வியாழன், 20 ஜனவரி, 2011

human rights: மனித உரிமைகள் பிழைக்குமா?

மனித உரிமைகள் பிழைக்குமா?


1950-ம் ஆண்டு, அமெரிக்காவின் அலபாமா நகரில் பொதுப் பேருந்தில் வெள்ளையர்களும் கருப்பர்களும் ஒதுக்கப்பட்ட இடங்களில்தான் அமர்ந்து செல்லவேண்டும் என்பது விதி. ஆம், அந்தக் காலகட்டத்தில் பேருந்துகளில் கருப்பர்கள், வெள்ளையர்களோடு கலந்துசெல்ல முடியாது. கருப்பர்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்தான் அமரவேண்டும். இனப்பாகுபாடுகளின் உச்சகட்டம். ஆனால், ரோஸô பார்க்ஸ் என்ற பெண்மணி துணிந்து ஒரு முடிவுக்கு வந்தார்.1955-ம் ஆண்டு டிசம்பர் 1 அன்று வெள்ளையர்களுக்கான இருக்கையில் அமர்ந்தார். பஸ்ஸில் இருந்த வெள்ளையர்கள் அதிர்ந்தனர். அதில் செல்லமாட்டோம் என்று கீழே இறங்கினர். அந்தப் பெண்மணியின் துணிச்சல் தொடர்ந்தது. அவரது வைராக்கியம், பயந்து ஒதுங்கியிருந்த மற்ற கருப்பர்களுக்கு நாமும் குரல் கொடுக்க வேண்டும் என்ற துணிச்சல் பிறந்தது.  நல்லுள்ளம் படைத்த சில வெள்ளையர்களைச் சிந்திக்க வைத்தது. கேள்வி கேட்கத் துணிந்த  அந்தப் பெண்மணியின் செயலால் போராட்டம் வெடித்தது. கருப்பர்களது சமஉரிமைக்குரல் ஒலித்தது. "ரேஷியல் டிஸ்கிரிமினேஷன்' என்ற இனப் பாகுபாடு தடுப்புச் சட்டம் ஒழிக்கப்பட்டு ஆப்பிரிக்காவிலிருந்து அடிமைகளாக அமெரிக்காவுக்குக் கொண்டுவரப்பட்ட கருப்பர்களுக்கு சட்டப்படி சமஉரிமைகள் வழங்கப்பட்டன. உயிர் உடைமைகளுக்குப் பாதுகாப்பு, சுதந்திரம், சமத்துவம், கண்ணியம் போன்ற அடிப்படை மனித உரிமைகளுக்குப் பாதுகாப்பு தருவது அரசின் பொறுப்பு. வாழ்வாதாரம், உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இடம், சுகாதாரம், மருத்துவ வசதி, தரமான கல்வி இவையாவும் முக்கியமான உரிமைகளாகக் கருதப்பட்டு மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிக்கையில் கூறியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையம் இந்த ஆண்டு உரிமைகளை நிலைநாட்டப்  போராடும் மனித உரிமை ஆர்வலர்களைப் போற்றும்வகையில் அனுசரிக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளது.  பாகுபாடுபடுத்துதல், பிரித்துப்பார்த்தல், பகுத்துப்பிரித்தல் எல்லா சமுதாயத்தையும் பீடித்திருக்கக்கூடிய கொடிய நோய். நமது நாட்டிலோ எவ்வளவுதான் ஒழிக்க முயற்சித்தாலும் கிளர்ந்தெழும் நோய். ஒருவரது தரம் பொருட்டல்ல, இனம்தான் முக்கியம். திறமை, ஆளுமை, நேர்மை என்ற "மை'களுக்கல்ல வரவேற்பு.  ஜாதி, இனம், தோலின் நிறம், மனசாட்சியற்ற வளைந்து கொடுப்பதில் திறமை போன்றவைதான் வசியம்வைக்கும் மை. சிந்தனை, சொல், செயல் ஒன்றி இருப்பதில்லை. இந்த முரண்பாடுகளால்தான் வண்மைகள் அழிகின்றன. வன்மைகள் முளைக்கின்றன. 2005-ம் ஆண்டு தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. பெருவாரியாக மக்கள் வரவேற்பைப் பெற்றது. ஆனால், நடைமுறையில்தான் எவ்வளவு சிக்கல்கள். வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திலும் தகவல் பரிமாற்றப் புரட்சியிலும் ரகசியக் கோப்புகள் என்ற வரைமுறையை நடைமுறைப்படுத்த முடியாது என்பதை விக்கிலீக்ஸ் நிரூபித்துள்ளது. சர்வதேச அளவில் நிலவும் வெளிப்புறமான சம்பிரதாய உரையாடல்களின் போலித்தனத்தையும், இலைமறைவு காய் மறைவாகப் பரிமாறப்படும் ரகசியக் கணிப்புகளையும் வெளிச்சம் போட்டுக்காட்டியுள்ளது. விக்கிலீக்ஸ் பொறுப்பாளர் ஜுலியன் அசாஞ் லண்டனில் காவல் விசாரணையில் உள்ளார். இதனுடைய தாக்கம் நாளடைவில்தான் தெளிவாகும். வெளிப்படையான நிர்வாகமின்றித் தகவல்கள் மறைக்கப்பட்டு மறுக்கப்பட்டால் இத்தகைய தகவல் கசிவுகள் ஏற்படும் என்பது பொறுப்பில் உள்ளவர்கள் கற்க வேண்டிய பாடம்.  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கழகம் முன்நிறுத்தியுள்ள ஒரு முக்கிய மனித உரிமை பிரச்னை இனம், மதம், சிறுபான்மை, குலம், ஜாதி போன்ற பிரிவுகளின் அடிப்படையில் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி இழைக்கப்படும் கொடுமைகள். ஒவ்வொரு நாட்டிலும் அங்கு காலம்காலமாக வசித்து வரும் ஆதிஇனத்தவர் பல இன்னல்களுக்கு ஆளாகின்றனர். நாட்டின் முன்னேற்றத்தின் பயனளிப்பு அவர்களைச் சென்றடைவதில்லை. பெரிய அளவில் திட்டமிடும்போது ஆதிஇனத்தவர் பாதிக்கப்படுகின்றனர். அவர்களது வாழ்வாதாரம் குலைகிறது. அவர்களைச் சென்றடைய வேண்டிய ஈட்டுத்தொகை உரிய நேரத்தில் கிடைப்பதில்லை. அபகரிக்கப்பட்ட நிலம் அங்கு ஏற்படும் முன்னேற்றத்தால் விலை உயரும். அதன் பயன் அவர்களுக்கில்லை. வருங்கால விலைவாசி உயர்வுக்கான ஈடும் கொடுக்கப்படுவதில்லை. உலக அளவில் 370 மில்லியன், அதாவது 37 கோடி மக்கள் இவ்வாறு கொடுமைக்கு ஆளாகின்றனர். வறுமைக்கோட்டின் கீழ் நிரந்தரமாக வாழ்கின்றனர்.  வேலைதேடி நாடுவிட்டுப் போகும் மக்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டு வருகிறது.  உலக மக்கள்தொகையில் சுமார் 3 சதவிகிதம் அதாவது 20 கோடி மக்கள் தமது சொந்த நாட்டிலிருந்து பிரிந்து வேறுநாடுகளில் பணிபுரிகின்றனர். வேலை வாங்கிக் கொடுப்பதாக ஏமாற்றி மனிதர்களை வைத்து நடத்தப்படும் இழிவணிகம் மிகப்பெரிய மனித உரிமைப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. தத்தெடுத்த நாடுகளில் அடிப்படை வசதிகூட இல்லாத வாழ்க்கை. அதிக வேலைப்பளு, குறைந்த ஊதியம் என்று அவர்கள் அடிமைகளாக நடத்தப்படுவது வேதனைக்குரியது. அதிலும், இந்தியாவிலிருந்து வேலைதேடி அரபு நாடுகளுக்குச் சென்றவர்களில் தமிழர்கள் அதிகமாக அவதியுறுகிறார்கள் என்பது உண்மை. கேரள  மாநிலத்திலிருந்து சென்றவர்களிடம் காணப்படும் ஒற்றுமை, வரிந்து கட்டிக்கொண்டு விட்டுக்கொடுக்காது உதவும் உணர்வு தமிழர்களிடம் இல்லை என்று கூறப்படுகிறது. சந்தர்ப்பவசத்தால் சட்டத்தின் பிடியில் சிக்கியவர்களுக்கு உரிய சட்ட உதவியும் மனித நேய ஆறுதலும் கிடைப்பதில்லை. இவ்வாறு வெளிநாட்டுக்கு வேலை நிமித்தமாகக் குடிபெயர்பவர்களுக்குப் பாதுகாப்புக் கொடுப்பதற்கு அரசுத்துறை உள்ளது. அதில் உள்ள சிலர் ஊழல் குற்றச்சாட்டுக்கு சமீபத்தில் ஆளாகியிருக்கின்றனர் என்பது ஊழலின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டு.  எல்லா நாடுகளிலும் இனம், மொழி, மதம் அடிப்படையில் வேறுபட்ட சமூகத்தினர் உள்ளனர் என்பது உண்மை நிலை. இத்தகைய சிறுபான்மையினரின் நலன் பேணுவது அரசு மற்றும் சமுதாயத்தின் கடமை. சிறுபான்மையினரின் கலாசாரம் வேறுபடும். கடவுள் வழிபாட்டுமுறை தனித்திருக்கும். பேசும் மொழியில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால்,  அவர்களுக்கு வாழ்வாதாரம், பொருளாதாரம், அரசியலமைப்பின்பால் வழங்கப்பட வேண்டிய உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு மேலோங்கியுள்ளது பற்றி ஐக்கிய நாடுகள் சபை வருத்தம் தெரிவித்துள்ளது. 1992-ம் ஆண்டு மொழி, இனம், மதம் அடிப்படையில் சிறுபான்மையினருக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள் அடங்கிய பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றியது. முக்கியமாக சிறுபான்மையினரின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டியது அரசின் பொறுப்பு.  நமது நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலத்தில் பிகாரிலிருந்து வந்து பணி செய்யும் இந்தி பேசும் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். கொல்கத்தா நகரில் கொத்தடிமைகளாக கைவண்டி இழுத்து வயிற்றைக் கழுவும் ஒரிசா, ஜார்க்கண்ட், பிகார் மாநில பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவரின் வாழ்க்கை கொடுமையானது. சொந்த நாட்டிலேயே உரிமைகள் மறுக்கப்பட்டு, மறைக்கப்பட்டு அதைப்பற்றிய உணர்வுமின்றி ஜீவிக்கும் இத்தகைய சிறுபான்மையினரின் நிலை எப்போது சீராகும் என்பது கேள்விக்குறி.  உலக நாடுகளில் மாற்றுத் திறனாளிகளின் எண்ணிக்கை சுமார் 65 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. கஷ்ட ஜீவன அடிமட்டத்துக்கும் ஒரு கீழ்நிலை உண்டு என்றால் அதில் உழல்பவர் மாற்றுத் திறனாளிகள் என்றால் மிகையில்லை.  உலகில் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள் பலர். அவர்களில் இருபது சதவிகிதம் மாற்றுத் திறனாளிகள். வளர்ந்து வரும் நாடுகளில் 98 சதவிகித மாற்றுத் திறனாளிகளின் குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதில்லை. எழுதப்படிக்கத் தெரிந்த மாற்றுத் திறனாளிகள் மூன்று சதவிகிதம். அதிலும், பெண்கள் ஒரு சதவிகிதம்.  2008-ம் ஆண்டு மே மாதம் மாற்றுத் திறனாளிகளுக்கு அளிக்கப்பட வேண்டிய உரிமைகள், சலுகைகள் அடங்கிய பிரகடனம் ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அவர்களுக்கு  உரிமைகள் பெற்றுத் தருவதில் இந்தியா உள்பட பல நாடுகளில் முரண்பாடுகள் உள்ளன என்பதை மறுப்பதற்கில்லை. பணிபுரியும் இடத்தில் சகஊழியர்களே மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி புரிவதில்லை என்பது அவசர உலகில் மனிதநேய வறட்சியின் அடையாளம்.  பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான குற்றங்களைக் களைவேன் என்ற சூளுரை பல கேட்டிருக்கிறோம். வாயுரை நடைமுறைக்கு வருவதில்தான் எவ்வளவு சிக்கல்கள். உத்தரப் பிரதேசம் கான்பூர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவி திவ்யா பள்ளி நிர்வாகியின் மகனால் கற்பழிக்கப்பட்டு பின்பு உயிரிழந்தாள். உண்மையான குற்றவாளிக்குப் பதில் பக்கத்து வீட்டு நபர் கைது செய்யப்பட்ட நிலையில் பல போராட்டங்களுக்குப் பிறகு உண்மையான குற்றவாளி கைதானார். சமீபத்தில், அதே மாநிலத்தில் சீலு என்ற சிறுமி கற்பழிக்கப்பட்டாள். ஆனால், அந்தச் சிறுமி மீதே திருட்டு வழக்கு ஜோடிக்கப்பட்டு சிறையிலிடப்பட்டாள். மனித உரிமைகள் ஆர்வலர்கள், ஊடகங்களின் விழிப்புணர்வால் சந்தேகிக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார். நமது பின்தங்கிய நிலைமையை விளக்க நெஞ்சை உறையவைக்கும் இந்த இரண்டு உதாரணங்களே போதும். 2009, 10 ஆகிய இரண்டு ஆண்டுகளில் 12 மனித உரிமை ஆர்வலர்கள் நமது நாட்டில் சமூக விரோதிகள் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அவர்கள் செய்த ஒரே குற்றம் தகவல் ஆணையத்திடம் தகவல் அறியும் சட்டத்தின்கீழ் கேள்வி கேட்டது. அவர்கள் கேட்டது இடைஞ்சலான கேள்வி, ஆனால் நியாயமானது.  ஊழலைத் தட்டிக் கேட்டார்கள், அவ்வளவுதான். ஊழலால் அடிப்படை உரிமைகளான உயிர், உடைமை, கண்ணியம், சமத்துவம் பறிபோகின்றன. சமுதாய விழிப்புணர்வுதான் இதற்கு நிரந்தரத் தீர்வு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக