்ளியில், தினமும், 50 பேர் வந்து, பயிற்சி எடுக்கின்றனர். காலையில் கராத்தே கிளாஸ், மாலையில் நகை செய்யும் தொழில் என்று, வாழ்க்கை நகர்கிறது. தற்போது, என் எண்ணம் எல்லாம், 60 டன் எடை கொண்ட, விமானத்தைக் கயிற்றால் கட்டி இழுக்க வேண்டும் என்பது தான். இப்போது நான், அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டிருக்கிறேன்.

"புத்தக வாசிப்பால் கின்னசில் இடம் கிடைத்தது!'
  வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களை கடைசியிலிருந்து தலைகீழாகத் திருப்பிச் சொல்லும் சிரிஷ்: நான் மின் பொறியாளராக இருக்கிறேன். சமீபத்தில் சென்னை, ஐ.ஐ.டி., யில் நடந்த, "சாரங்' கலை விழாவில் பங்கேற்றேன். அதில், கொடுக்கப்பட்ட வார்த்தைகளில் உள்ள எழுத்துக்களை, கடைசியிலிருந்து தலைகீழாகத் திருப்பிச் சொன்னேன். இப்படி, 50 வார்த்தைகளிலுள்ள ஒவ்வொரு எழுத்துக்களையும் தலைகீழாகச் சொல்ல, நான் எடுத்துக் கொண்ட நேரம், 1 நிமிடம், 23 வினாடிகள் தான். இதற்காக நான் கின்னஸ் புத்தகத்திலும் இடம் பெற்றிருக்கிறேன். ஒரு வார்த்தையைக் கேட்டவுடன், அதைப் பற்றி காட்சிப்படுத்திப் பார்ப்பேன். பின், அதையே தலைகீழாகத் திருப்பிச் சொல்லிப் பார்ப்பேன். இதற்குக் காரணம், என்னிடம் உள்ள புத்தக வாசிப்பு பழக்கம் தான். ஷேக்ஸ்பியர் மற்றும் தாமல் ஹார்டியின் புத்தகங்கள் பலவற்றையும் நான் வாசித்துள்ளேன். அவர்களின் எழுத்தில், கடினமான வார்த்தைகளும், வாக்கியங்களும் இருக்கும். அந்த வார்த்தைகளை, நான் கற்றுக் கொள்கிறேன். என்னால், ஒரு வார்த்தையை தலைகீழாகத் திருப்பிச் சொல்ல முடியும் என்பதை அறிந்தவுடன், "ஸ்பெல்லிங்' போட்டிகளை நடத்தும், "இந்தியா ஸ்பெல் பீ' என்ற நிறுவனத்தில் சேர்ந்தேன். அதன் மூலம், சாரங் கலை விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் பங்கேற்ற முதல் நிகழ்ச்சி அது தான். வார்த்தைகளை சரியானபடி உச்சரிக்கவும், அதற்கான ஸ்பெல்லிங்கை தலைகீழாகச் சொல்லவும், பள்ளிக் குழந்தைகளுக்குப் பயிற்சியளிக்க வேண்டும். என் இந்த திறமை வளர, என் பெற்றோர் தான் உறுதுணையாக இருந்தனர். இது போன்ற போட்டிகளில் இளைய தலைமுறையினர் பங்கேற்று, அவர்களின் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக