பதவி தநததற்குக் கைம்மாறு செய்ய வேண்டாவா? செய்ந்நன்றி உணர்வைப் பாராட்டுவோம்! அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
வெளிப்படைத்தன்மை இல்லாத விசாரணை!
First Published : 21 Jan 2011 02:32:57 AM IST
சென்னை,ஜன.20: அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும் என்பதற்காகவே தகவல் அறியும் உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது. ஆனால், அந்தச் சட்டத்தின் அடிப்படையையே கேள்விக்குள்ளாக்கும் வகையில் மாநிலத் தலைமை தகவல் ஆணையர் கே.எஸ்.ஸ்ரீபதி புதன்கிழமை விசாரணை மேற்கொண்டுள்ளார்.சென்னை ஐ.ஐ.டி.யில் ரூ.300 கோடியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் ஆராய்ச்சி வளாகம் தொடர்பான தகவல்கள் கேட்டு மாநிலத் தகவல் ஆணையத்திடம் முரளிதரன் மேல்முறையீடு செய்துள்ளார்.சென்னை அண்ணாசாலையில் உள்ள மாநிலத் தகவல் ஆணையத்தில் இந்த மனு மீதான விசாரணை புதன்கிழமை பிற்பகல் மாநிலத் தலைமைத் தகவல் ஆணையர் கே.எஸ்.ஸ்ரீபதி அறையில் இந்த விசாரணை நடைபெற்றது.மனுதாரர் முரளிதரன், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் பொதுத் தகவல் அலுவலர் ஆகியோருடன் "தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்' நிருபர் கங்காதர் எஸ்.பாட்டீலும் உடன் சென்றுள்ளார்.அப்போது கே.எஸ்.ஸ்ரீபதி அவரிடம், "நீங்கள் யார்?' என்று கேட்டுள்ளார். பத்திரிகை நிருபர் என்று கங்காதர் பாட்டீல் தன்னை அறிமுகம் செய்துகொண்டார். மனுதாரர், பொதுத் தகவல் அலுவலர் ஆகியோரைத் தவிர வேறு யாரையும் மேல்முறையீட்டு விசாரணையின்போது அனுமதிக்க முடியாது என்று ஸ்ரீபதி தெரிவித்துள்ளார்.தகவல் உரிமை ஆணையத்தின் அனைத்து விசாரணைகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம், இங்கே என்ன ரகசியம் நடக்கிறது என்று கங்காதர் பாட்டீல் வினவியுள்ளார்.ரகசியம் எதுவுமில்லை என்று கூறிய ஸ்ரீபதி, ஆனால், விசாரணையின்போது உங்களை அனுமதிக்க முடியாது என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக, விதிகள் ஏதேனும் உள்ளதா என்று கேட்டதற்கு, உங்களுடன் விவாதிக்க விரும்பவில்லை. நீங்கள் வெளியேற வேண்டும் என்று கூறியுள்ளார் ஸ்ரீபதி.அனைவரும் பங்கேற்கலாம்: இந்த சம்பவம் தொடர்பாக மத்தியத் தலைமைத் தகவல் ஆணையர் சைலேஷ் காந்தியிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, "தகவல் ஆணையத்தின் அனைத்து விசாரணைகளிலும் பொதுமக்கள் பங்கேற்கலாம். விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தினால் ஒழிய, அங்கிருந்து யாரையும் வெளியேற்ற முடியாது' என்றார்.தகவல் ஆணையத்துக்கு வரும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பதற்கு தனியாக அரங்கம் இருந்தும் இந்த மனுவைத் தனது அறையிலேயே ஸ்ரீபதி விசாரித்துள்ளார்.அவரது நியமனத்தின்போது, தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் பலரும் ஆணையத்தின் வெளிப்படைத்தன்மை பாதிக்கப்படும் என்று எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. தகவலறியும் உரிமைச் சட்டத்தின்படி, தகவல் கோரும் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பது தொடர்பான விதிமுறைகளை பல மாநிலங்கள் வகுத்துள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் இந்த விதிமுறைகள் இதுவரை வகுக்கப்படவில்லை. இதைச் சாதகமாக வைத்துக்கொண்டு, பல சந்தர்ப்பங்களில் தகவல் கோரும் மனுதாரரே இல்லாமல் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிப்பது, வெளிப்படைத்தன்மை இல்லாத அணுகுமுறை என பல்வேறு நடவடிக்கைகள் நடப்பதாக தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் வேதனையோடு தெரிவிக்கின்றனர்.ஒவ்வொரு குடிமகனுக்கும், அரசு நிர்வாகம் எப்படி நடக்கிறது என்பது தெரிய வேண்டும் என்றும், அந்தத் தகவல்களே ஊழலுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்பதும் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியபோது அரசு தெரிவித்தவை.ஆனால், தகவல் ஆணையர்களே வெளிப்படைத்தன்மை இல்லாமல் விசாரணை நடத்துவது அந்த ஆயுதத்தைப் பறிப்பதுபோல் ஆகாதா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக