தாயகம் தேசியம் சுயநிர்ணயம் அதுவே தமிழர்களது நிலைப்பாடு: சம்பந்தன்
தமிழர்களின் வடக்கு கிழக்கு மாகாணங்கள் ஒன்றிணைக்கப்பட்டு அவர்கள் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களது சுயநிர்ணய உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்ட தீர்வே தமது கொள்கையென தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நேற்று நடைபெற்ற தமிழரசு கட்சியின் மாநாட்டில் தெரிவித்தார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழரசு கட்சியின் 60 ஆண்டு நிகழ்வில் தமிழரசு கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாற்றையும் தமிழர்களது நிலைப்பாடு பற்றியும் விளக்கமளித்தார். அவ்வுரையின் முக்கிய பகுதிகள் பகுதி வருமாறு:
தமிழ்பேசும் மக்கள் அதாவது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சரித்திர ரீதியாக வடக்கு-கிழக்கு மாகாணங்களில் வந்திருக்கிறார்கள். அந்த அடிப்படையில் இரு மாகாணங்களும் ஒன்றிணைக்கப்பட்டு அதிகாரபகிர்வாக ஒரு நிர்வாக அலகு இருக்கவேண்டும் என்ற கருத்து இருந்தது.
தமிழர்கள் ஏமாற்றப்பட்ட வரலாறு
1987 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் தமிழர் ஐக்கிய முன்னனி 13 வது அரசியல் சாசனத்தை முழுமையாக நிராகரித்தது. அதற்கு பின்னர் அப்போதைய அரச தலைவர் பிரேமதாச 1993 ஆம் ஆண்டு மங்கள முனசிங்க தெரிவுக்குழுவால் ஆவணம் ஒன்று தயாரிக்கப்பட்டது. அந்த ஆவணத்தின்படி இலங்கையில் மாகாணங்களுக்கு இந்திய மாநிலங்களில் உள்ள அதிகாரத்தின் அடிப்படையில் அதேவிதமான அதிகாரங்கள் கொடுக்கப்படவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. காணி காவல்துறை அதிகாரங்கள் வரும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்பின்னர் அரச தலைவராகவிருந்த சந்திரிகா குமாரதுங்க காலத்தில் 1995 ஆம் ஆண்டு ஆவணி மாதத்திலும் 2000 ஆம் ஆண்டு ஆவணி மாதத்திலும் முன்வைக்கப்பட்ட பிரேரணைகள் பிரேமதாச கொண்டுவந்த பிரேரணைகளுக்கு பதிலாக அமைந்தன.
1998 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசமைப்புக்கு அப்பால் சென்றது. அது சிறந்த பிரேரணையாக இருந்தது. அதன்பின்னர் 2002 ஆம் ஆண்டு மார்கழி மாதம் ஒஸ்லோ பிரகடனம் வெளியிடப்பட்டது. ஒஸ்லோ பிரகடனம் என்னவென்றால் உள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் சரித்திர ரீதியாக வாழ்ந்துவந்த பிரதேசங்களில் ஒருமித்த நாட்டுக்குள் ஒரு சமஷ்டி அடிப்படையிலான தீர்வுதான் ஆராயப்படும் என்பதாகும்.
அதன்பிறகு தற்போதைய அரசதலைவரின் ஆட்சிகாலத்தில் 2006 ஆம் ஆண்டு மார்கழி மாதம் பெரும்பான்மையான நிபுணர் குழுவால் தீர்வு யோசனைகள் முன்வைக்கப்பட்டன. ஆனபலட நியாயமான நடைமுறைப்படுத்தகூடிய நிறைவேற்றகூடிய அரசியல் தீர்வை ஏற்படுத்தகூடிய வகையில் அந்த சிபார்சுகள் அமையவில்லை.
பிரேமதாசா காலத்தில் சந்திரிகா காலத்தில் ரணில் காலத்தில் மகிந்த ராஜபக்ச காலத்தில் எடுக்கப்பட்ட சகல முயற்சிகளையும் தமிழ் மக்கள் நிராகரித்துவிட்டார்கள்.
அதற்கு பதிலாக நடைமுறைப்படுத்த கூடிய நிலை நிறுத்தகூடிய ஓர் அரசியல் தீர்வு காணவேண்டும் என்பதை இம்முயற்சிகள் எடுத்துகாட்டின.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வடக்கு கிழக்கில் உள்ள 23 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 22 பேர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் தெரிவுசெய்யப்பட்டனர்.
துரதிஸ்டவசமாக மகிந்தவின் காலத்தில் தமிழ் தேசிய பிரச்சனைக்கு தீர்வுகாணும் முயற்சிகள் பின்னோக்கி சென்றன. சர்வ கட்சி மாநாடு அமைத்து தான் விரும்பியி கட்சிகளுடன் மாத்திரம் மகிந்த பேச்சுக்கள் நடத்தினார். ஒரு தீர்வும் காணப்படவுமில்லை. 18 வருடங்களாக இணைக்கப்பட்டிருந்த வடக்கு கிழக்கை துண்டித்தார்கள்.
நாடாளுமன்றத்தின் சாதாரண சட்டங்கள் மூலமே வடக்கு கிழக்கை இணைக்கலாம் என நீதிமன்றம் கூறியபோதும் அதனை செய்வதற்கு மகிந்த தயாராகவிருக்கவில்லை.
மன்மோகன் சிங்கை சந்தித்து இதுபற்றி முறையிட்டபோது வடக்கு கிழக்கை பிரிக்கவிடமாட்டோம் என உறுதிமொழி தரப்பட்டது. ஆனால் மகிந்த தான் நினைத்ததை செய்துமுடித்துவிட்டார்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாடு
எம்மை பொறுத்தவரையில் தமிழ் தேசிய பிரச்சனைக்கு பின்வரும் இரண்டு விடயங்களின் அடிப்படையில் தீர்வு காணப்படவேண்டும். ஒன்று தமிழ் மக்கள் தேசிய இனம் மற்றையது தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் சரித்திர ரீதியாக வடக்கு கிழக்கு பகுதியல் வாழ்ந்துவருகின்றார்கள். எனவே எமது மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு.
ஐநாவின் சாசனங்களில் சமூக பொருளாதார கலாசார விழுமியங்கள் சம்பந்தமாக உருவாக்கப்பட்டுள்ள அரசியல் சாசனத்தில் இவை அடங்கியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கு இந்த உரிமைகள் உண்டு. சொந்த மண் உண்டு. சொந்த கலாசாரம் உண்டு. சொந்த பாரம்பரியம் உண்டு. சகலதையும் அடைவதற்கு உரித்து உண்டு. இதை எவரும் மறுக்கமுடியாது.
இதை அடைவதற்கு சர்வதேச சட்டங்களின் முழு உரிமையும் சுதந்திரமும் உண்டு. இதுவே தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் அரசியல் தீர்வாக இருக்கும்.
எதிர்வரும் அரச தலைவர் ஊடாகவும் அதனை தொடர்ந்து நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல் ஊடாகவும் அதற்கான வழிகள் பிறக்கலாம்.
மகிந்தவின் ஆட்சி என்ன செய்கின்றது
எதிர்வரவுள்ள அரச தலைவர் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரிப்பதற்கான முடிவு அனைவருடனும் ஆலோசித்து அவர்களின் கருத்துக்களை அறிந்த பின்னரே எடுக்கப்பட்டது.
மகிந்தவுடன் மூன்று மணித்தியாலங்கள் பேச்சு நடத்தினேன். வன்னியில் இடம்பெயர்ந்த மக்களை தமது சொந்த இடங்களில் மீளகுடியேற அனுமதிக்குமாறு அவரிடம் கேட்டேன். வலி-வடக்கில் இடம்பெயர்ந்தவர்கள் இருபது வருடங்களாக தமது இருப்பிடங்களுக்கு செல்லமுடியாதாவாறு தடுக்கப்பட்டுள்ளனர்.
மீளக்குடியமர்வை அரச தலைவர் தேர்தலுக்கு முன்னர் ஆரம்பித்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னர் நிறைவேற்றுமாறு கேட்டார். ஆனால் இரண்டு தேர்தல்களும் முடிவடைந்தபின்னர் படிப்படியாக அவற்றை செய்வதாக மகிந்த கூறினார்.
இராணுவ குடியேற்றம் பற்றியும் இராணுவ மயமாக்கல்கள் பற்றியும் கேட்டேன். ஏ-9 வீதியின் இரண்டு பக்கத்திலும் காணி அபகரிப்பு நடந்துகொண்டிருக்கிறது. காவல்துறை நிலையத்திற்கு 50 ஏக்கர் காணி எனவும் இராணுவ முகாமுக்கு 500 ஏக்கர் காணி எனவும் அபகரிக்கப்படுகிறது. காவல்துறை நிலையம் அமைக்க இரண்டு ஏக்கர் போதாதா?
இறுதியாக அரச தலைவர் மகிந்த ராசபக்சவை சந்தித்தபோது இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகாவையா ஆதரிக்க போகின்றீர்கள் என கேட்டார். நீங்கள் தானே எமக்கு வழிகாட்டினீர்கள். வடக்கு மாகாண ஆளுனர் இராணுவ தளபதியாக இருந்தவர். கிழக்கு மாகாண ஆளுனர் கடற்படை தளபதியாக இருந்தவர் என திரும்பி அவரிடம கேட்டேன்.
புலத்து தமிழர்களின் பங்களிப்பு
புலம்பெயர்ந்தவர்கள் அனைவரும் எமது உரிமை போராட்டத்தில் கணிசமான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். போரின் ஒரு கட்டத்தில் பெரும் உதவிகளை செய்திருக்கிறார்கள். அவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். முன்னர் செய்த அதே உதவிகளை எங்கள் மக்களின் புனர்வாழ்வு கட்டமைப்பு சம்பந்தமாக உதவிகளும் அந்த அளவுக்கு இருக்கவேண்டும் என அவர்களிடம் கேட்டுள்ளேன். அதனை நிச்சயம் செய்வோம் என கூறியுள்ளனர்.
பண உதவி மட்டுமல்ல நிபுணத்துவ உதவியும் ஆலோசனைகளும் எமக்கு வேண்டும் என தெரிவித்துள்ளோம். அவர்கள் அதனை செய்வதற்கு தயாராக இருக்கிறார்கள்.
அனைவரது பங்களிப்புடன் எமது மக்களின் நல்வாழ்வுக்காக தொடர்ந்தும் உழைப்போம். என்று அவர் உரையாற்றினார்.
(Visited 20 times, 20 visits today)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக