நல்ல கருத்து. மேலும் தலைவர்கள் பெயர்களை எடுப்பதாக முன்னரே தம் முந்தைய ஆட்சியில் அறிவித்துத் தலைவர்கள் பெயர்களுடன் சேர, சோழ,பாண்டிய,பல்லவர் பெயர்களையும் நீக்கியுள்ளார். எனவே, அரசியல் காரணங்களால் வட நாட்டார் பெயரைத் தமிழ்நாட்டு மருத்துவமனைக்குச் சூட்டத் தேவையில்லை.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
தஞ்சாவூர், ஜன. 18: சென்னை அரசுப் பொது தலைமை மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்டுவதற்கு தமிழ்தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக அந்தக் கட்சிப் பொதுச் செயலர் பெ. மணியரசன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு ராஜீவ் காந்தி பெயரைச் சூட்டவுள்ளதாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு. கருணாநிதி அறிவித்துள்ளது கண்டனத்துக்குறியது. இலங்கைக்கு ராஜீவ் காந்தியால் அனுப்பப்பட்ட இந்திய அமைதிப் படையினர் பெண்கள், குழந்தைகள் என 6,000-க்கும் அதிகமான ஈழத் தமிழர்களை கொன்று குவித்தனர். தமிழ்ப் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். வீடுகள் எரிக்கப்பட்டன. இவைகள் ஆதாரங்களுடன் பல நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து புறப்பட்டு சென்னை துறைமுகத்தில் வந்திறங்கிய இந்திய அமைதிப் படையினரை வரவேற்க மறுத்து, என் தமிழ்ச் சாதி மக்களை அழித்துவிட்டு வரும் ராணுவத்தை நான் வரவேற்கப் போகவில்லை என்று அப்போது சட்டப்பேரவையில் அறிவித்தார் முதல்வர் கருணாநிதி. ராஜீவ் காந்தியின் பாதையில் சோனியா காந்தியும் இலங்கை அரசுக்கு ராணுவ உதவி, நிதியுதவி, உலக அரங்கில் அரசியல் உதவி என அனைத்தும் அளித்து ஈழத் தமிழர்கள் லட்சக்கணக்கில் கொல்லப்படுவதற்கு துணை நின்றார். இலங்கைக் கடற்படையினர் தமிழக மீனவர்களைச் சுட்டுக் கொல்வதும், அடித்துக் கொல்வதும் தொடர்கிறது. இதற்கெல்லாம் பாராட்டுத் தெரிவிப்பது போல, ராஜீவ் காந்தி பெயரை வரலாற்றுச் சிறப்பு மிக்க சென்னை அரசுப் பொது மருத்துவமனைக்கு சூட்ட நினைப்பதை அரசு கைவிட வேண்டும். கூட்டணியில் நீடிப்பதாக காங்கிரஸ் உறுதி கொடுத்ததற்கு நன்றிக்கடன் செலுத்துவதாக இருந்தால், திமுக தனது அண்ணா அறிவாலயத்தின் ஒரு பகுதிக்கோ அல்லது தனது கட்சி சார்பில் நடத்தப்படும் வேறொரு நிறுவனத்துக்கோ ராஜீவ் பெயரை வைக்கலாம். அதைவிடுத்து, அரசு மருத்துவமனைக்கு ராஜீவ் பெயரை வைக்க நினைப்பது தமிழினத்துக்குச் செய்யும் துரோகம் என்றார் மணியரசன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக