சென்னை, ஆக.19: மருத்துவ பொது நுழைவுத் தேர்வு நடத்தும் முடிவை நிறுத்தி வைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளதாகத் தெரிகிறது. இவ்வாறு முடிவை நிறுத்திவைப்பதற்கு முன்னோட்டமாக, மருத்துவ பொது நுழைவுத் தேர்வு வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய அறிவிக்கை வெளியிடுவதை மத்திய அரசு வியாழக்கிழமை நிறுத்தி வைத்துள்ளது.உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு: மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் அடுத்த கல்வி ஆண்டு (2011-12) முதல் மாணவர்கள் சேர, அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு எழுதும் நடைமுறையை இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்தது. மத்திய அரசின் பொது நுழைவுத் தேர்வு முடிவை எதிர்த்து மகாராஷ்டிர மாநில சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே வழக்கு தொடர்ந்துள்ளன. இந்த வழக்கு விசாரணையில் உள்ளது. இந்த நிலையில் கிராமப்புற மாணவர்கள் மற்றும் இட ஒதுக்கீட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொது நுழைவுத் தேர்வு முறை கூடாது என வலியுறுத்தி பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத் ஆகியோருக்கு முதல்வர் கருணாநிதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கடிதம் எழுதினார். இதைத் தொடர்ந்து நுழைவுத் தேர்வுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கெனவே உள்ள வழக்கில் தங்களையும் வாதியாக இணைத்துக் கொள்ளுமாறு, தமிழக அரசு புதன்கிழமை, மனு தாக்கல் செய்துள்ளது. இந்த வழக்கு வரும் செப்டம்பர் 10-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.மாநிலங்களவையில்... மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க நாடு முழுவதும் பொது நுழைவுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்தக் கூடாது என்று தி.மு.க. உறுப்பினர் சிவா, அதிமுக உறுப்பினர் பால் மனோஜ் பாண்டியன் ஆகியோர் மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தில் பொறியியல்-மருத்துவம் உள்ளிட்ட தொழில் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அகில இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு முறையை அறிமுகப்படுத்துவது கிராமப்புற மாணவர்களை பெரிதும் பாதிக்கும். இவ்வாறு பொது நுழைவுத் தேர்வை மீண்டும் அறிமுகப்படுத்துவது என்பது, மாநிலங்களின் உரிமையில் தலையிடும் செயலாகும் என்று அவர்கள் கூறினர்.மக்களவையில்...பொது நுழைவுத் தேர்வு பிரச்னையை மக்களவையில் அதிமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் மு.தம்பிதுரை எழுப்பினார். தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு கடைப்பிடிக்கப்படும் நிலையில், மருத்துவப் படிப்பில் மாணவர்களைச் சேர்க்க பொது நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்துவதை ஏற்க முடியாது என்றார் தம்பிதுரை.
கருத்துக்கள்

வாழ்க தமிழினம்!வெல்க தமிழர் தாயகம்! உலகத் தமிழர் உரிமையுடன் உயர்க!
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
8/20/2010 4:21:00 AM
8/20/2010 4:21:00 AM


By gopu
8/20/2010 2:50:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் 8/20/2010 2:50:00 AM