திமுகவினர் பேட்டி தர கருணாநிதி கட்டுப்பாடு
First Published : 16 Apr 2010 12:27:08 AM IST
சென்னை, ஏப்.15: தி.மு.க. தொடர்பான செய்திகளை என்னையும், பொதுச் செயலாளர் அன்பழகனையும் தவிர, வேறு யாரும் வெளியிடக் கூடாது என்று அக் கட்சியின் தலைவரும் முதல்வருமான கருணாநிதி கட்டுப்பாடு விதித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை:பத்திரிகை செய்திகள் மூலம் தேவையற்ற குழப்பங்கள் ஏற்படுத்தப்படுவது எப்போதும் நடக்கிறது. சட்டப்பேரவை பொதுத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலமே உள்ள நிலையில், பத்திரிகைகளில் பல்வேறு விதமான செய்திகள் வரும். எனவே, எல்லா கட்சிகளுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குறிப்பாக தி.மு.க.வினரைப் பொருத்த வரையில், இதில் தனி கவனம் செலுத்தி கட்சியையும், தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு மிகுந்த உள்ளவர்களாக உள்ளோம்.அண்மைக் காலமாக, தி.மு.க. வளர்ச்சியில் தேக்க நிலையை ஏற்படுத்த பல முயற்சிகள் நடைபெறுகின்றன. அந்த முயற்சிகள் என்னையும், தி.மு.க.வையும் நிலைகுலையச் செய்து விடும் என யாராவது எதிர்பார்த்தால், அவர்கள் இந்த கட்சி நடந்து வந்த பாதையை அறியாதவர்களாகவும், அறிந்திருந்தாலும் அதை மறந்தவர்களாகவும்தான் இருப்பார்கள்.எத்தனையோ துரோகங்களை கடந்து, திராவிடத் தமிழ் மக்களின் அணையா விளக்காக, ஒளிமிகுந்த சுடராக இந்த இயக்கம் விளங்குகிறது என்ற பெருமிதத்தோடுதான், நானும், அன்பழகனும் இந்த இயக்கத்தை வழிநடத்திக் கொண்டிருக்கிறோம்.அதற்கு நாங்கள் பின்பற்றும் வழி, பெரியார் வழியும், அண்ணா வழியும் இணைந்த இன ஒற்றுமை எனும் இணையற்ற வழியாகும். அந்த வழியே வந்த நம் ஒற்றுமைக்கு உலை வைத்திடவும், ஓங்கி வளரும் நம் புகழைச் சிதைத்திடவும் சிலர் காத்திருப்பர் என்பது நாம் அறியாதது அல்ல.சில செய்தியாளர்களால் உருவாக்கப்படும் பிரச்னைகளை மறந்துவிட்டு, எனது வேண்டுகோளில் கட்சியினர் கவனம் செலுத்த வேண்டும்.மத்திய, மாநில ஆட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பதவியில் இருப்பவர்கள், அந்த பொறுப்பு தொடர்பான விஷயங்கள் குறித்து மட்டுமே செய்தியாளர்களை சந்திக்க வேண்டும்.கட்சியின் செயல்பாடுகள், பிற கட்சிகளுடன் உறவுகள், கட்சி பொதுக்குழு, செயற்குழு முடிவுகள் போன்றவை பற்றி செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பினை நானும், அன்பழகனும் மட்டுமே பெற்றிருக்கிறோம் என்பதை அழுத்தந் திருத்தமாகக் கூறுகிறேன்.எனவே, கட்சி அமைப்புகள் இருக்கும்போது, யாராவது அதை மீறி செய்தியாளர்களை சந்தித்தால், அது ஏற்புடையது அல்ல. கட்சி தொடர்பான செய்திகளை கட்சியின் தலைமைதான் வெளியிட வேண்டும். அப்படி வெளியிடப்படும் கருத்துகளை செயல்படுத்துவது மட்டும்தான் தங்கள் பணி என்பதை எண்ணி, கட்சியினர் தொண்டாற்றிட வேண்டும் என்று கருணாநிதி தெரிவித்துள்ளார். அண்மையில் வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்ட மத்திய அமைச்சர் மு.க. அழகிரி, பயணம் புறப்படும் முன் ஒரு வாரப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், "கருணாநிதியை தவிர வேறு யாரையும் நான் தி.மு.க. தலைவராக ஏற்றுக் கொள்ள மாட்டேன்" என்று தெரிவித்தார். பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய அழகிரி, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசும்போது, "எதிர்காலத்தில் தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டி ஏற்பட்டால், நான் போட்டியிடுவேன்" என்று தெரிவித்தார். அவரது இந்த பேட்டிகளால் தி.மு.க.விலும், தமிழக அரசியல் களத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
(இலக்குவனார் திருவள்ளுவன்)
4/16/2010 4:27:00 AM
4/16/2010 2:03:00 AM
4/16/2010 1:14:00 AM
4/16/2010 12:58:00 AM
4/16/2010 12:51:00 AM