திங்கள், 16 ஆகஸ்ட், 2010

நம் உடலைத்தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து காக்கும் அருமருந்தாக திகழ்கிறது கொய்யாப்பழம். பச்சைப்பசேலென்ற நிறத்திலும், ஒருசில வகைகள் மஞ்சள் நிறத்திலும் உள்ளன.

வெப்பம் மிகுந்த நிலங்களில் விளையும் கொய்யப்பழங்கள் ருசியில் முதல் இடத்தை பிடிக்கின்றன.
 
கொய்யாவின் பிறப்பிடம் அமெரிக்கா. இதில் 100-க்கும் மேற்பட்ட வகைகள் இருப்பது விசேஷம். வெப்பம் மிகுந்த நாடுகளில் தற்போது அதிக அளவில் விளைவிக்கப்படுகிறது.
 
தற்போது கொய்யாப்பழ சீசன் என்பதால் அதிக அளவில் கொய்யாப்பழம் வந்து குவிந்துள்ளன.
 
கொய்யாப்பழத்தின் மருத்துவ குணங்கள் பற்றி சென்னை அரும்பாக்கம் ரத்னா சித்த மருத்துவ மனையின் இயக்குனர் டாக்டர் திருத்தணிகாசலம் கூறியதாவது:-
 
மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கிறது கொய்யாப் பழம். சிலருக்கு தொடர்ச்சியாக தலைவலி பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்டவர்களின் ரத்தத்தில் உள்ள ஒருசில குறைபாடுகளால் தலைவலி ஏற்படும். இந்த வலியை நிரந்தரமாக தீர்த்து விடுகிறது கொய்யாப்பழம்.
 
இப்பழம் ரத்தத்தை சுத்திகரித்து தலைவலிக்கான மூலகாரணத்தை சரிசெய்து விடுகிறது. இதனால் தீராத தலைவலியால் அவதிப்படுவோர் கொய்யாப்பழத்தை நிறைய சாப்பிடலாம்.
 
 நீரிழிவு நோயை கட்டுப்படுத்துவதில் கொய்யாவுக்கு முக்கியபங்கு உண்டு. நீரிழிவு நோயாளிகள் இப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு பெருமளவில் குறைந்து விடும்.
 
கொய்யாப்பழம் ரத்தத்தை நன்றாக சுத்திகரிப்பதால் இதய நோய் பெருமளவில் குறையும். இந்நோய் வராமலும் தடுத்து விடும். குடல் நோய்களான ஜீரண கோளாறு, பேதி போன்ற வற்றை குணப்படுத்தும்.
 
கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய் களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா கொழுந்து மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலை கட்டுப்படுத்தும்.
 
கொய்யாவில் வைட்டமின் ஏ, சி சத்துக்கள் அதிகம் உள்ளன. இந்த வைட்டமின் குறைபாடு உள்ளவர்கள் தினமும் கொய்யாப்பழம் சாப்பிடுவது மிகவும் நல்லது.
 
கொய்யாவில் சிறிதளவு கொழுப்பு, புரோட்டின் உள்ளன. உடலில் ஏற்படும் காயங்களுக்கு இதன் இலையை அரைத்து போட்டால் காயம் குணமாகும். கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் பெரிதும் உதவுகின்றன.
 
கொய்யா இலைகளில் இருந்து தயாரிக்கப்படும் கஷாயம் குழந்தைகளுக்கு வரும் மாந்தம், இழுப்பு, காக்காய்வலிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு கொடுக் கப்படுகிறது.
 
கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
 
மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
 
கல்லீரல், மண்ணீரல் போன்றவற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது. புகை பழக்கம் உடைய வர்களின் நுரையீரல் கடுமையாக பாதிக்கப் பட்டிருக்கும். இப்படிப்பட்டவர்கள் கொய்யா சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.
 
ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யா சீராக்குகிறது. அனைத்து நோய்களையும் இது தீர்ப்பதால் மேற்கத்திய நாடுகளில் “டாக்டர் கொய்யா” என்று அழைக்கிறார்கள்.
 
இவ்வாறு டாக்டர் திருத்தணிகாசலம் கூறினார். கோயம்பேடு மார்க்கெட்டில் குவியும் கொய்யாப்பழங்கள் கொய்யாப்பழ சீசன் தொடங்கி விட்டதால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொய்யாப்பழ வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 100 டன்¢ கொய்யாப்பழங்கள் கர்நாடகம் மற்றும் விழுப்புரம், திருப்பத்தூர் பகுதிகளில் இருந்து வருகிறது.
 
இவற்றில் கர்நாடக கொய்யா பழங்கள் முதல் தரமாக கருதப்படுகிறது. இவை கிலோ ரூ.15-க்கு விற்கப்படுகிறது. விழுப்புரம், திருப்பத்தூர் பகுதிகளை சேர்ந்த கொய்யாப்பழங்கள் கிலோ ரூ.10-க்கு விற்கப்படுகிறது. இதில் பெரிதாக இருக்கும் பழங்கள் ரூ.11-க்கு விற்கப்படுகிறது.
 
இப்பழங்களை வாங்க மக்கள் மிகவும் ஆர்வம் காட்டுகிறார்கள். இப்பழத்தின் வரத்து அதிகரிப்பால் மற்ற பழங்களின் விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக கோயம்பேடு வணிக வளாக வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக