வியாழன், 5 நவம்பர், 2009

முல்லைப் பெரியாறு பிரச்னை:
ஆ. ராசாவுக்கு வைகோ கேள்விசென்னை, நவ. 4: ""முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட 2006-ல் கேரளம் விண்ணப்பித்தபோது அதை, அப்போது சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்த ஆ.ராசா தள்ளுபடி செய்யாதது ஏன்?'' என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை: முல்லைப் பெரியாறில் புதிய அணை கட்ட 2006-ம் ஆண்டு மத்திய வனத்துறை மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் கேரளம் விண்ணப்பித்தது. அப்போது அத்துறையின் அமைச்சராக இருந்த திமுகவைச் சேர்ந்த ஆ. ராசா அந்த மனுவை தள்ளுபடி செய்திருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் ஜெய்ராம் ரமேஷ் அனுமதி கொடுக்கும் நிலை வந்திருக்காது. கேரளத்தின் மனு குறித்து ஆ. ராசா முதல்வர் கருணாநிதியிடம் தெரிவிக்காமல் இருந்தால் அது பச்சைத் துரோகம். ஆனால் அவர் தெரிவிக்கவே செய்திருப்பார். கேரளத்தின் மனுவை தள்ளுபடி செய்யாமல் தமிழகத்தின் உரிமையை காவு கொடுத்தது மட்டுமின்றி வரப்போகும் தீமையையும் தடுக்காமல் இருந்து விட்டனர். முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற வஞ்சகத் திட்டத்தோடு புதிய அணை கட்ட கேரளம் முயன்று வருகிறது. புதிய அணை கட்ட வேண்டுமானால் புலிகள் காப்பகம் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் 10 கி.மீட்டருக்கு சாலை அமைக்க வேண்டும். மூன்று பாலங்கள் கட்ட வேண்டும். அதற்காக 1.20 லட்சம் டன் பாறைகள் உடைக்கப்பட வேண்டும். 1020 கிலோ கரிமருந்து பயன்படுத்த வேண்டும். இதனால் அப்பகுதியில் வன உயிரினங்களுக்கும், ஆதிவாசிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். முல்லைப் பெரியாறு அணையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் புதிய அணை கட்ட திட்டமிடுகின்றனர். அதற்காக பாறைகள் உடைக்கும் போது முல்லைப் பெரியாறு அணை தானாக உடைந்துவிடும். முல்லைப் பெரியாறு உரிமை காக்கவும், கேரளத்துக்கு துணைபோகும் மத்திய அரசையும், கடமை தவறிய தமிழக அரசையும் கண்டித்து நவம்பர் 8-ம் தேதி தேனியில் மதிமுக சார்பில் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெறும். நவம்பர் 14-ம் தேதி மதுரை மேலமாசி வீதி -வடக்குமாசி வீதி சந்திப்பில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று வைகோ தெரிவித்துள்ளார்.
கருத்துக்கள்

சரியான கேள்வி! ஆனால், காலங் கடந்து விட்டது. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

By Ilakkuvanar Thiruvalluvan
11/5/2009 3:18:00 AM

ஐயாவுக்கு அன்றைக்கு ஒன்னும் வேலை இல்லை போல

By Sirupakkam-Rajaraman
11/5/2009 1:42:00 AM
உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள் *

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக