தகுதியுள்ள நூலகர்களை அமர்த்த வேண்டும் என்றால் முன்னரே அமர்த்தப்பட்ட நூலகர்களை என்ன செய்வது? எனவே, நூலகர்களிடமும் படிக்கும் ஆர்வத்தைத் தூண்ட வேண்டும். அதற்காகப் பணிநேரத்தில் வெட்டிக் கதைகளைப்படிப்பவர்களாக இருக்கக்கூடாது.
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்
சென்னை, ஜன. 16: ""தமிழ்ப் படைப்புகளுக்கு இன்றும் உலகளாவிய அங்கீகாரம் கிடைக்காமல் இருப்பது வேதனை அளிக்கிறது'' என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன். சென்னைப் புத்தகக் காட்சியையொட்டி, தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் சார்பில், புத்தகக் காட்சி வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உரை அரங்கில் "நோக்கும் திசையெல்லாம்' என்ற தலைப்பில் அவர் பேசியது: தமிழகத்தில் நூலகங்களைப் பயன்படுத்தும் நல்ல வழக்கம் குக்கிராமங்களிலும்கூட இன்றளவும் தொடர்கிறது. அரசும் ஒவ்வோர் ஊராட்சியிலும் நூலகங்கள் இருப்பதை உறுதிசெய்யும் வகையில், நூலகங்களை அமைத்துவருகிறது. அந்த நூலகங்களுக்கு நல்ல படைப்புகள் வாங்கப்படுகிறதா என்பதில் எனக்குக் கருத்து வேறுபாடு உண்டு. இருந்தாலும் ஒவ்வொரு கிராமத்திலும் குறைந்தது பத்து இளைஞர்களாவது நூலகர்களையும் வாசக சாலைகளையும் பயன்படுத்துகிறார்கள். ஆனால், நம்முடைய நூலகங்களில் - குறிப்பாக கிராமப்புற நூலகங்களில் பணியமர்த்தப்படும் நூலகர்களின் திறன் எப்படி இருக்கிறது? இன்றைய கால சூழலுக்கும் பெருகிவரும் புத்தகங்களுக்கும் ஈடுகொடுக்கும் வகையில் அவர்கள் பயிற்சி பெற்றவர்களாக இருக்கிறார்களா என்றால் இல்லை. நூலகர் பணி என்பது வெறுமனே புத்தகங்களை எடுத்துக்கொடுக்கும் பணி அல்ல; அது புத்தகங்களுடன் வாசகர்கள் உறவாட உதவும் ஒரு கலை. எத்தனை எத்தனைத் துறைகள், எத்தனை எத்தனைப் படைப்பாளர்கள், எத்தனை எத்தனைப் புத்தகங்கள் வெளியாகின்றன? இவற்றைப் பற்றியெல்லாம் ஆழ்ந்த அறிவு இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் அடிப்படை அறிவாவது நூலகர்களுக்கு அளிக்கப்பட வேண்டாமா? ஆகையால், நூலகங்களை அமைப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்த நூலகங்கள்தோறும் தகுதி பெற்ற நூலகர்கள் அரசால் பணியமர்த்தப்பட வேண்டும். அடுத்து, இப்படிப்பட்ட புத்தகக் காட்சிகளைப் பார்க்கும்போது, மகாகவி பாரதி கண்ட கனவு நினைவுக்கு வருகிறது. பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்றார் பாரதி. உலகின் தலைசிறந்த படைப்புகள் எல்லாமே தமிழில் இப்போது மொழிபெயர்க்கப்படுகின்றன. இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழில் இயற்றல் வேண்டும் என்பது பாரதியின் இன்னொரு கனவு. வெளிநாடுகளுக்கு இணையாக எல்லா துறைகள் சார்ந்தும் நம் மொழியிலும் ஏராளமான நூல்கள் வெளிவருகின்றன; ஏராளமான படைப்பாளிகள் உருவாகிவருகிறார்கள். ஆனால், பாரதி கண்ட இன்னொரு கனவு திறமான புலமையெனில் அதை அயல்நாட்டார் வணக்கம் செய்தல் வேண்டும் என்பது. அந்தக் கனவு மட்டும் நிறைவேறவில்லை. இதுவரை எந்தவொரு தமிழ்ப் படைப்புக்கும் உலகளாவிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே, ஏன்? நமது படைப்புகள் தரமற்றவையா? நமது படைப்பாளிகள் திறமையற்றவர்களா? இன்று தமிழன் உலகின் எல்லா மூலையிலும் பரவிக் கிடக்கிறான். ஆனால் தமிழ் எழுத்தாளன் உலக அரங்கில் முறையான அறிமுகம் கிடைக்காமல் தவிக்கிறான். இதற்குக் காரணம் நாம் உலக எழுத்தாளர்களுடன் உறவு கொள்ளவும் அவர்கள் நமது எழுத்துக்கள் பற்றி தெரிந்து கொள்ளவும் வழியில்லாமல் இருப்பதுதான். இதற்கான முயற்சிகளை முன்னெடுக்கும் வகையில், இதுபோன்ற பெரிய அளவிலான புத்தகக் காட்சிகளின்போது வெளிநாடுகளைச் சேர்ந்த, வெளிமாநிலங்களைச் சேர்ந்த படைப்பாளிகளை நாம் இங்கு அழைக்க வேண்டும். நம்முடைய படைப்பாளிகள் அவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொள்ளவும் கலந்துரையாடவும் நம் படைப்பாளிகளைப் பற்றி அவர்கள் தெரிந்துகொள்ளவும் அது உதவும். நம் படைப்பாளிகளின் பெருமை நம்மைத் தாண்டிச் செல்லவும் அவர்கள் உலகளாவிய அங்கீகாரம் பெறவும் இது உதவும். மொழி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டங்கள்தோறும் இலக்கியச் சந்திப்புகள், விவாதங்கள், புத்தகம் தொடர்பான நிகழ்வுகளை நடத்தத் தக்க அரங்குகள் அமைக்கப்பட வேண்டும். அங்கே இலக்கிய நிகழ்ச்சிகளை குறைந்த கட்டணத்தில் நடத்த வழிவகை செய்ய வேண்டும். தமிழக அரசின் "எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' முழக்கம் உறுதிசெய்யப்பட புத்தகங்கள் சார்ந்த இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை''. சென்னைப் புத்தகக் காட்சிக்கு என்று நிரந்தரமான ஓர் இடத்தை அரசு ஒதுக்க வேண்டும்; தென்னிந்திய புத்தக விற்பனையாளர், பதிப்பாளர் சங்கம் இதற்கான முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். உரை அரங்குக்கு, மூத்த பதிப்பாளர் அருணோதயம் அருணன் தலைமை வகித்தார். பேச்சாளர் பாரதி பாஸ்கர், நூலகர் எம். முத்துசாமி ஆகியோர் பேசினர். முன்னதாக, பதிப்பாளர் மீனாட்சி சோமசுந்தரம் வரவேற்றார். நிறைவில், சுப. மெய்யப்பன் நன்றி கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக