சனி, 17 ஏப்ரல், 2010

பெயர்ப் பலகைகள் தமிழில் இல்லாதது வெட்கக்கேடானது: மேயர்



சென்னை, ஏப். 15: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகள் தமிழில் இடம்பெறாதது வெட்கக்கேடானது என்று மேயர் மா. சுப்பிரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சியில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், மே 31}ம் தேதிக்குள் தமிழுக்கு பிரதான இடம் கொடுக்கப்பட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு வணிக சங்கங்களின் நிர்வாகிகளுடன் சென்னையில் வியாழக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதற்கு தலைமை வகித்த மேயர் பேசியது:கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் அந்தந்த மாநில மொழிகள்தான், வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் பிரதானமாக இடம் பிடித்துள்ளன. ஆனால், தமிழகத்தில் ஆங்கிலம்தான் பிரதான இடம்பிடித்துள்ளது. ஜூன் 23}ம் தேதி கோவையில் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடைபெற உள்ளது. எனவே, அதற்கு முன்னதாக மாநிலத்தின் தலைநகரான சென்னையில் அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளிலும் தமிழ் பிரதானமாக இடம்பெற வேண்டும். இதற்கான கடைசி தேதி நீட்டிக்கப்படமாட்டாது. ஜூன் 1}ம் தேதி முதல் தமிழுக்கு பிரதான இடம் கொடுக்காத பெயர்ப் பலகைகள் அப்புறப்படுத்தப்படும் என்றார்
+++++++++++++++++++
இப் பொழுதாவது இந்த முடிவிற்கு வந்ததற்குப் பாராட்டுகள். சென்னை என்றி ல்லாமல் தமிழ்நாடு முழுவதும் நடை முறைப்படுத்த உரியவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசாணைக்கிணங்க ஒரே பெயர்ப்பலகையில் தமிழும் ஆங்கிலமும் (தேவையெனில் பிற மொழியும்) 5: 3 : (2) என இருக்க வேண்டும். அரசு அலுவலகப் பெயர்ப் பலகைகளே அவ்வாறு இல்லை. எளிய முறையில் செயல்படுத்த பல வழிகள் உள்ளன. அவ்வாறு செயல்படுத்தாமல் ஆரவார அறிக்கைகளுடன் நின்று விடக் கூடாது. தமிழ்நாட்டின் தமிழ்த் தெருவில் தமிழ்தான் இல்லை என்னும் அவல நிலையைப் போ க்க எடுக்கும் முயற்சிகளுக்குப் பாராட்டுகள். பாராட்டுகளுடன் இலக்குவனார் திருவள்ளுவன்
By ilakkuvanar thiruvalluvan
4/17/2010 2:55:00 AM

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக