வியாழன், 5 நவம்பர், 2009

அகதிகளின் உண்மை நிலையை முதல்வர் தெளிவுபடுத்த வேண்டும்: விஜயகாந்த்சென்னை, நவ. 4: "இலங்கைத் தமிழ் அகதிகள் குறித்த உண்மை நிலை எது என்பதை முதல்வர் கருணாநிதி மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்' என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கோரியுள்ளார். இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை: "தமிழகத்தில் இலங்கைத் தமிழ் அகதிகள் 25 ஆண்டுகளுக்கு மேலாக முகாம்களில் அடைபட்டுள்ளனர். தங்கள் குறைகளை நேரில் தெரிவிக்க வட்டாட்சியரை கூட அணுக முடியாமல் தவித்த அகதிகள், இன்று அமைச்சர்களையும், அதிகாரிகளையும் சந்திக்கின்றனர். இன்றைய திமுக அமைச்சர்களுக்கு, இலங்கை அகதிகள் முகாம் புதிய புண்ணிய தலங்களாக ஆகிவிட்டன. இதைக்கண்டு இலங்கைத் தமிழ் அகதிகளே திகைத்து திண்டாடிப் போய் என்ன கேட்பது என்று தெரியாமலே தவிக்கின்றனர். ஏதோ இப்போதாவது இந்த அகதிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததே என்பதில் நம்மைப் போன்றவர்கள் திருப்தியடையலாம். ஆனாலும் முகாம்களில் அடிப்படை வசதிகளுக்கு இந்த அரசு செலவழிக்கப் போவதாக அறிவித்துள்ளது வெறும் ரூ.12 கோடி தான். இது மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வரப்போவதில்லை. அங்குள்ள மக்களுக்கு அடிப்படை வசதியும், உயர்தரக் கல்வியும், வருமானம் தரத்தக்க வேலைவாய்ப்பும், தொழில் செய்ய வசதியும் ஏற்படுத்தி தருவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்தியாவுக்கு வந்த திபெத்திய அகதிகள் எல்லா வசதிகளையும் பெற்று நன்றாகப் படித்து வேலைவாய்ப்பு, வணிகம் மற்றும் தொழில் துறைகளிலும் சிறந்து விளங்குகின்றனர். ஆனால், இங்குள்ள தமிழ் அகதிகள் இத்தனை ஆண்டுகளாகியும் முதல்வரின் கண்ணீரை வரவழைக்கும் நிலையில்தான் உள்ளனர். இலங்கையில் போர் ஓய்ந்துவிட்டதாகவும், இனி அங்குள்ள தமிழர்கள் அவரவர்கள் சொந்த இடங்களுக்கு அங்குள்ள முள்வேலி முகாம்களிலிருந்து திரும்புவதாகவும், முதல்வர் சார்பில் இலங்கை சென்றுதிரும்பிய எம்.பி-க்கள் குழு அறிக்கை தந்துள்ளது. அது உண்மையானால் தமிழகத்தில் உள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் ஏன் தங்களுடைய தாயகமான இலங்கைக்குத் திரும்ப விரும்பவில்லை? அங்கு அமைதி ஏற்பட்டுள்ளது என்பதை உண்மையென்று முதல்வர் நம்பினால் இங்குள்ள அகதிகள் முகாம்களில் உள்ள தமிழர்களுக்கு நிரந்தர வசதி செய்து தர வேண்டுமென்றும், நிரந்த இந்தியக் குடியுரிமை வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுவது ஏன்? இலங்கையில் உள்ள நிலைபற்றி இன்பநாள் இதே எனப் பாடுவோம் என்ற முதல்வர், இப்போதுது துன்ப நாள் இதே என கண்ணீர் விடலாமா? இதில் எது உண்மைநிலை என்பதை நாட்டு மக்களுக்கு தெளிவுப்படுத்த வேண்டும்' என்று விஜயகாந்த் கேட்டுகொண்டுள்ளார்.
கருத்துக்கள்

சரி!சரி! இனப் படுகொலைகளுக்குச் சூத்திரதாரியான காங். கட்டளைக்கிணங்க ஏதோ நாடகம் ஆடுகிறார்கள் என்று தெரியாதா? பேசாமல் விட்டு விடுவீர்களா அதை விட்டு விட்டு மிகவும் குடைந்தால் அவர் என்ன செய்வார்? நீங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறீர்கள். காங்.உடன் சேர உள்மனம் துடித்தாலும் வெளியே எதிர்த்து அறிக்கை அளிக்க முடிகிறது. அவருக்கு அவ்வாறு இல்லையே! பெறவேண்டியவருக்குப் பெறவேண்டிய பதவி வர வேண்டியுள்ளது! பெக்ட்ராமில் இரு்நது தப்பிக்க வேண்டியுள்ளது! இன்னும் எத்தனையோ சிச்கல்கள் உள்ளன.ஏதோ இதைச் சாக்கிட்டாவது சில நன்மைகள் செய்யலாம் எனத் திட்டம் இட்டால் அதற்கும் விடமாட்டீர்களா? இலங்கைத் தமிழர்களைப்போல் ஈழத் தமிழர்களையும் நாடற்றவர்களாக ஆக்குவதற்கான சதியின் ஒரு பகுதி என்னும் உண்மையைப் போட்டு உடைக்கச் சொல்கிறீர்களா?

உணர்வற்ற நம்மவர்களை எண்ணி வருந்தும் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2009 3:12:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக