திங்கள், 18 ஜனவரி, 2010

அரசு நிர்வாக மொழியாகத் தமிழ் ஆக வேண்டும்



சென்னை, ஜன.17: நடைபெறவிருக்கிற செம்மொழி மாநாட்டிற்குப் பின்பு அரசின் நிர்வாக மொழியாக தமிழை ஆக்க உறுதி எடுக்க வேண்டும் என்று மத்திய நிதித்துறை இணை அமைச்சர் எஸ்.எஸ்.பழனி மாணிக்கம் கூறினார்.சென்னை சங்கமத்தின் ஒரு பகுதியாக தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை சா.கணேசன் எழுதிய "மாமன்னன் ராஜராஜன்' நூல் வெளியீட்டு விழாவும், தஞ்சைப் பெரிய கோயில் கட்டப்பட்டு ஆயிரமாண்டு விழாவும் நடந்தது. அதில் கலந்து கொண்டு அமைச்சர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் பேசியதாவது: "ராஜராஜன் கட்டிய பெரிய கோவிலைப் பார்க்கும் எல்லாருக்கும் பெரிய அளவுக்கு வியப்புதான் தோன்றும். ராஜராஜ சோழனின் ஆட்சி மன்னராட்சி என்ற பெயரில் நடந்த மக்களாட்சி. அந்தக் காலத்தில் கலையையும், இலக்கியத்தையும் வளர்க்க மதம் பயன்பட்டது. ஆட்சியும் மதமும் பிரிக்க முடியாதவாறு அப்போது இருந்தது. இன்று நாம் செய்ய விரும்பும் மாறுதல்களை ராஜராஜசோழன் அன்றே செய்திருந்தார். பெரிய கோயிலுக்கு விளக்கேற்ற கிராம மக்களிடம் அன்றைக்கு கால்நடைகளை வளர்க்கக் கொடுத்து, அதிலிருந்து வரும் வருமானத்தைப் பயன்படுத்தினார். இன்றும் நாம் சொல்லக் கூடிய சுயஉதவிக் குழுக்களின் பணிகளை அன்றே செயல்படுத்திய மன்னன் அவர். நமது வரலாறு எழுச்சியும் வீழ்ச்சியும் உள்ளதாக இருக்கிறது. இதுவரை பதிவு செய்யப்பட்ட வரலாற்றில் ஆயிரம் ஆண்டுகால வரலாற்றைப் பதிவு செய்தவர் ராஜராஜன். நாம் இன்னும் வரப்போகிற ஆயிரம் ஆண்டுகளில் நமது பண்பாடு வீழாமல் இருக்க என்ன செய்யப் போகிறோம் என்பதுதான் இப்போது முக்கியம்'. விழாவுக்குத் தலைமையேற்றும், சா.கணேசன் எழுதிய "மாமன்னன் ராஜராஜன்' நூலை வெளியிட்டும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் ம.ராஜேந்திரன் பேசியதாவது:ராஜராஜனின் கோயில் பக்திக்காக மட்டும் கட்டப்பட்டதில்லை. ராஜராஜனின் காலத்திற்கு முன்பு தஞ்சையை ஆண்ட மன்னர்களின் ஆட்சிப் பரப்பு அவன் காலத்தில் போல இந்த அளவுக்கு விரிவானதாக இல்லை. ராஜராஜன் காலத்திலேயே அது மிக விரிவானதாக ஆனது. அதன் குறியீடாகத்தான் ராஜராஜன் கோயில் கட்டினான். தஞ்சைப் பெரிய கோயிலை மிகப் பெரிதாகக் கட்ட வேண்டும் என்ற எண்ணம் ராஜராஜனுக்கு ஈழப் போரின்போது அவன் கண்ட பெரிய பெரிய புத்தர் சிலைகள் அவனுக்கு ஏற்படுத்தியிருக்க வேண்டும். பிற கோயில்களில், கோயிலைக் கட்டிவிட்டுப் பின்பு மூலவரை வைப்பார்கள். தஞ்சைக் கோயிலில் மூலவரை வைத்துவிட்டுப் பின்பு கோயிலைக் கட்டினார்கள். மூலவர் இருக்குமிடத்திற்கு மேலே கோயில் உயரமாகத் தெரிய வேண்டும் என்று ராஜராஜன் நினைத்தான். பெரிய கோயில் என்று பெயரளவில் மட்டும் இல்லாமல் பெரிய நந்தி, உயர்ந்த கோபும் என்று கட்டினான். தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டுவதற்கு முன்பு ஆற்று மணலைக் கொட்டி அதன் மீது அடித்தளம் அமைத்துக் கோயில் கட்டியிருக்கிறார்கள். கட்டிடக் கலையின் உயர்ந்த தொழில்நுட்பம் } அறிவுக் கருவூலம் அந்தக் காலத்திலேயே தமிழர்களுக்குத் தெரிந்திருக்கிறது என்பது இதிலிருந்து தெரிகிறது. அதன் தொடர்ச்சியை நாம் விட்டுவிடக் கூடாது. விழாவில் கலந்து கொண்டு குடவாயில் பாலசுப்ரமணியம் பேசியதாவது:தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ராஜராஜனுக்கு 41 சிறப்புப் பட்டங்கள் இருந்தன. அதில் அவனுக்கு மிகவும் பிடித்த பட்டம் ஜனநாதன் என்பதே. எல்லா மக்களாலும் விரும்பப்படும் மன்னனாக இருக்கவே அவன் ஆசைப்பட்டான். கோயில்களில் பொறிக்கப்பட்டுள்ள மெய்கீர்த்திகளில் கோயில் கட்ட கொடை கொடுத்த சாதாரண மக்களின் பெயரும் உரிய மரியாதையோடு பொறிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வம், ""ராஜராஜன் கட்டிய பெரிய கோயில் 2010-ல் எதன் குறியீடாக இருக்க முடியும்? ராஜராஜன் காலத்தில் பக்தி இலக்கியம் மீட்டு எடுக்கப்பட்டு உள்ளது. மீட்டெடுப்பின் குறியீடாகவே ராஜராஜன் கோயில் உள்ளது'' என்றார். விழாவில் வரலாற்று ஆய்வாளர் செண்பக லட்சுமி, தொல்லியல்துறையைச் சேர்ந்த சத்யபாமா பத்ரிநாத், கவிஞர் இளையபாரதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக