சனி, 17 ஏப்ரல், 2010

சமச்சீர் கல்வியை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும்: அ.தி.மு.க. கோரிக்கை



சென்னை, ஏப். 16: சமச்சீர் கல்வியை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும் என அதிமுக எம்.எல்.ஏ. பதர் சயீத் கோரிக்கை விடுத்தார்.சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பள்ளிக் கல்வித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அவர் பேசியது:தமிழக அரசு அறிவித்துள்ள சமச்சீர் கல்வித் திட்டத்தை பரீட்சார்த்த முறையில் சோதனை செய்துவிட்டு பிறகு நடைமுறைபடுத்த வேண்டும். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து தேவையான கட்டமைப்பு வசதிகளை செய்த பிறகு சமச்சீர் கல்வியை கொண்டு வர வேண்டும். எனவே சமச்சீர் கல்வியை ஓராண்டுக்கு தள்ளி வைக்க வேண்டும். புதிய சட்டப் பேரவை கட்டடம் குறித்து தினமும் பெருமை பேசுகிறீர்கள். கட்டடம் மட்டும் பெரியதாக இருந்தால் போதாது. இந்தப் பேரவையில் மக்களுக்காக விவாதம் நடைபெற வேண்டும். ஆளும் கட்சி உறுப்பினர்கள் மட்டுமல்ல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் மக்கள் பிரதிநிதிகள்தான். எனவே எங்களுக்கும் அதிக நேரம் வழங்க வேண்டும். எங்களால்தான் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறியது என்று கூறிக் கொள்கிறீர்கள், ஆனால் இங்கே, பெண் உறுப்பினர்களுக்கு பேச உரிய வாய்ப்பு அளிப்பதில்லை.எதிர்க்கட்சி தொகுதி என்பதால் எனது திருவல்லிக்கேணி மீது அரசின் பார்வை படுவதே இல்லை. மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள், மீன் அங்காடி நவீனமயமாக்கம் என்று தொகுதிக்காக நான் கேட்டவை எதுவும் நடக்கவில்லை. சிங்காரச் சென்னை என்று சொல்லி குடிசைவாசிகளை நகருக்கு வெளியே அனுப்புகிறீர்கள். அவர்களுக்கு நகருக்கு உள்ளேயே மாற்று இடம் வழங்க வேண்டும். சென்னையில் குறிப்பாக திருவல்லிக்கேணியில் கால்நடைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. அதனால் பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுகிறது. மக்களை வெளியேற்றும் அரசு, கால்நடைகளை வெளியேற்றுவதில்லை.போலி மருந்துகளோடு ஒப்பிடும்போது காலாவதியான மருந்துகள் பரவாயில்லை என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார். ஆனால் காலாவதியான மருந்துகளால் உயிரிழப்புகள்கூட ஏற்படும் ஆபத்து உள்ளது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என்றார் பதர் சயீத்.
கருத்துக்கள்

இதுதான் அதிமுகவின் நிலைப்பாடுஎன்றால் அக்கட்சி தமிழகத்தை விட்டுக் காணாமல் போனால் நல்லது.

இங்ஙனம் இலக்குவனார் திருவள்ளுவன்

By ilakkuvanar thiruvalluvan
4/17/2010 3:15:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக