தமிழர் திருமண முறை
சென்ற 1500 ஆண்டுகளாக ஊறியேற்றிய புதிய ஆரியக்களியால் தமிழர், தமிழையும்
மறந்து, முன்னோர் பெருமையும் உரனும் துறந்து, பிறர் நகைப்புக்கு ஆளாயினர்.
தமிழர் திருமணத்துக்கு எவ்வகைச் சடங்கும் இன்றியமையாததெனப் பண்டைத்
தமிழ்மக்கள் கருதவில்லை என்பதற்குப் பற்பல சான்றுகள் பண்டைத் தமிழ்
இலக்கியங்களுள் உண்டு. முதற்கண்ணும் எஞ்ஞான்றும் உழுவலன்பே மணத்திற்கும்,
இல்வாழ்க்கை இன்பத்திற்கும் உரியதொன்றாக இருந்தது. பொருந்தாதனவும்
செயற்கையும் ஆகிய ஆரியர் வழக்குகளையும், முறைமைகளையும் தமிழரின்
காதல்பற்றிய வழக்குகள், குறிக்கோள்களோடும் இணக்கி வேறுபாடு அழித்து
ஒன்றாக்கச் சில பிராமண பிராமணீய இலக்கண நூலாசிரியர்கள் மேற்கொண்ட
முயற்சிகள் எல்லாம் விளக்க வேண்டா, வெளிப்படையாய் உள்ளன. எண்வகைப்பட்ட
ஆரியர் மணமுறைகளுள் பெரும்பான்மையான, மணமெனும் பெயர்க்கே பொருந்தாதன. பைசா
ராட்சசக் கூட்டங்களை மணமெனக் கூறுவது, மெய்மலையும் மொழியிற் பழிப்புரையும்
ஆகும். போற்றியுரைக்கப்படும் கந்தருவந்தானும் நிலைத்த மணம் அன்று. ஓர்
ஆண்மகனும் பெண்மகளும் ஒருகால் தம்முள் தலைப்பெய்தலையே குறிப்பதாகும்.
பின்னர் அவர் உறவு நிலைபெறல் வேண்டும் என்னும் நினைப்புத்தானும் அங்கு
இல்லை. இவ்வோர்காலைக் காதல் வெளிப்பாட்டைத் தமிழர் ஒப்பிட்டுரைப்பது
பெருங்குற்றமேயாதலின் அங்ஙனம் கருதிக் கூறுங் கூற்றுகளை விலக்கல் வேண்டும்.
ஆரியருடைய மற்ற ஐவகை மணங்களும் மணத்திற்கு முன்ப உரிய காதற் கிழமையைக்
குறித்து ஒன்றும் விதிப்பனவல்ல. உண்மையில் ஆரியர் மணமுறைகளில் காதல் முதற்
பொருளாக விதிக்கப்படவே இல்லை. காதற் கிழமைக்கு இடனின்றாயினும் அவர்
மணமுறைகள் ஒப்புடையனவாக அமைக்கப்பெற்றுப் புகழப்படுகின்றதும் யாவரும்
அறிந்ததே.
– நாவலர் சோமசுந்தர பாரதியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக