சென்னை, ஆக.17: தமிழகத்தில் சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறைகளுக்கு என தனி பல்கலைக்கழகம் அமைக்க அரசு முயற்சி எடுக்க வேண்டும் என்று மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் பி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் வலியுறுத்தினார். ஆயுர்வேத மருத்துவம், சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பாடத் திட்டத்திலிருந்து அலோபதி மருத்துவப் பகுதிகளை, தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் நீக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ÷இதைத் தொடர்ந்து சித்த மருத்துவ நிபுணர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் கூறியதாவது:- ""ஆயுர்வேதம், சித்த மருத்துவம், ஹோமியோபதி, யுனானி உள்பட அனைத்து இந்திய மருத்துவ முறைகளுக்கும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் பொதுவானது. மேலும், இந்திய மருத்துவ முறை பட்டப்படிப்புக் கல்வியில், அலோபதி மருத்துவ பாடப் பகுதிகள் கற்பிக்கப்படுவது கடந்த 35 ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. மேலும், தமிழகத்தில் உள்ள இந்திய மருத்துவ முறை கல்லூரிகள் அனைத்தும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்திய மருத்துவ முறை படிப்புகளின் பாடத் திட்டத்தை முடிவு செய்யும் அதிகாரம், இந்திய மருத்துவ முறை பாடத் திட்டக் குழுவுக்கு மட்டுமே உண்டு. இந்த நிலையில் அலோபதி மருத்துவ முறை-இந்திய மருத்துவ முறை என இரண்டுக்கும் பொதுவான நிலைப்பாட்டில் செயல்பட வேண்டிய தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் மயில்வாகனன் நடராஜன், அலோபதி மருத்துவத்துக்கு மட்டும் சார்பாகச் செயல்படுவது வேதனை அளிக்கிறது. ÷ஆயுர்வேதம், சித்த மருத்துவத்துக்கு உலக அளவில் அங்கீகாரம் உள்ளது. எனவே ஆயுர்வேதம், சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறையை பொது மக்களிடையே மேலும் பரப்ப அவற்றுக்கு என தனி பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும்'' என்றார் டாக்டர் ஜெயப்பிரகாஷ் நாராயணன்.யுனானி நிபுணர் கருத்து: ""1970-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய மருத்துவ முறைக்கான மத்தியக் கவுன்சிலின் சட்டப்படி, ஆயுர்வேதா-சித்தா-யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பாடத் திட்டத்தை மாற்றும் அதிகாரம் எந்த பல்கலைக்கழகத்துக்கும் கிடையாது. இந்திய மருத்துவ முறை மருத்துவர்கள் அலோபதி மருத்துவ முறையைப் பயன்படுத்தலாம் என்று 30.10.1995 அன்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்திய மருத்துவ முறைக்கான மத்திய கவுன்சிலின் சட்டம், விதிகளின்படி கௌரவம் மிக்க தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகம் செயல்படும் என நம்புகிறேன்'' என்று இந்திய மருத்துவ முறைக்கான மத்திய கவுன்சிலின் துணைத் தலைவர் (யுனானி) டாக்டர் ஹகீம் சையது கலீஃபத்துல்லா கூறியுள்ளார்.
கருத்துக்கள்


By Ilakkuvanar Thiruvalluvan
8/18/2010 1:06:00 PM
8/18/2010 1:06:00 PM


By K.Sugavanam
8/18/2010 6:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *8/18/2010 6:42:00 AM