Last Updated :
கருத்தரங்கை துவக்கிவைத்து வரவேற்புரையாற்றும் கவிஞர் இளையபாரதி. உடன் கருத்தரங்கில் பங்கேற்றவர்கள் (இடமிருந்து) பி.எம்.சுந்தரம், ஆர்.வேதவல்லி, எஸ்.ஏ.க
சென்னை,ஜன.15: செம்மொழி அங்கீகாரம் தமிழுக்குக் கிடைத்த பிறகு "தமிழிசை கர்நாடக சங்கீதமான வரலாறு' என்று குறிப்பிடுவதே தவறு என்றார் திருப்பாம்புரம் சோ.சண்முகசுந்தரம்.சென்னை சங்கமம் அமைப்பு தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை அரங்கத்தில் வியாழன் அன்று நடத்திய "தமிழிசை கர்நாடக சங்கீதமான வரலாறு குறித்த ஆய்வரங்கிற்கு' தலைமையேற்று அவர் மேலும் பேசியதாவது, ""யாழ் பாலையாகி, பாலை பண்ணாகியிருப்பதுதான் தொல்காப்பியம் காட்டும் வரலாறு. 103 பண்களிலிருந்துதான் வெவ்வேறு பெயர்களில் ராகங்களை அழைத்துக் கொண்டிருக்கின்றனர். உதாரணமாக, வியாழக் குறிஞ்சியை செüராஷ்டிரம் என்று கூறுகின்றனர். உலகின் ஆதி இசை தமிழ் இசைதான். தமிழிசையை வளர்க்க இனி "டிசம்பர் மாதத்தில் நடக்கும் இசை நிகழ்ச்சிகள் அனைத்தும் சபாக்களில் நடக்காது, பூங்காக்களில்தான் நடக்கும்' என்றும், "இனி விருதுகள் யாருக்கும் கிடையாது என்றும்' அரசாங்கம் சட்டம் கொண்டுவரவேண்டும். இதை என்னுடைய கோரிக்கையாக அரசுக்கு வைக்கிறேன்'' என்றார். கருத்தரங்கில் அரிமளம் பத்மனாபன் பேசியதாவது, ""சுர இயலுக்கு அடிப்படையாக சங்கீத ரத்னாகரத்தை காட்டுவார்கள். இதன் காலம் 11 அல்லது 12-ம் நூற்றாண்டுதான். தமிழ் இசையின் சுர இயல் தொல்காப்பியத்திலிருந்தே தொடங்குகின்றது. சங்கீத ரத்னாகரத்திற்கு முற்பட்ட காலத்தில் தோன்றிய "பிங்கள நிகண்டு'வில் "நரம்பின் மறையில் காணலாம்' என்று ஒரு குறிப்பு வருகின்றது. இதற்கு அர்த்தம் நரம்பு இசைக் கருவி இந்த நிகண்டு தோன்றிய காலத்திற்கு முன்பே இருந்தது என்பதுதான். இலக்கியம் தோன்றிய பின்தான் அதற்கான இலக்கணம் வகுக்கப்படும். தமிழிசை வடிவத்தின் தொன்மையைக் குறிப்பிடவே நிகண்டுவிலிருந்து இந்த உதாரணத்தைச் சொல்கிறேன். பெரும் பண், திறப் பண் என்று தேவார காலத்திலேயே வகுத்திருக்கின்றனர். அவைதான் இன்றைக்கு சம்பூர்ண ராகம், ஜன்ய ராகம் என்றாகிவிட்டன. ஆலத்தியியல் என்று அன்றைக்கு அழைக்கப்பட்டதுதான் இன்றைக்கு ஆலாபனை ஆகியிருக்கிறது. ஆலத்தியியல் குறித்து அடியார்க்கு நல்லார் குறிப்பிட்டுள்ளார். அவரின் காலம் "சங்கீத ரத்னாகரம்' நூலின் காலத்திற்கு முந்தையது!'' என்றார். எஸ்.ஏ.கே.துர்கா பேசியதாவது, ""மக்கள் இசையான கிராமிய இசைதான் முதலில் தோன்றியது. அதற்குப் பிறகுதான் பண்கள். தெய்வ சன்னதிகளில், சடங்குகளில் பாடுவதற்கு ஒருமுறையும், லெüகீக விஷயங்களுக்குப் பாடுவதற்கு ஒருமுறையும் என பிரிந்தன. பண்தான் ராகமா? என்றால் "இல்லை' என்பதுதான் பதில். பண் வேறு, ராகம் வேறு. பண் என்பது வர்ண மெட்டு. சன்னதிகளில் பாடப்படுவது தேவாரப் பண்கள். சன்னதிகளில் பாடுபவர்களிடம் அர்ப்பணிப்பு உணர்வுதான் மேலோங்கியிருக்கும். இசை நிகழ்ச்சியை ஒருவர் நிகழ்த்தும் போது அதில் அவருடைய தனித் திறமையைக் கொண்டுவரவேண்டும் என்று நினைத்து பாடுவார். அந்தக்காலத்தில் கோயில்களில் ஓதுவார்களின் மூலம் காலங்காலமாக பாடப்பட்ட தேவாரத்தின் தொன்மையை நம்மால் இன்றைக்கும் உணரமுடிகிறது. அதேநேரத்தில் அந்தக்காலத்தில் அரண்மனைகளில் எப்படி இசைக் கலை நிகழ்த்தப்பட்டது என்பதற்கு ஆதாரமில்லையே... எனவே தமிழிசைக்கும் கர்நாடக இசைக்கும் அதிக வித்தியாசமில்லை என்றோ வித்தியாசமிருக்கிறது என்றோ உடனடியாக கூறிவிட முடியாது. இது ஆழமான ஆய்வுக்கு உட்பட்ட விஷயம்'' என்றார்.ஆர்.வேதவல்லி பேசியதாவது, ""தமிழிசை, கர்நாடக இசை என எந்தப் பெயரில் இருந்தாலும் அது நம்முடைய இசைதானே! நமக்கே வீட்டில், அலுவலகத்தில், நண்பர்களிடத்திலே என்று வேறு வேறு பெயர்கள் இல்லையா? ஒரு மனிதர், எத்தனை உறவுகளால் அழைக்கப்படுகிறார்? அதைப்போல்தான் இதுவும். நம்முடைய இசையின் பலமே அதன் "கமக'த்தில்தான் இருக்கிறது. தமிழ்நாட்டு நாகசுரக் கலைஞர்களாலும், ஓதுவார்களாலும்தான் நமது இசைக்கு அழகும், அசைவும் கிடைத்திருக்கின்றது என்பதை யாராலும் மறுக்கமுடியாது'' என்றார்.பி.எம்.சுந்தரம் பேசியதாவது, ""இது கருத்தரங்க மேடையே தவிர விவாத மேடை அல்ல. தொடர்ந்து ஆய்வுக்கு உட்படவேண்டிய பல விஷயங்கள் இருக்கின்றன. தேவார காலத்திற்கு முன்பே காரைக்கால் அம்மையார் பண்களைக் கொண்டு பாடியிருக்கிறார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு முன்பு, மீனாட்சி கல்லூரி என்று ஒன்று இருந்தது. அங்கு வடமொழியும்,தெலுங்கும் கூட சொல்லிக் கொடுக்கப்பட்டன என்பது எத்தனை பேருக்குத் தெரியும்? தஞ்சாவூரைச் சேர்ந்த நட்டுவனார் பொன்னையாப் பிள்ளையைக் கொண்டுதான் ராஜா அண்ணாமலைச் செட்டியார் தமிழிசையை வளர்ப்பதற்கு எண்ணற்ற மாநாடுகளை நடத்தினார். தமிழனுக்கு கற்பனை உணர்வு அதிகம். அதனால் கலை வடிவங்களில் ஏற்படும் மாற்றங்களுக்கும் தமிழனே காரணமாக இருக்கின்றான். "கர்நாடக இசை என்பதே இங்கு கிடையாது' என்றெல்லாம் நடைமுறையில் கூறமுடியாது என்பதுதான் உண்மை'' என்றார்.சோ.முத்து கந்தசாமி தேசிகர் பேசியதாவது, ""ஞானசம்பந்தரின் பாடல்கள் அத்தனையும் இசைத் தமிழ். இங்கே துர்கா அம்மையார் பேசும்போது, தேவாரப் பாடல்களில் கட்டமைக்கப்படாத வர்ண மெட்டுதான் இருக்கும் என்று சொன்னார். அதை நான் மறுக்கிறேன். தமிழிசையில் "பண்' என்பதற்கு என்னால் பொருள் சொல்ல முடிகிறது. ஆனால் கர்நாடக இசையைக் கொண்டாடுபவர்களிடம் "ராகம்' என்பதற்கு என்ன பொருள்? அது என்ன மொழி? என்று கேட்கிறேன். அவர்களால் பதில் சொல்ல முடிவதில்லையே அது ஏன்?'' என்றார். கருத்தரங்கை தொடங்கி வரவேற்றுப் பேசினார் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றச் செயலர் கவிஞர் இளைய பாரதி.
By Ilakkuvanar Thiruvalluvan
1/16/2010 6:21:00 PM
By MO
1/16/2010 2:28:00 PM
By ASHWIN
1/16/2010 9:11:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்