வியாழன், 5 நவம்பர், 2009

Latest indian and world political news information

சென்னை : படுகர் சமூகத்தின் பிரச்னைகளை எடுத்துரைக்க வந்த படுகர் இனத் தலைவர்களுடன் துணை முதல்வர் ஸ்டாலின் பேச மறுத்ததால், அதிருப்தியில் படுகர் இன மக்களும், தலைவர்களும் தங்களது சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர். நீலகிரி மாவட்டத்தில் படுகர் இன மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அவர்கள் தங்களுக்குள் ஏற்படும் பிரச்னைகளை தாங்களே பேசி தீர்த்துக் கொள்கின்றனர். எந்தப் பிரச்னைக்கும் கோர்ட்டை நாடிச் செல்வதில்லை. இந்த கட்டுப்பாட்டை மீறி சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததாக தெரிகிறது.


இப்பிரச்னையில் படுகர் இனத் தலைவர் பீமா கவுடா கைது செய்யப்பட்டார். பின் நீலகிரி மாவட்டத்தில் ஏற்பட்ட பதட்டத்தால் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதற்கு நன்றி தெரிவிக்கவும், படுகர் இன கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயல்படும் முன்னாள் எம்.எல்.ஏ., குண்டா கவுடா மற்றும் தி.மு.க., மாவட்ட செயலர் ராமச்சந்திரன் ஆகியோர் மீது புகார் கூறவும், படுகர் இனத்தைச் சேர்ந்த தலைவர்கள் நேற்று துணை முதல்வர் ஸ்டாலின் வீடு முன் குவிந்தனர். ஸ்டாலினை சந்திக்க அவர்கள் முன் அனுமதி பெறவில்லை.


ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்டாலின் வீட்டு முன் அதிகாலையில் 100க்கும் மேற்பட்ட படுகர் இன தலைவர்கள் குவிந்ததால், பாதுகாப்பு போலீசார் பதட்டம் அடைந்தனர். நீண்ட நேரம் காத்திருந்த பின், அவர்களில் சிலர் மட்டும் துணை முதல்வரை பார்க்க அனுமதி வழங்கப்பட்டது. கோரிக்கையுடன் சென்றவர்களை, நீலகிரி மாவட்ட தி.மு.க., மாவட்ட செயலர் ராமச்சந்திரனுடன் வரும்படி கூறி, துணை முதல்வர் ஸ்டாலின் பேச மறுத்து விட்டார். இதனால், படுகர் இன தலைவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்தனர்.


படுகர் இனத் தலைவர் பீமா கவுடா நிருபர்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் நான்கு லட்சம் படுகர் இன மக்கள் வாழ்கின்றனர். இதில் பொரங்காடு, குந்தா, தொதநாடு, மேக்குநாடு சீமெ என்று நான்கு வகை உள்ளனர். எங்கள் பிரச்னைகளை சமுதாய பஞ்சாயத்து மூலம் தான் நீண்ட நாட்களாக தீர்த்து வருகிறோம். இது தான் எங்கள் கட்டுப்பாடு. ஆனால், ஒரு சிலர், கோர்ட் மூலம் வழக்கு தொடர்ந்து, சமுதாய கட்டுப்பாடுகளுக்கு எதிராக செயல்படுகின்றனர். இதனால், எங்கள் சமூகம் சீரழிந்து விடும் என்ற அச்சம் எங்கள் மக்களிடம் ஏற்பட்டு உள்ளது. இதற்கு தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., குண்டா கவுடா, மாவட்டச் செயலர் ராமச்சந்திரன் ஆகியோர் உடந்தையாக உள்ளனர். இது குறித்து சொல்ல முயன்ற போது மாவட்டச் செயலருடன் வந்தால் தான் பேச முடியும் என துணை முதல்வர் தெரிவித்து விட்டார். இவ்வாறு பீமா கவுடா பேசினார்.


இதன்பின், அவர்கள் அனைவரும் ஏமாற்றத்துடன் சொந்த ஊருக்கு திரும்பிச் சென்றனர்.


/////////////////////////
கட்சிக்காரர்கள் வந்தால் கட்சிப் பொறுப்பாளருடன் வரச் சொல்வதில் நியாயம் இருப்பதாகக் கருதலாம். பொதுமக்களையும் அவ்வாறு கூறுவது முறையல்லவே! மேலும் . வந்தவர்கள் யாரைப்பற்றி முறையீடு சொல்ல வருகிறார்களோ அவருடன் வாருங்கள் என்பது அறமல்லவே! கட்சிக் கண்ணோட்டத்துடன் இல்லாமல் துணை முதல்வர் என்னும் நிலையில் செயல்பட்டிருக்க வேண்டியவர் தடுமாற்றம் அடைந்துள்ளார். போகட்டும் இனியாவது அவர்களை அழைத்து முறையீடுகளைக் கேட்டு நியாயமானவற்றை உடன் செய்யவேண்டுகிறேன்.
அன்புள்ள இலக்குவனார் திருவள்ளுவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக