புதன், 4 நவம்பர், 2009

uthayan_logoகடந்த மே மாதம் நடுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை நிரந்தரமாகத் தோற்கடித்து வெற்றி வாகை சூடிக்கொண்டாயிற்று என இலங்கை அரசு அறி வித்தபோது, மஹிந்தர் அரசின் செல்வாக்கு உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் அசைக்கமுடியாத உறுதியோடு கிளர்ந்து நின்றது.

ஆனால் இப்போது ஆறு மாதங்கள் கடந்த நிலையில் நிலைமை தலைகீழாக மாறும் அறிகுறி. யாரும் நம்பமுடியாத விதத்தில் குறுகிய காலத்தில் செல்வாக்குச் சரிவு வெளிப் படையாகத் தென்படத் தொடங்கிவிட்டது.

அரசியல், இராணுவ, பொது நிகழ்வுகளில் கட்டவிழும் சம்பவங்கள், மஹிந்தர் அரசின் இறுக்கமான பிடி தளர்ந்து வருவதை வெளிப்படுத்தி நிற்பது கண்கூடு.

உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் ஒரே சமயத்தில் கடும் நெருக்குதல்களை எதிர்கொள்ளும் இக்கட்டு மஹிந்தரின் நிர்வாகத்திற்கு ஏற்பட்டிருப்பதும் மிகவும் வெளிப்படை யான உண்மை.

அசைக்கமுடியாத அரசு என்றும், எதிர்க்கட்சிகள் நெஞ்சு நிமிர்த்தி எதிர்கொள்ள முடியாத கட்டமைப்பு என்றும் கரு தப்பட்ட கொழும்பு ஆட்சிப்பீடம் ஆறு மாதங்களுக்குள் பொலபொலத்துப் போகும் துரதிர்ஷ்டம்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ நட வடிக்கைகளில் போர் வெறித் தீவிரத்தோடு முனைந்து நின்ற முக்கூட்டு “ஹீரோ”க்கள் இடையே நிலவுவதாகக் கூறப்படும் முரண்பாடு, இந்த அரசுத் தலைமையின் ஆதிக் கப்பிடிக்கு விழுந்த முதல் பலவீனம்.

புலிகளுக்கு எதிரான பெரும் போரை வழி நடத்திய ஜென ரல் சரத் பொன்சேகாவே மிக விரைவில் சீருடைகளைக் களைந்துவிட்டு, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிரான அரசியல் களத்தில் இறங்குவார் என்ற பேச்சுப் பரவலாக அடிபடத் தொடங்கியபோதே மஹிந்தரின் அரசியல் செல்வாக்கும் சந் தேகத்துக்கு உரியதாகிச் சரியத் தொடங்கிவிட்டது.

தென்னிலங்கையின் பௌத்த, சிங்களத் தீவிரப் போக் குடைய பேரினவாதத் தேசியவாதிகளின் நேரடி ஆதரவும், சில சர்வதேச சக்திகளின் பின்புல ஆதரவும், ஜெனரல் பொன்சேகாவுக்குக் கிட்டி வருகின்றன என்று அடிபடும் பேச்சுகளில் உண்மை இருக்குமானால், மஹிந்தரின் செல் வாக்குக்குச் சவால் விடும் மூன்றாவது சக்தியாக ஜெனரல் பொன்சேகா மேல் கிளம்புவது அப்படி ஒன்றும் சிக்கலான விடயமாக இருக்காது என்பது அரசியல் அவதானிகளின் கணிப்பீடு.

இதேவேளை, நாட்டின் பொருளாதார நிலைமை மோசமடைந்து வருகின்றமையும் மஹிந்தருக்கு ஆதரவான அலை சற்றுப் படுத்துப் போனமைக்குப் பிரதான காரணமாகும். இந்தப் பொருளாதார நிலை வீழ்ச்சிக்குப் பின்னால் பல மூலங்கள் உள்ளன. தீர்க்கதரிசனமற்ற பொருளாதாரக் கொள்கை, மோசமான முகாமைத்துவம், நிதி வீண் விரயம், ஊழல் மோசடிகள் என்று அந்த மூலங்களின் பட்டியல் நீளும்.
இந்தப் பொருளாதாரப் பின்னடைவுகள் காரணமாக, மக் கள் விரும்பும் வரவு செலவுத் திட்டம் ஒன்றை முன் வைக்க முடியாத இயலாமையில் சிக்கிக் கிடக்கிறது அரசு. அதனால் அதனைச் சமாளிக்க நிதி ஒதுக்கீட்டு அறிக்கை என்ற தந்திரோபாய வழியை நாடியிருக்கின்றது அது.
பொருளாதாரப் “பொட்டுக்கேட்டை” அதனால் ஏற்பட்ட பாதிப்பை மக்கள் முன் ஒப்புக்கொள்ளாமல் இப்போதைய பாட்டுக்குச் சமாளித்தபடி பொதுத்தேர்தலை சந்திக்கும் உத்தி இது. பொதுத்தேர்தலின் பின்னர் புதிய அரசின் மூலம் வரவு செலவுத் திட்டத்தை வெளிப்படுத்தி உண்மையை ஒப்புக்கொள்ளும் காய் நகர்த்தல் கட்டவிழ்கிறது. இது சரிப் பட்டு வருமா என்பதற்குக் காலம்தான் பதில் கூறவேண்டும்.

இப்படி வரவு செலவுத் திட்டத்தையும் அறிவிக் காமல், அதன்மூலம் அரச ஊழியர்களுக்குக் கிடைக்க வேண்டிய சம்பள உயர்வு பற்றிய பிரகடனங்களையும் வெளியிடாமல், காலத்தை இழுத்தடித்து, தேர்தல் முடியும் வரை விடயத்தைச் சமாளிக்கும் அரசுத் தலைமையின் தந்திரத்துக்கு எதிராக தொழிற்சங்கங்கள் பலவும் ஏற்கனவே முரசு கொட்டி, யுத்தப் பேரிகை முழங்கிக் கிளர்ந்து எழுந்துவிட்டன.

இதன் விளைவாக அத்தியாவசிய சேவைத் துறைகளில் வேலைநிறுத்தங்களும், அதனால் சாதாரண வாழ்வியலில் அமைதி கெட்டு நெருக்கடிகளும் தோன்றும் வாய்ப்புகள் அதிகரித்துள்ளன. அசைக்கமுடியாத அரசு என்று ஆறு மாதங்களுக்கு முன்னர் கருதப்பட்ட இந்த ஆட்சிப்பீடத்தை தொழிற்சங்கக் கூட்டமைப்புகள் சீண்டிப் பார்த்து நோண் டும் அளவுக்கு நிலைவரங்களில் திடீர் மாற்றம்.

யுத்தவெற்றி பற்றிய மகிழ்ச்சியில் திளைத்துக் கிடந்த தென்னிலங்கையை, வயிற்றைக் கிள்ளும் பசி இப்போது அதிகம் உறுத்தத் தொடங்கிவிட்டது. விலைவாசி உயர்வு, வாழ்க்கைச் செலவு அதிகரிப்புப் போன்றவை தென்னிலங் கைப் பாமர சமூகத்தை மலைக்கவைத்து நிற்கின்றன.

“யுத்தத்துக்கு அவர்; வாழ்க்கைச் செலவு அதிகரிப்பைச் சமாளிக்கவும், மேற்குலகைக் கையில் போட்டு அதிக உதவித் திட்டங்களைப் பெற்றுத்தரவும் வேறு எவரோ….?” என்று சிந்திக்கத் தலைப்படும் நிலையைத் தெற்கு மக் களுக்கு இந்த ஆட்சிப்பீடம் ஏற்படுத்தி விட்டது இந்த ஆறுமாத காலத்துக்குள்.

“ஜி.எஸ்.பி.” வரிச்சலுகை விலக்கு, யுத்தக் குற்ற விசா ரணை என்று பல அஸ்திரங்களைக் கையில் வைத்துக் கொண்டு, உலக நாடுகள் பலவும் கொழும்பை மிரட்டத் தொடங்கியிருக்கின்றமை மற்றுமொரு கவனிக்கத்தக்க அம்சமாகும்.

ஊழல், மோசடிகள், குளறுபடிகள் குறித்தெல்லாம் மக் கள் பேசத் தொடங்கிவிட்டனர். போதாக்குறைக்கு யுத்தம் முடிந்து ஆறு மாதங்கள் கடந்த பின்னரும் ஊடகங்களுக்கு எதிரான ஆட்சிப்பீட அடக்குமுறை தொடர்கதையாக நீடிக் கின்றது.

இவை எல்லாம், இதுவரை நொந்து, நூலாகித் துவண்டு போய்ப் படுத்துக் கிடந்த எதிர்க்கட்சிகளுக்கு “விற்றமின்” ஊக்க மாத்திரைகளாக வந்து வாய்த்திருக்கின்றன.

செல்வாக்குச்சரிவு என்ற நோய் ஆட்சி மாற்றத்துக்கு வழி செய்யுமா? பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!

நன்றி: ஆசிரியர் தலையங்கம், உதயன் நாளிதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக