[ஒலி] தாயார் பார்வதி அம்மையார், யாழ் மக்கள், சிங்கள மக்கள் ஆகியோரின் மனநிலை என்ன…? இவர்களை நேரில் கண்ட சட்டவாளர் சந்திரசேகரின் செவ்வி
[3ஆம் இணைப்பு] மன அழுத்தம் இராணுவ அழுத்தம் காரணமாக உயிர் நீத்த தேசியத் தலைவரின் தந்தை அவர்களின் மரணத்திற்காக யாழ் சென்றிருந்த தமிழக சட்டவாளர் சந்திரசேகர் அவர்கள், ஈழமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், தேர்தலில் சிங்கள மக்களின் நிலைப்பாடு, தாயார் பார்வதி அம்மையாரின் உடல் நிலை மனநிலை பற்றி மீனகம் இணையத்தளத்திற்கு வழங்கிய செவ்வி.
மீனகம்: சமீபத்தில் தலைவரின் தந்தையின் மரணத்திற்காக நீங்கள் யாழ்ப்பாணம் சென்றிருந்தீர்கள், அங்கு மக்களின் நிலமைகள் எப்படி இருக்கிறது?
சந்திரசேகர்: அங்கு மக்கள் நடைபிணங்களாகவே வாழ்கிறார்கள். உளவியல் ரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டே அம்மக்கள் வாழ்கிறார்கள். யாழ்ப்பாணத்தில் மட்டுமல்ல வல்வெட்டித்துறையிலும் அவ்வாறான சூழலே காணப்படுகிறது. தந்தையின் சாவிற்கு முதல் நாள் 20 பேர் தான் வந்தார்கள். அவருகளும் இராணுவம் பிடிப்பார்களோ! என்ற அச்சத்துடன் பல பேர் இரவு கூடி பேசிய பிறகே வந்திருந்தனர்.
20 மீற்றருக்கு 30 மீற்றருக்கு ஒரு தடவை இராணுவ சோதனை நிலையங்கள் காணப்படுகின்றன. என்னொடு ஒரு பெரியவர் பேசி கொண்டு வந்தார். நான் அவரிடம் கேட்டேன் நீங்கள் எதற்கு பயப்படுகிறீர்கள் கேட்டாங்கள் என்றால் சொல்லுங்க வழக்கறிஞரை எனக்கு இந்தியாவிலேயே தெரியும் என்று? அதற்கு அவர் ” நாங்கள் சொல்லமுடியாது. எங்களை கூட்டிற்று போனால் உடனே சுட்டிருவார்கள் அவர்களிற்கு விளக்கம் எல்லாம் கொடுக்க முடியாது.
அப்புறம், தந்தையாரின் ஊர்வலத்தை நான் புகைப்படம் எடுத்து வந்தேன். அப்போது ஒரு வீட்டின் மேல் நின்று எடுத்தேன். அப்போது உள்ளிருந்து ஒரு அம்மையார் கதவை திறந்து அந்த ஊர்வலத்தை பார்த்த அம்மையார் காவற்துறையினரை பார்த்தவுடன் கதவை மூடிக்கொண்டார். அப்படியான ஒரு மனநிலையில் மக்கள் வாழ்கின்றனர். இருப்பினும் இறுதி நிகழ்விற்கு 1000 பேர் வந்திருந்தனர். 20 வருடங்களின் பின்னர் வல்வெட்டித்துறையில் அவ்வளவு மக்கள் கூடியது இந்த நிகழ்விற்குதான்.
அந்த மக்கள் காவற்துறையினரை பார்த்து மிகவும் பயப்படுகிறார்கள் என்று சொல்கிறீர்களா?
ஆமாங்க, இந்த நிகழ்வில் அப்படிதான் நடந்தது.
தலைவரின் தந்தை என்றதாலேயா?
ஆமா, ஆமா, அவர்கள் தங்களை உடனே காலி பண்ணிருவார்கள் என்ற மனநிலையில் தான் வாழ்கிறார்கள். இருப்பினும், நல்லபடியாக இறுதிநிகழ்வுகள் நிறைவேறியது. முடிவுற்ற பின் அம்மாவை இந்தியாவுக்கு அழைப்பது சம்மந்தமாக டென்மார்க்கில் இருக்கும் தலைவரின் அண்ணனுடன் பேசினோம். அவரும் அதற்கு இணக்கம் தெரிவித்திருக்கிறார். அதனைத்தொடர்ந்து அவரை இந்தியா கொண்டுவருவதற்கான முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறோம். கொழும்பிலுள்ள இந்திய திணைக்களம் அனுமதித்தால் இங்கு கொண்டுவரலாம் என்று இருக்கிறோம்.
இந்தியா அரசாங்கம் அனுமதி கொடுப்பதாக சொல்லியிருக்கிறார்களா?
அது ஒன்றும் பிரச்சனை இல்லை. நாங்கள் கொழும்பிலுள்ள இந்திய தூதகரத்தை நாட வேண்டும். அவர்கள் அனுமதி கொடுத்தால் சரி.
தாயார் பார்வதி அம்மையார் மனநிலை எப்படியிருக்கு?
கணவர் மனைவிக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர்கள். ஐயா அவங்களை அப்படி கவனிப்பாங்கள். இந்தியாவில் என் வீட்டில் அவங்கள் தங்குவார்கள். அவர் இறந்திட்டாங்க என்றத அவங்களால தாங்க முடியேல்லை. அவரின் முகத்தைப் பார்த்து பார்த்து அழுதுகொண்டே இருக்காங்க. அடக்கம் முடித்தவுடன் அவங்க வைத்தியசாலையில் தான் படுத்திருந்தாங்க. ஊறணி என்ற இடத்திலுள்ள வைத்தியசாலையில் அவங்க அனுமதிக்கப்பட்டிருக்கிறாங்க. ஐயா இறந்திட்டார் என்று அவங்களுக்கு தெரியுது. இருந்தாலும், “அம்மா இந்தியாவுக்கு வாங்க நான் உங்களை நல்லா பார்த்துக்கிறேன்” என்று நான் சொன்னேன். அதற்கு அவங்க ” அதை நான் ஐயாட்ட கேட்டிட்டு தான் முடிவு பண்ணனும்” என்று சொல்றாங்க. ஐயா இறந்த அந்த அதிர்ச்சியில் இருந்து அவங்க இன்னும் மீளமுடியாமல் தான் இருக்காங்க.
அவர்களால் நம்பமுடியல்லை?
நம்பமுடியல்லை.சரி
நம்பமுடியல்லை என்பதைவிட அவர்களின் மனநிலை அவர்களை நம்ப விடவில்லை என்று நினைக்கிறேன்
ஆமா, ஆமா..அவங்க மனசு இடம் கொடுக்கல்ல. நம்மை விட்டு போய்ட்டார் என்றதை அவங்களால சகிக்க முடியல்லை.
இறுதி ஒருமாத காலமாக தந்தையாரை தாயாரிடமிருந்து பிரித்து வைத்திருந்ததாக தொ.திருமாவளவன் கூறியிருக்கிறாரே!
அதை வந்து அம்மா சொல்லேல்லை. நான் திருமாவளவன் எல்லாரும் ஒன்றாகத்தான் இருந்தோம். அதை பேசுகிறளவிற்கு அவங்களின் மனநிலை இல்லை. சிவாஜிலிங்கம் சொன்னார். இரண்டு பேரையும் பிரித்து வைத்திருந்தாங்க. அதெப்படியென்றால், ஐயாக்கு உடம்பு சரியில்லை என்ற போர்வையில் தனியாக பிரித்து வைத்திருந்தார்கள். அவர்களின் மனநிலை மிகவும் மாறிவிட்டது.86 வயதில் இராணுவத்தின் முகாமிற்குள் தனியாக இருந்தது அவர்களின் உடல்நிலை சரியாக மாறியிருக்கிறது.
அந்த நேரத்தில் இராணுவ முகாவில் அம்மாவை யார் கவனித்தார்கள்?
இராணுவம் தான். அவங்களோட ஆட்கள்
அவர்களை பார்க்கும் போது எப்படி தெரிகிறது?நல்ல பராமரிப்பில் இருந்திருக்கிறார்களா?அல்லது கொடுமைப்படுத்தப் பட்டிருக்கிறார்களா?
அவங்கள் முகத்தில் பெரிய ஒரு சோகம். இராணுவ முகாமில் இருந்து வெளிவரும் போது அவங்கள் மனநிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதில் ஒரு துளி மாற்றமும் இல்லை. ஏனென்றால் அம்மாவை பலமுறை நான் பார்த்திருக்கிறேன். வெளிப்படையாக காயங்கள் இல்லை. மனரீதியாக காயப்பட்டிருக்கிறார்கள்.
அவங்களைப் பார்க்கும் போது முகமெல்லாம் மஞ்சள் அடித்து காணப்பட்டது. அது சத்தாண உணவு இல்லாத காரணத்தினாலா?
நிச்சயமாக,
இல்லை, அவர்களின் புகைப்படத்தைப் பார்க்கும் போது அவர்கள் கட்டியிருக்கும் புடவைக்கும் முகத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்தது!
ஆமா, சரி தான், மஞ்சளா தான் இருந்தது.
அவர்களைப் பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருந்தது. அவர்களின் நிலையைப் பார்க்கும் போது.
நேராக பார்க்கும் போதும் அப்படித்தான் இருந்தது. மிகவும் கவலையாக இருந்தது.
இப்ப யார் அவர்களை கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்?
இப்போ அவங்க வைத்தியசாலையில இருக்காங்கம்மா. வல்வெட்டித்துறை அரச வைத்தியசாலையில் இருக்கிறாங்க. அங்குள்ள வைத்தியர் மயிலேறிமுருகன் அவங்களை கவனிச்சிட்டு இருக்கார்.
அம்மையாருக்கு இராணுவ கண்காணிப்பு இப்பொழுதும் இருக்கிறதா? அல்லது முழுமையாக விடுதலை செய்துவிட்டார்களா?
முழுமையாக விடுதலை செய்ததாக சொல்கிறார்கள். இருப்பினும் அவர்களின் நடவடிக்கையை இராணுவம் கவனிச்சிட்டு தான் இருக்கும். ஊரைவிட்டு வருகிற வரைக்கும்.
சில ஊடகவியலாளர்கள் கேள்விகள் கேட்பதற்கு அனுமதியிருக்கிறதா?
இல்லை. நாங்கள் கேட்டமே, இரண்டு திங்களிற்கு முதல் தம்பியைப் பார்த்தேன் என்று கூறுகிறார். பயங்கர குழப்பமான நிலையில் அவங்க இருக்கிறாங்க. இருப்பினும் மகனைப் பற்றி கேட்டதற்கு மிகவும் உறுதியா சொல்றாங்க ” அவன் நல்ல இருப்பான்” என்று.
தமிழ் மக்களிற்கு இருப்பது மாதிரி அவங்களுக்கும் நம்பிக்கை
நிச்சயமா.அதே தான்
சரி, இந்த தேர்தல் நேரத்தில் யாழ் என்ன நிலையில் இருக்கு?
நாங்கள் போன அன்று ராஜபக்ச யாழ்ப்பாணம் வந்திருந்தாரு. அவருக்கு சரியான வரவேற்பு அங்கு இல்லை. சில மாணவர்கள் ஆர்ப்பாட்டம் பண்ணிருந்தார்கள். அதனால அவருக்கு அவரின் கூட்டணி கட்சியான டக்ளஸ் தேவானந்தா மீது மிகுந்த அதிர்ச்சியுடன் தான் போயிருக்கிறார். நான் கொழும்பில் இருக்கும்போது 10 , 15 பேரிடம் கேட்டேன். அவர்களூம் ஜெனரல் சரத் பொன்சேகாவை தான் சொல்கிறார்கள். சிங்களவர்களிடம் தான் கேட்டேன் நான்.
சிங்கள மக்கள் மத்தியிலும் மகிந்தவிற்கு வரவேற்பு குறைந்துள்ளதா? காரணம் என்ன?
நிச்சயமாக, சரியாக குறைந்திருக்கிறது. அவங்கள் மத்தியில் காணப்படும் குடும்ப ஆட்சி மற்றது ஊழல் குற்றச்சாட்டு நிறைய அவர் மீது இருப்பதாக அவர்கள் சொல்கிறார்கள். இந்த காரணத்தினால் பொன்சேகா மீது அவர்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். யாழ்ப்பாண மக்கள் என்ன நினைக்கிறாங்கள் என்றால் நானொரு இந்தியன் இல்லை தமிழன். இந்தியன் என்று சொல்லவே எனக்கு வெட்கமாக இருக்கிறது இப்போ. நானொரு இந்திய தமிழன். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை எங்கும் இராணுவம் தான்.
எ9 வீதியில் ஒரு இடத்தில் இராணுவம் சாப்பாட்டுக்கடை வைத்திருக்கிறார்கள். பரந்தன் சந்தியில். அதில் ஒரு இடத்தில் தான் தமிழில் எழுதியிருந்தார்கள் அதுவும் எப்படி என்றால், “சோறு சப்புங்க” என்று சாப்பிடுங்கோ என்று எழுத தெரியாமல். அதை நான் படம் பிடித்து இங்கு வைத்துள்ளேன். தமிழை எப்படி கொல்றாங்க என்று பாருங்க.
யாழ் மக்களும் சரி ஈழ மக்களும் சரி ராசபக்சவை ஆட்சிலிருந்து நீக்க வேண்டு என்றே இருக்கிறார்கள். அதாவது எனக்கு தெரிந்தவரை அவர்கள் சொன்னது சிங்களவர்களின் ஆயுதமாக பொன்சேகாவை கருதுகிறார்கள்.
2004 ஆம் ஆண்டும் போயிருக்கிறீர்கள். இப்போதும் போயிருக்கிறீர்கள் உங்களிற்கான வரவேற்பு எப்படி இருந்தது?
2004 ஆம் ஆண்டு நான் ராஜாவாக போனேன். தற்போது உயிருக்கு பயந்து போய்ட்டு வாற மாதிரி இருந்தது. தமிழீழ பகுதியைப் பார்க்கும் போது அதுவும் முதல் நான் போய் தங்கிய கிளிநொச்சியின் விடுதி, சாப்பிட்ட அருண்மணி சுவையகம் அதெல்லாம் பார்க்கும் போது அந்த கட்டடங்களே இடிந்து சிதறிப்போய் இருந்திச்சு. எல்லாவற்றையும் வீடியோ எடுத்துக்கொண்டு தான் வந்தேன்.
கிளிநொச்சி எமது தலைவரின் மனக்கோட்டை அல்லவா?
ஆமாங்க, 3மணி நேரம் அதிலேயே உட்காந்திட்டம் அவற்றை பார்த்துக்கொண்டு, பரந்தன் சந்தியில் குட்டி சிறி என்பவரின் சிலை வைத்திருந்தார்கள். அந்த சிலையை அப்படியே தகர்த்தி எறிந்துவிட்டு அவர்கள் தங்களது ஆட்களின் சிலையை வைக்க ஏற்பாடு செய்கிறார்கள். போனமுறை நான் போனப்போ ஆனையிறவு பிடிச்சப்போ அதன் அடையாளமாக டாங் ஒன்றை எடுத்து வைத்திருந்தார்கள். அதை பார்த்து பாராட்டிக்கொண்டிருந்தோம். இப்போ அதே டாங்கை அவர்கள் எடுத்து வைத்துக்கொண்டு நம்மட்டை இருந்து பறித்ததாக சொல்லி அதை வைத்து அதை சுற்றி பூங்கா மாதிரி அமைத்து அதை ஒரு சுற்றுலா தளமாக மாற்ற முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அங்க நிற்கவே முடியல்லை. ஆனையிறவு என்று தமிழில் இருந்த பதாகையை களட்டிவிட்டு சிங்களத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள். தமிழ் வார்த்தையே அங்கு காணவில்லை. முழுதும் சிங்கள வார்த்தைகளே காணப்பட்டன.
மாவீரர் துயிலுமில்லத்தை பார்க்கும் சந்தர்ப்பம் உங்களுக்கு கிடைத்ததா?
பார்த்தேன். எல்லாம் இடிந்து தரைமட்டமாக இருந்திச்சு. அது என்ன மாதிரி சோலைமாதிரி இருக்கும் இடம். மாவீரர் பிறப்பு இறப்பு எல்லாம் போடப்பட்டு மிக அழகாக காட்சி தரும். இப்போது எல்லாமே சிதைந்து இருந்தது.
அப்போ, தமிழ் மக்களின் வரலாற்றை சிதைத்திருக்கிறார்கள்!
ஆமா, சிங்களவனை ஒருபோதும் நாம் நம்பமுடியாது. என்னதான் தேர்தலிற்கு அப்புறம் என்று உறுதி மொழி வழங்கினாலும் அவன்களை நம்பவே முடியாது. நம்ம நம்மளுக்காக நம்மளா கூட்டு சேர்ந்து நம்மளா உரிமைகளைப் பெற்றாலொழிய அவன் கொடுப்பான் என்று துளிகூட நம்பமுடியாது. அது நல்லா தெரிந்திச்சு. யாழில் சிங்கள சட்டவாளர் ஒருவருடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது. அவன் பொன்சேகாவுக்கு ஏஜென்ராக இருந்தான். அவர் சொன்னார்” பிரபாகரன் இருக்கிறப்போ கொஞ்ச பயமாவது இருந்திச்சு எங்களுக்கு, இப்போ அவர் இருக்காரோ இல்லையோ இப்ப நீங்க எங்களோட காலடியில இருக்கிறீங்க. என்று ஓபினாகவே சொன்னான். சிங்கள வழக்கறிஞர் பொன்சேகாவுக்கு ஏஜெண்டாக யாழ் வந்திருந்தான். வழக்கறிஞன் என்ற ரீதியில் பேசிட்டிருந்தான். அவங்களை நம்பி ஒன்றும் செய்ய முடியாது.
நம்மளா செய்யணும். அதுவும் அயல்நாட்டில் இருக்கிற நம்மட மக்கள் எல்லம் ஒன்று சேர்ந்து ஒரு இதை எடுத்து நிமிர்த்தினாலொழிய நம்மோட ஆதரவாளர்களை வைத்து நாம் இருக்கும் நாடுகளிற்கு அழுத்தம் கொடுத்து வேற வழியின்றி அவர்கள் கொடுத்தாலொழிய அவனாக செய்வான் என்று நாம் நினைக்கவே கூடாது. கனவே காணக்கூடாது. அந்தமாதிரி இருக்கிறது.
நம்முடைய மக்கள் மீண்டும் ஒரு தடவை புலம்பெயர் தேசங்களில் போராட்டங்கள் நடத்த வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
நிச்சயம். அது எந்தவகையாக இருப்பினும் நம்முடைய போராட்டத்தின் மூலமே நாம் நம்முடைய உரிமையை வெல்ல முடியும். நம்மளா பண்ணினால் தான் உண்டு. இந்தியா பிற நாடுகள் உறுதி மொழ் கூறுகின்றன என்று நம்புவது வீண். சுயநிர்ணயத்தை கொடுக்க இந்தியாவோ மற்றவனோ ஒத்துழைக்க மாட்டான். நம்மை பகடைக்காயாக வைத்து கேந்திர முக்கியத்துவம் அரசியலிற்காக வேலை பார்ப்பாங்களே ஒழிய நமக்காக செய்யமாட்டார்கள். எனவே, அதனை அடைய எமது மக்களின் போராட்டமும் ஒற்றுமையும் இரண்டும் இருந்தால் தான் இதை அடைய முடியும். இல்லையென்றால் வேறு வழியில்லை.
தமிழீழ அரசாங்கம் இருக்கும் போது நம்பாத மக்கள் தற்போது தமிழீழ அரசாங்கத்தின் ஆயுதம் மௌனிக்கப்பட்ட பின்னர் தமிழீழப்போராட்டத்தில் மிகுந்த அக்கறையாக இருக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
நிச்சயாமாக், முன்பைவிட தலைவர் மீதான பாசம் பண்மடங்கு அதிகரித்து காணப்படுகிறது.
சரி எங்களின் போராட்டத்திற்கு உங்களினுடைய தமிழ்நாட்டு தமிழர்களின் ஆதரவினையும் நாங்கள் கேட்கிறம்.
நிச்சயமாக. தற்போது தமிழ்நாட்டு மக்களின் நிலையில் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. இல்லையென்றாலும் ஆதரவை நாங்கள் திரட்டுவோம்.
சரி எங்களூடன் தொடர்பினை மேற்கொண்டதற்கு மிக்க நன்றி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக