+++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கவுகாத்தி:அசாம் மாநிலத்தில், ஒரு குறிப்பிட்ட வழிபாட்டில் பெண்களுக்கு விதிக்கப் பட்டிருந்த தடையை மீறி, அவர்களை அந்த வழிபாட்டில் கலந்து கொள்ள அசாம் கவர்னர் வழிகாட்டியுள்ளார்.அசாம் மாநிலத்தில் கி.பி.,15ம் நூற்றாண்டில், சங்கரதேவர் என்பவரால் உருவாக்கப்பட்ட வைஷ்ணவ சம்பிரதாயத்தில், அதன் வழிபாட்டிடத்தில் பெண்களுக்கு பல நூற்றாண்டுகளாக அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. அதன் வழி பாட்டிடத்தில் பெண்கள் நுழைவதில்லை.
சமஸ்கிருத மொழியில் வல்லுனரான, அசாம் கவர்னர் ஜே.பி.பட்நாயக், மாநிலத்திலுள்ள பல 'சாத்ரா' என்ற வழிபாட்டு அரங்கில் வழிபட்டுள்ளார். அவர் கடந்த 4ம் தேதி, பார்பேட்டா என்ற இடத்திலுள்ள சாத்ராவுக்குச் சென்றபோது, அந்த இடத்துக்கு வெளிப்புறத்தில் பெண்கள் கூட்டமாக நின்று கொண்டிருப்பதைக் கண்டார்.பின்னர் அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்ட அவர், சாத்ராவின் உயர்மட்ட அதிகாரியைச் சந்தித்து, வைஷ்ணவ சம்பிரதாயத்தை நிறுவிய சங்கரதேவரோ அவரது சீடர் மாதவதேவரோ, இவ்விதம் வழிபாட்டு அரங்கில் பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதை குறிப்பிட வில்லை என்று தக்க சான்றுகளுடன் எடுத்துக் காட்டினார்.
சாத்ரா அதிகாரியும் அதை ஏற்றுக் கொண்டார். ஆனால், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அனுமதி வழங்கப் பட்டப்போதும் கூட, பெண்களே இந்த வழிபாட்டு அறையில் நுழையாமல் இருந்தனர் என்று கூறினார். பின்பு கவர்னருடன் 20 பெண்கள் உள்ளே சென்று வழிபட்டனர்.மறுநாள், ஐந்து பெண்கள் உள்ளே சென்று வழிபட்டனர். அதில் ஒருவர் 51 ஆயிரம் ரூபாயையும், அமெரிக்காவில் வசிக்கும் மற்றொரு பெண் நாலாயிரத்து 800 ரூபாயையும் காணிக்கையாக அளித்தனர்.
அசாமின் பிரபல இலக்கியவாதியும், ஞானபீட விருது பெற்றவருமான மமோனி ரைசன் கோஸ்வாமி, கவர்னரைச் சந்தித்து வரலாற்றுச் சாதனை புரிந்ததற்கு வாழ்த்து தெரிவித்தார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக