புதன், 19 ஜனவரி, 2011

Thiruvalluvar day at Mauritius மொரீசியசில் திருவள்ளுவர் விழா

மொரீசியசில் திருவள்ளுவர் விழா

OLYMPUS DIGITAL CAMERA
மொரீசியசில் திருவள்ளுவர் விழா தை 2 ஆம் நாள் (16/01/2011) அன்று மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.முற்பகல் பதினோரு மணிக்குச் சுப்பிரமணிய பாரதியார் விரிவுரையரங்கில் திருவள்ளுவர் நாள் திரு.ஆர்.துவாரகா (ஆட்சிக்குழுத்தலைவர், மகாத்மா காந்தி கல்விநிறுவனம்) அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
 

மாண்புமிகு தகவல் தொடர்புத்துறை அமைச்சர்,தசராசன் பிள்ளை அவர்களின் சொற்பொழிவும் மாணவர்களின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றன.
சிறப்பு விருந்தினராகத் தமிழ்நாட்டிலிருந்து பேராசிரியர் இலக்குவனார் மறைமலை  அழைக்கப்பட்டிருந்தார்.
“திருக்குறளும் அதன் எதிர்காலவியல் நோக்கும்” என்னும் தலைப்பில் பேராசிரியர் மறைமலை சொற்பொழிவு நிகழ்த்தினார்.
தமிழ்த்துறைத்தலைவர் கேசவன் சொர்ணம் நன்றியுரை வழங்கினார்.தமிழ் விரிவுரையாளர் திருமதி மாணிக்கம் தொகுப்புரை வழங்கினார்.அரசுத் தலைமைக் கொறடா சுரேன் தயாள்,மோரீசியசு நாட்டுக்கான இந்தியத் தூதர் எம்.கணபதி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்தனர். விழாவுக்கு  மோரீசியசு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் மக்கள் திரளாக  திரண்டு வந்திருந்தனர்.
அதன்பின்னர் பிற்பகல் ஒருமணிக்கு மோரீசியசுத் தமிழ்க்கோவில்கள் கூட்டமைப்பு வளாகத்தில் அமைந்திருந்த திருவள்ளுவர் சிலைக்கு அமைச்சர்கள் தசராசன் பிள்ளை சிதம்பரம்,முகேசுவர் சூனீ, திருமதி லீலாதேவி தூக்குன், அரசுத்தலைமைக் கொறடா  சுரேன் தயாள், மோரீசியசு நாட்டுக்கான இந்தியத் தூதர் எம்.கணபதி ஆகியோரும்  பேராசிரியர் மறைமலையும் கூட்டமைப்புத் தலைவர் திரு.மேனன் மருதையும் ஏனைய தமிழர் அமைப்புகளின் தலைவர்களும் மாலை அணிவித்தனர்.
இங்கும் நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் பல்வேறு துறைகளைச் சார்ந்த பெருமக்கள் வந்திருந்து சிறப்பித்தனர்.
தைப்பூச விழாவையொட்டிப் பல்வேறு கோவில்களிலும் விரிவுரை நிகழ்த்த தமிழ்நாட்டிலிருந்து வந்திருந்த தவத்திரு ஊரன் அடிகள் அவர்களும் சைவசித்தாந்த அன்பர் திருக்கூட்ட அமைப்புத் தலைவர் பேராசிரியர் அருணாசலம் புட்பரதம் அவர்களும் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.
விழா நிகழ்ச்சிகள் வானொலி, தொலைக்காட்சித் துறையினர் மூலம் நாடெங்கும் ஒலிபரப்பபட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக