வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

திறந்தநிலை' பல்கலைக்கழக பட்டம் செல்லாது: தமிழக அரசு உத்தரவு


சென்னை, ஆக. 19: திறந்தநிலை பல்கலைக்கழக பட்டச் சிக்கலுக்கு தமிழக அரசு முடிவு தீர்வு கண்டுள்ளது. பள்ளிப் படிப்பை முடிக்காமல் நேரடியாக பெறும் பட்டங்கள் அரசுப் பணிக்கு செல்லாது என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.பள்ளிப் படிப்பு அதாவது பத்தாம் வகுப்பு, பிளஸ் டூ படிக்காமலேயே திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டங்கள் பெறும் முறை உள்ளது. 8-ம் வகுப்பு வரை படித்தவர்கள் கூட திறந்த நிலை பல்கலைக்கழகங்களில் படித்து எம்.ஏ., வரை பட்டம் பெறலாம்.10-ம் வகுப்பு வரை கூட எட்டாதவர்கள் அரசுப் பணிகளில் தேர்வெழுதி தேர்ச்சி பெற்று விடுகின்றனர். பணியில் சேர்ந்ததும் திறந்த நிலை பல்கலைக்கழகங்கள் மூலம் பட்டம் பெற்று பதவி உயர்வுக்கு முயற்சிக்கின்றனர். இந்த நிலையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், "பள்ளிப் படிப்பை முடிக்காமல் திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் படித்தவர்களை அரசுப் பணிக்கு எடுக்கக் கூடாது' எனக் கூறியது.இந்தப் பிரச்னை உச்ச நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிரொலித்தது.தமிழக அரசின் நிலை என்ன? உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து தமிழகத்தில் உள்ள அரசுத் துறைகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், தமிழக அரசு இந்தப் பிரச்னையில் எந்தக் கருத்தையும் தெரிவிக்காமல் இருந்தது.இதனிடையே, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. படித்தவரை பிளஸ் டூ படிப்புக்கு இணையாகக் கருதலாமா என பி.எஸ்.என்.எல். நிறுவனம் தமிழக அரசிடம் ஒரு கருத்தைக் கேட்டது. அப்படிக் கருத முடியாது என தமிழக அரசு தெரிவித்தது. இந்தப் பிரச்னையில் மட்டுமே அரசு தனது நிலையைத் தெரிவித்தது என்றும், ஒட்டு மொத்தமாக திறந்தநிலை பல்கலைக்கழகப் பிரச்னையில் அரசு தனது நிலைப்பாட்டை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை என்று தலைமைச் செயலக அதிகாரிகள் சிலர் அப்போது தெரிவித்தனர்.அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கடிதம்: திறந்தநிலைப் பல்கலைக்கழக பட்டங்களை தமிழக அரசு ஏற்கிறதா, இல்லையா என்ற குழப்பங்கள் தொடர்ந்து வந்தன. இந்தச் சூழலில், அண்மையில் செய்தியாளர்களைச் சந்தித்த உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, "திறந்தநிலை பல்கலைக்கழகங்களில் பெறும் பட்டம் அறிவை வளர்ப்பதற்கு மட்டும்தான்' எனத் தெரிவித்திருந்தார்.இது ஒருபுறமிக்க, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் குழுக் கூட்டம் கடந்த ஆண்டு நடைபெற்றது. பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்கள் எந்தெந்தப் பட்டங்களுக்கு இணையானது என்பதை முடிவு செய்யவதற்காகக் கூட்டப்பட்ட கூட்டமாகும் அது.இந்தக் கூட்டத்தில்,இளங்கலைப் பட்டங்களைப் படிக்காமல், திறந்தநிலை பல்கலைக்கழங்கள் மூலம் நேரடியாக எம்.ஏ. போன்ற முதுகலைப் பட்டங்களைப் படித்தால் அதை அரசுப் பணிகளுக்கு ஏற்றுக் கொள்ளக் கூடாது என முடிவு செய்யப்பட்டது.அரசின் நிலை அறிவிப்பு: இந்தக் கருத்துருவை தமிழக அரசுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அனுப்பி வைத்தது. இதை தீவிரமாக ஆராய்ந்த அரசு, பணியாளர் தேர்வாணையத்தின் கருத்தை ஏற்பதாக அறிவித்துள்ளது. இதற்கான அரசு உத்தரவும் வெளியிடப்பட்டுள்ளது. பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைச் செயலாளர் கே.என்.வெங்கடரமணன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். 175 பேருக்கு பணி கிடையாது...அரசின் உத்தரவால், குரூப் 2 தேர்வில் வெற்றிபெற்ற 175 பேருக்கு பணி கிடைக்காது. அவர்கள் அனைவரும் காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டு இருந்தனர். அரசின் உத்தரவு வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து அவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இதனிடையே, திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற தலைமைச் செயலக ஊழியர்களில் சிலர் வியாழக்கிழமை மாலை கூடி ஆலோசனை நடத்தினர். அடுத்த வாரத்தில் முதல்வர் கருணாநிதியை நேரில் சந்தித்து முறையிட அவர்கள் முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
கருத்துக்கள்

அறிவுப் பெருக்கத்திற்காகப் படிக்க வேண்டும் என எண்ணுபவர்களைவிடப் பணி வாய்ப்பிற்காகப் படிப்பவர்கள்தாம் மிகுதி. இளங்கலை படித்த பின்பு பொதுநிலைப் பல்கலைக்ழகத்தில் முதுகலைப் பட்டம் பெறுவோரும் உள்ளனர். எனவே, அவற்றின் கல்வித்தகுதி சரியில்லை என எண்ணினால் செம்மையுறச் செய்ய வேண்டியதுதான் அரசின் கடமை.மாறாகத் தகுதியில்லை என்று அறிவிப்பது மடமை. இல்லையேல் உடனடியாகப் பொதுநிலைப் பல்கலைக்கழகங்களை மூடிவிட வேண்டும். பொதுநிலைப் பல்கலைக்கழகங்கள் வாயிலாக முறையாகப்படித்தவர்களுக்கு இச்சட்டம் பொருந்தாது ; ஊடகங்கள் தவறாகச் செய்தி வெளியிடுகின்றன. இது குறித்தும் விளக்க வேண்டும்.உரியவாறு கல்விமுறையைச் செப்பம் செய்து உயர்நீதிமன்றத்தில் மறு முறையீடு செய்து தக்க ஆணை பெற வேண்டும். 
அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்.
By Ilakkuvanar Thiruvalluvan
8/20/2010 4:45:00 AM
1.GRADUATION IS NOT AN IMPORTANT AND AS LONG AS THE PERSON IS SKILLED TO DO THE JOB(IT CAN BE A STUPID CLERICAL OR ANYTHING)HE SHOULD BE EMPLOYED 2.EVEN IF THE PERSON IS QUALIFIED BY A RECOGNISED UNIVERSITY AFTER THE DUE PROCESS OF EDUCATION AND AFTER GOING THROUGH ALL 10TH,12 CLASSES, STILL HE IS A FOOL/IDIOT AND INCAPABLE OF APPLYING HIS MIND AND DOING A JOB AT A DECENT EXPECTED LEVEL, HE SHOULD BE FIRED OUT
By ramakrishna paramahimsai
8/20/2010 4:31:00 AM
அப்புறம் எதற்காக திறந்தவெளிப் பல்கலைக் கழகங்களை நடத்த வேண்டும்? பல்கலைக் கழகங்கள் பணம் சம்பாதிக்க மட்டுமா? இவற்றின் தரம் குறைவு என்றால், இவற்றின் தரத்தை உயர்த்த வழி செய்ய வேண்டும், இல்லையென்றால் இவற்றை மூட வேண்டும். மதுரைக்காரன்.
By மதுரைக்காரன்
8/20/2010 2:51:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக