வெள்ளி, 16 ஏப்ரல், 2010

சான்றோரைச் சிறப்பிக்க மேலவை



ஆண்டுகளுக்கு முன், புகழ்பெற்ற ஆளுமைகள் அமர்ந்து, அங்கு பதிவு செய்த அற்புதமான வாதங்களும், செய்திகளும் இன்றைக்கும் ஏட்டில் உள்ளன. கோட்டையில் பழைய சட்டப்பேரவையின் வடபுறத்தில் உள்ள மேலவை அரங்கம் ஓர் அடையாளச் சின்னமாக ஆகிவிடுமோ என்ற ஏக்கம் அனைவருக்கும் இருந்தது.இப்போது, தமிழகத்தில் சட்ட மேலவைத் தீர்மானம் 155 உறுப்பினர்களின் ஆதரவுடன் சட்டப்பேரவையில் நிறைவேறி இருப்பது அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கிறது.பிரிட்டிஷ் நாடாளுமன்ற முறை என்ற வெஸ்ட்மினிஸ்டர் அமைப்பிலும், அமெரிக்கா போன்ற நாடுகளில் குடியரசுத் தலைவர் ஆட்சி போன்ற அமைப்பிலும் இரண்டு அங்க அவை இருப்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஜனநாயக நெறிமுறையாகும். இந்தியாவில் ஆரம்பகாலத்தில் சென்னை, ஆந்திரம், பிகார், மகாராஷ்டிரம், குஜராத், ஜம்மு-காஷ்மீர், மத்தியப் பிரதேசம், மைசூர், பஞ்சாப், மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மேலவையும், சட்டமன்றமும் இருந்தன.அரசியல் சட்டம் 169-வது பிரிவில் மேலவை ஆக்கமும் நீக்கமும் குறித்த அதிகாரங்கள் உள்ளன. மேலவை நிரந்தர அவையாகும். அதைக் கலைக்க முடியாது. ஆயினும், இரண்டாண்டுக்கு ஒருமுறை மூன்றில் ஒரு பகுதி உறுப்பினர்கள் பதவி விலகுவர். மேலவை உறுப்பினரின் காலம் ஆறாண்டுகள் ஆகும்.சென்னை "அப்பர் ஹவுஸ்' என்று சொல்லப்படுகிற மேலவையில் ஆரம்ப காலத்தில் மொத்தம் 56 உறுப்பினர்கள் இருந்தனர். இதில் பொது உறுப்பினர்கள் 35, முஸ்லிம் 7, ஐரோப்பியர் 1, இந்திய கிறிஸ்தவர் 3, ஆளுநர் நியமனம் 9. 1947-ல் விடுதலைக்குப் பின் மேலவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 78 ஆனது. 1953, 56 ஆகிய ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை மாற்றப்பட்டு 63 ஆக இருந்தது. இந்த மேலவையில் உள்ளாட்சி மன்றத் தொகுதியிலிருந்து 21 பேர்; பேரவைத் தொகுதியிலிருந்து 21 பேர்; பட்டதாரிகள் தொகுதியிலிருந்து 6 பேர்; ஆசிரியர்கள் தொகுதியிலிருந்து 6 பேர்; ஆளுநரின் நியமன உறுப்பினர்கள் 9 பேர் என்று 63 முதல் 78 உறுப்பினர்கள் வரை அதில் இடம் பெறலாம்.ஜார்ஜ் வாஷிங்டனுக்கும், தாமஸ் ஜெபர்சனுக்கும் இடையே நிகழ்ந்த கப் அண்டு சாசர் (சட்டப்பேரவை-கப், சட்டமேலவை-சாசர்) என்ற விவாதத்தை பேரறிஞர் அண்ணா பல சமயங்களில் குறிப்பிட்டுப் பேசியிருக்கிறார். சாசர் மேலவை என்றால், கப் சட்டப் பேரவையாகும். தேநீர் சூடாக இருக்கும்பொழுது, சாசரில் ஊற்றிக் குடிப்பதுபோல, பேரவையின் சூட்டைக் குறைக்க, சாசர் என்ற மேலவை தேவை என்று அண்ணா குறிப்பிடுவது உண்டு.அரசியல் நிர்ணய சபையில் மேலவை குறித்த விவாதங்கள் எழுந்தபோது, பி.ஜி.கர், பட்டாபி சீத்தாராமய்யா, டாக்டர் பி. சுப்பராயன், கே.என். கட்ஜு ஆகியோர் கொண்ட துணைக் குழு அமைக்கப்பட்டது. அரசியல் நிர்ணய சபையில், லட்சுமி நாராயண சாகு, கிருஷ்ணசாமி பாரதி, என்.ஜி. ஐயங்கார் போன்றோர், சட்ட மேலவை மூலம் அனுபவமும், தீர்க்கமான சிந்தனையும் கொண்ட சான்றோர்கள், பிரச்னைகள் குறித்து முடிவெடுக்க மேலவை அவசியம் என்ற கருத்தை வெளிப்படுத்தினர்.அறிவு, திறமை மிக்கோர் சட்டமன்றத்துக்குத் தேர்தல் களத்தில் பல போராட்டங்களை மீறி வரத் தயங்குகின்றனர். அப்படிப்பட்டோரின் அறிவுரைகள், ஆட்சியாளருக்குக் கிடைக்க சட்ட மேலவை அவசியம். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட சட்டங்களில் குறை இருந்தால் மேலவையில் விவாதித்து அந்தக் குறைகளை அகற்றி, மக்களுக்கு நலம் தரும் சட்டங்களை நிறைவேற்றலாம். மத்திய நாடாளுமன்றத்தில் மாநிலங்களவையை நாம் ஏற்றுக்கொள்ளும்பொழுது, மேலவையை ஏன் ஏற்றுக்கொள்ளக்கூடாது? தமிழக மேலவையை முடக்கும் பிரச்னையில் சட்டங்களும், மரபுகளும் மீறப்பட்டன.அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 163-க்கு மாறாக, எம்.ஜி.ஆர். காலத்தில் அமைச்சரவையில் விவாதிக்கப்படாமல், நேரடியாகச் சட்டமன்றத்தில் விவாதித்து, மேலவை ஒழிப்புத் தீர்மானம் 14-5-1986 அன்று நிறைவேற்றப்பட்டு, மே 1986-ல் அன்றைய பிரதமர் ராஜீவ் காந்திக்கு மேலவையைக் கலைக்க ஒரு கடிதத்தை மட்டுமே எம்.ஜி.ஆர். எழுதினார். அந்தக் கடிதமே அடிப்படை ஆவணமாக இந்த நடவடிக்கைக்கு இருந்துள்ளது. பேரவைத் தீர்மான நகல்கூட மாநில ஆளுநருக்கு அனுப்பவில்லை. அந்த வகையில் அவசர அவசரமாக மேலவை ஒழிப்பு நடவடிக்கைகள் அன்றைக்கு அரங்கேறின. இறுதியாக 1-11-1986-ல் மேலவை நிரந்தரமாக முடக்கப்பட்டது.முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, ஒ.பி. இராமசாமி ரெட்டியார், மூதறிஞர் ராஜாஜி, எம்.ஜி.ஆர்., டி. பிரகாசம், பக்தவத்சலம், இன்றைய முதல்வர் கருணாநிதி, முன்னாள் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பதஞ்சலி சாஸ்திரி, சர்.பிட்டி. தியாகராயர், அறிஞர் பெருமக்கள் சர்.ஏ. இராமசாமி முதலியார், இலட்சுமணசாமி முதலியார், ஆர்.கே. சண்முகம் செட்டியார், சர்.சி.பி. இராமசாமி அய்யர், தீரர் சத்யமூர்த்தி, முன்னாள் குடியரசுத் தலைவர்கள் வி.வி. கிரி, ஆர். வெங்கட்ராமன், நீதிபதிகள் டாக்டர் பி.வி. ராஜமன்னார் மற்றும் பி.டி. ராஜன், குன்றக்குடி அடிகளார், ம.பொ.சி., ஆ. சிதம்பரநாத செட்டியார், டாக்டர் லட்சுமணசாமி முதலியார், டாக்டர் ஏ.சி. செட்டியார், அண்ணாமலை அரசர், நீதிபதி நாராயணசாமி முதலியார், நடிப்பிசைப் புலவர் கே.ஆர். இராமசாமி, நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை, அவ்வை டி.கே. சண்முகம், ஏ.ஆர். தாமோதரன், கே.பி. சுந்தராம்பாள் போன்ற ஆன்றோரும் சான்றோரும் அலங்கரித்த தமிழக மேலவை என்கிற ஜனநாயக மாமன்றம் ஒழிக்கப்பட்டது தமிழக வரலாற்றில் ஒரு கருப்புப் புள்ளியாகும்.ராமாராவ், ராமகிருஷ்ணராஜு, பி.வி. செரியன், மாணிக்கவேலர், சி.பி. சிற்றரசு, ம.பொ.சி. போன்றோர் மேலவைத் தலைவர் பதவியில் இருந்துள்ளனர். மேலவைக்கு சாதாரணமான சாமானிய மக்களும் உறுப்பினர்களாக அங்கம் வகித்தனர். சலவைத் தொழிலாளர் சமுதாயத்தைச் சேர்ந்த கோலப்பன் என்பவரும், ஆதி - ஆந்திர சமுதாயத்தைச் சேர்ந்த எலமந்தாவும் இடம்பெற்றிருந்தனர்.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலராக இருந்த ப. மாணிக்கம் மேலவை உறுப்பினராக இருந்தார். அவரது இயக்கம் மேலவையை கொள்கை ரீதியாக எதிர்த்தபொழுதும், எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் மேலவையை ஒழித்தபொழுது, அதனை எதிர்த்து ப. மாணிக்கம் குரல் கொடுத்தார். படித்த பட்டதாரிகள், உள்ளாட்சி நிர்வாகிகள், அதிகாரிகள் போன்ற பல தரப்பினரின் அறிவு இந்த மேலவைக்குத் தேவை. அப்படிப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய மேலவை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் என்ற வகையில் தனது வாதத்தை எடுத்துவைத்தார்.மேலவை குறித்து, தமிழக வரலாற்றைப் பார்க்கும்போது, கிழக்கிந்திய நிறுவனம் என்ற வர்த்தக நிறுவனம் வெற்றிபெற ஆங்கிலேயர்கள் படிப்படியாக ஆட்சி செய்யும் அளவுக்கு வளர்ந்த பின்பு 1640-ல் சென்னைக்கு வந்த ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையில் பண்டக சாலை கட்டடத்தைக் கட்டி,1910-ல் லாலி ஆளுநராக இருந்தபோது, அந்தக் கட்டடத்தில் புதிய மேலவைக் கூட்டம் தொடங்கப்பட்டது. இந்தியாவில் உள்ள சட்டமன்ற மேலவைகளில் முன்னோடி மேலவை என்ற பழமை வாய்ந்த தமிழக மேலவை 1861-ல் அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் ஆளுநர் மேலவை என்று அழைக்கப்பட்டது.1921-ம் ஆண்டு சென்னை சட்டமன்ற மேலவை என்றும், 1969-ல் திமுக அரசு ஏற்பட்ட பின்பு தமிழக சட்டமன்ற மேலவை என்றும் பெயர் மாற்றப்பட்டது. மேலவையின் வளர்ச்சிக்கும், அதனுடைய பணிகளுக்கும் பென்டிங், மெக்காலே, டல்ஹவுசி ஆகியோர் பெரிதும் ஆர்வம் காட்டினர். அன்றைய சென்னை மாகாண ஆளுநரான சர்.சார்லஸ் டிரேவேலியன், மேலவையின் வளர்ச்சிக்குப் பல்வேறு பணிகளை ஆற்றினார்.சென்னை மேலவைக்கு முதன்முதலாக நியமிக்கப்பட்ட இந்திய உறுப்பினர் சடகோப ஆச்சாரியார். மேலவையில் தமிழில் முதன்முதலில் பேசிய பெருமைக்குரியவர் பி.வி. நரசிம்மய்யர்.1888-ம் ஆண்டு விக்டோரியா மகாராணியின் அறிக்கையின்படியும், மிண்டோ மார்லி சீர்திருத்தத்தின் அடிப்படையிலும் 1909-ம் ஆண்டு சட்ட மேலவை அமைப்பை மாற்றி விரிவுபடுத்தப்பட்டது. இதனால் உறுப்பினர்களுடைய எண்ணிக்கை உயர்ந்தது. விவாத உரிமைகள், வினாக்கள் தொடுப்பது போன்ற முக்கியப் பணிகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டன. ஆளுநர் நிர்வாக சபைக்கு முதன்முதலாக பொப்பிலி மகாராஜா என்ற இந்தியர்தான் நியமிக்கப்பட்டார். 1919-ம் ஆண்டு ஆகஸ்டு 20-ம் நாள் மாண்டேகு - செம்ஸ்போர்டு சட்டத்தின் அடிப்படையில் மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை 98ஆக உயர்ந்தது. அப்போது கீழ்சபை, மேல்சபை என்று உருவாக்கப்படவில்லை. 1935-ம் ஆண்டு இந்திய அரசியல் சட்டமும் இதை ஏற்றுக்கொண்டது. இதன் நிர்வாகத்தில் இந்தியப் பிரதிநிதிகளும் பங்கு கொள்ள வேண்டும் என்ற நிலையை இச்சீர்திருத்தச் சட்டம் கொண்டு வந்தது.உலக அளவில் இன்றைக்கு அனைத்து நாடுகளிலும் மேலவையும் கீழவையும் நடைமுறையில் உள்ளன. இந்தியாவில், கம்யூனிஸ்ட் இயக்கத்தினர் மேலவை வேண்டாம் என்று சொல்கின்றனர். ஆனால் ரஷியாவில் சட்டங்களையும் மக்களையும் ஆள இரு அவைகள் உள்ளன. அதைப்போன்று மேலவை இங்கிலாந்து, அமெரிக்கா, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் சிறப்பான பணியை மேற்கொள்கின்றன.1989, 1996 ஆகிய ஆண்டுகளில் திமுக ஆட்சிக்கு வந்தபொழுது, மேலவையைத் திரும்ப அமைக்க பேரவைத் தீர்மானங்கள் முறைப்படி மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டன. நீக்கப்பட்ட மேலவையை தமிழகத்தில் மீண்டும் கொண்டுவர 20-2-1989 அன்று திமுக அரசால் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. 1990-ல் மாநிலங்களவை இதை ஏற்றுக்கொண்டது. மக்களவையில் இத்தீர்மானம் வரவில்லை. ஆனால் 1991-ல் திமுக அரசு கலைக்கப்பட்டது. அதனால் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை.ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் 4-10-91 அன்று இத்தீர்மானத்தைத் திரும்பப் பெற தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்து, திமுக அரசின் தீர்மானத்தைத் திரும்பப் பெற்றார். அதன் மூலம் மேலவை கொண்டுவரும் முயற்சி முறியடிக்கப்பட்டது.மீண்டும் மேலவை கொண்டு வரவேண்டும் என்ற தீர்மானத்தை 26-7-1996 அன்று திமுக அரசு நிறைவேற்றி நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு அனுப்பியது. அன்றைய தேவ கௌடா தலைமையிலிருந்த மத்திய அரசு இந்தத் தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் வைக்க முடிவு செய்தது. ஆனால், அந்த அரசு நீடிக்க முடியவில்லை. பின் பா.ஜ.க. ஆட்சி ஏற்பட்டது.1996-ல் அனுப்பப்பட்ட தீர்மானத்தையும் அதிமுக அரசு 12-9-2001-ல் திரும்பப் பெற்றது.சான்றோரைக் கௌரவிக்க மேலவை தேவை. தமிழகத்தில் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக மேலவை இல்லை. தொடர்ந்து மேலவை வரவேண்டும் என்று தமிழக முதல்வர் முன்மொழிந்த மேலவைத் தீர்மானம் 155 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் நிறைவேறியது முக்கிய நிகழ்வாகும். மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்தை மனத்திலிருத்தி, மாற்றுக் கருத்துக் கொண்ட சிந்தனையாளர்களின் ஆலோசனைகள் ஜனநாயகத்தில் இடம்பெற மேலவை அவசியமாகும். ஒன்று விட்டால் மூன்று என்பார்கள். இது மூன்றாவது முயற்சி. சட்ட மேலவை ஏற்பட்டு செயல்படுமானால் அது ஜனநாயகத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியாக இருக்கும்.
கருத்துக்கள்

சான்றோரைச் சிறப்பிக்க மேலவை என்பது நோக்கமாக இருந்திருக்கலாம். இன்றைய சூழலில், செல்வாக்கு இல்லாதவர்களைக் கொல்லைப்புற வழியில் நுழைக்கவும், உட்கட்சிச் சிக்கலைத் தீர்க்கவும், கூட்டணிகளின் வாயை மூடவும், கட்சி மாறிகளுக்கு அடைக்கலம் தரவும், பதவிகளின் எண்ணிக்கையை உயர்த்தி ஆளும்கட்சியினரைத் தக்க வைத்துக் கொள்ளவும், சொத்துகளைக் குவிப்பதற்கு மற்றொரு வாயிலாகவும், பதவி நலன்களைப் பெருக்கவும் பயன்படும் என்ற யாவரும் அறிந்த உண்மையையும் கட்டுரையாளர் பதிவு செய்திருக்கலாம்.

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
4/16/2010 4:47:00 AM

இதோ சில வருங்கால தமிழ் நாட்டு மேலவைச் சான்றோர்கள்: கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன், கே.என்.நேரு, ராதிகா சரத்குமார், ராமராஜன், விஜய T.ராஜேந்திரன், வாலி, பொன்முடி, பூங்கோதை

By கருணாநிதி
4/16/2010 3:06:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக