தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும்
தொப்புள் கொடி உறவுகள்
அரசியல் தலைவர்கள் தேர்தலில் வாக்கு
திரட்டுவற்காக வாக்காளர்களிடம் என் இனிய தொப்புள் கொடி உறவுகளே என அழைப்பது
வழக்கம். தாய்க்கும் மகளுக்கும் அல்லது தாய்க்கும் மகனுக்கும் சண்டை
நடந்தால் இன்றோடு உனக்கும் எனக்கும் எந்த உறவும் கிடையாது என்று
வசைபாடுவதும் உண்டு. தூய்மையான தொப்புளைக் காண்பித்து நடிகைகள் பாடல்களில்
ஆடுவதும், தொப்புளின் மீது பம்பரங்கள் விடுவதும் அதன் மரபைச் சிதைக்கும் ஒருவகை. தொப்புள் பகுதியை இப்பொழுது விளம்பரங்களிலும், திரைப்படப் பாடல்களிலும் பாலுணர்ச்சி தூண்டும்; பகுதியாக மாற்றிவருகிறார்கள். இதேபோல், கால்நடைகளுடன் உழவர்கள் தங்கள் உறவுகளைப் பேணிக்காத்து வந்தனர். நாளடைவில் கால்நடைகளுக்கும், மனிதனுக்கும் உள்ள தொப்புள் கொடி உறவு அறுந்துவருகிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
தொப்புள் கொடி என்பது கருவுற்ற தாயையும்
அத்தாயின் கருப்பையினுள் வளர்ந்து வரும் குழந்தையையும் இணைக்கும் ஒர்
உறுப்பாகத் திகழ்கிறது. இத்தொப்புள் கொடி வாயிலாகவே கருவுற்ற தாயின்
கருப்பைவளர்சேய்க்கான ஊட்டப்பொருள் தாயிடமிருந்து குழந்தைப் பேறு காலம் வரை
பெறப்படுகிறது. இருப்பினும், குழந்தை பிறப்பின்போது பனிக்குடம் உடைந்து, தாயின்
பிறப்புறுப்பு வழியே குழந்தை வெளியேறிய உடனேயே இத்தொப்புள் கொடியானது
அறுக்கப்பட்டு தாயிடமிருந்து சேய் அஃதாவது குழந்தை தனி உயிரியாகப்
பிரிக்கப்படுகிறது. அவ்வாறு அறுக்கப்பட்ட தொப்புள் கொடியின் எச்சமானது
நாளாவட்டத்தில் சுருங்கிக் குழந்தையின் தொப்புளாக உருப்பெறுகிறது.
குழந்தை பிறந்த பிறகு
பின்னர் தொப்புள் கொடியோடு தொடர்புடைய எச்சங்கள் தாயின் கருப்பையிலிருந்து
வெளியேற்றப்பட வேண்டிய நஞ்சு என்றே கருதப்படுகிறது. இந்த நஞ்சானது
தாயிடமிருந்து இயற்கை உந்துதல் வாயிலாக வெளியேற்றப்படாமல் கருப்பையிலேயே
தங்கி விட நேர்ந்தால், அது அத்தாயின் உயிருக்கே கேடு
விளைவிப்பதாக அமைந்துவிடும். சிற்றூர்ப்புறங்களில் உள்ள ஆலமரங்கள் அல்லது
அரசமரங்களில் ஓலைப்பெட்டியில் கால்நடைகளின் தொப்புள் கொடியோடு தொடர்புடைய
நஞ்சுக்கொடியை வைக்கோலால் சுற்றிப் பாதுகாப்பாக உயர்ந்த மரக் கிளைகளில்
கட்டித்தொங்கவிடும் பழக்கம் இன்றளவும் உள்ளது. குழந்தைப் பேற்றோடு
தொடர்புடைய இந்நஞ்சுக் கொடியைக் கொண்டு பிறந்த குழந்தைக்கோ தாய்க்கோ
தீயவினை நேர்தலை தவிர்க்கும் என்ற நம்பிக்கையில் இத்தகைய பண்பாட்டுமுறை
கடைபிடிக்கப்பட்டுவருகிறது. தொப்புள் கொடியோடு தொடர்புடைய நஞ்சுக்கொடியைக்
கொண்டு ஒருவருக்குத் தீவினைகளை உருவாக்க இயலும் என்ற பழமையான நம்பிக்கையின்
அடிப்படையில் பண்டைய காலத்தில் நஞ்சுக்கொடியானது பாதுகாப்பாக
அப்புறப்படுத்தப்பட்டது. வெட்டி எடுத்துப் பாதுகாப்பாக
அப்புறப்படுத்தப்படவேண்டியது என்று ஒரு காலத்தில் கருதப்பட்ட
நஞ்சுக்கொடியானது மனித குலத்தின் உயிர்காக்கும் முகிழ் உயிரணுக்களின்
கொள்கலன் என அண்மையில் முறையாக அறிந்தேற்பு செய்யப்பட்டுள்ள நிலையில்
அரத்தம் மற்றும் மற்ற ஊறுப்புகள் போன்று நஞ்சுக்கொடியும் மேம்பட்ட எதிர்கால
மருத்துவ முறையாகப் பாதுகாக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
நம்பிக்கைகள்
குழந்தை பிறப்பின்போது சேயின் உடல் மீது
தொப்புள் கொடி சுற்றிய நிலையில் இருந்தால் அக்குழந்தையின் தாய் மாமனுக்கு
ஆகாது என்ற நம்பிக்கை உள்ளது. இதனையே பழமொழியாக மாலை சுற்றிப்பிறந்தால்
மாமனுக்கு ஆகாது என்பர்.
இவ்வாறு பரம்பரை, ஒழுகலாறு, பண்பாடு
ஆகியவற்றின் அடிப்படையிலான கால்நடைகள் மற்றும் மனிதனுக்கும் உள்ள உறவான
தொப்புள் கொடி உறவானது இன்றைய உகத்தில் அறுந்துவருகிறது. இதற்குக் காரணம்
நிலங்கள் அனைத்தும் வீட்டுமனைகளாக மாறிவிட்டன. பசுமைப்புரட்சியில்
மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் விடைகொடுத்துவிட்டு
இயந்திரங்களைப் பயன்படுத்திவருகிறோம். இதனால் கால்நடைகள் படிப்படியாக
ஒழிக்கப்படும் நிலைக்கு வந்துவிட்டது. கால்நடைகள் ஈண்ட தொப்புள் கொடியை
ஊரின் ஒதுக்குப்புறத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள மரங்களில் கட்டிவிட்டனர்.
தற்பொழுது நெடுஞ்சாலையில் மரங்களும் இல்லை. தொப்புள் கொடி கட்டுவதற்கு
இடமுமில்லை. அனைத்தையும் பயன்படுத்தித் தூக்கி எறி என்ற அடிப்படையில்
(அதாவது use and throw என்ற பாணியில்) தொப்புள் கொடியையும் தூக்கி
எறிந்துவருகிறோம். வயிற்றுவலி ஏற்பட்டால் தொப்புளில் விளக்கெண்ணெய் விடும்
பழக்கம் இன்றும் உள்ளது. இதன்மூலம் வயிற்று வலி குறையும் என்பது
நாட்டுப்புற மக்களின் நம்பிக்கை. இவற்றைத்தவிர காவல்நிலையங்களில்
குற்றவாளியிடம் உண்மையை வரவழைப்பதற்காகப் பிள்ளைப் பூச்சியை வயிற்றில்
தேங்காய் சிரட்டையை வைத்துக் கட்டி விடுவார்கள். பிள்ளைப்பூச்சி தொப்புளைக்
குடையும். அப்போது ஏற்படும் வலியால் உண்மையைக் குற்றவாளி
ஒப்புக்கொண்டுவிடுவார். அதன்பின்னர் பிள்ளைப்பூச்சியை விட்டுவிடுவார்கள்.
இவ்வாறு பாதுகாக்கப்பட்ட தொப்புள் கொடி தற்பொழுது காலத்தின் எச்சமாய்
கட்டுவதற்குக் கால்நடைகளும் இல்லை. அதற்கான மரங்களும் இப்பொழுது இல்லை
என்பது வேதனைக்குரியதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக