92.pallikuudangal_thalaippu
   ‘மாதா, பிதா, குரு, தெய்வம்’ என்ற தொடருக்கேற்ப தெய்வத்திற்கு முன்னர் குருவை மூன்றாம் இடத்தில் வைத்துப் பண்டைய காலத்தில் குருகுலக்கல்வியிலிருந்து கடைப்பிடித்து வருகிறோம். ஆனால் ஆங்கில மோகத்தின் காரணமாக நாம் நம்முடைய குழந்தைகளைப் பதின்நிலைப்பள்ளி(மெட்ரிக்குலேசன்,) மத்தியக்கல்வி வாரியம்(சி.பி.எசு.இ) எனப் பல வகையான பள்ளிகளில் சேர்த்து வருகின்றோம். இதனைப் பயன்படுத்தி பள்ளி – கல்வி நிறுவனங்கள் பெற்றோர்களை அடிமையாக்கியும், மாணவ, மாணவிகளைக் கொத்தடிமை போலவும்நடத்தி வருகிறார்கள். விளைவு பத்தாம் வகுப்பு படிக்கின்ற காலத்தில் பாதி மனநிலை பாதிக்கப்படும் நிலையில் மாணவர்களும், பெற்றோர்களும் தள்ளப்படுகிறார்கள். பணங்காய்ச்சி மரமாகச் செயல்படும் கல்வி நிறுவனங்கள் நாளுக்கு நாள் கந்துவட்டி நிறுவனங்கள் போல் செயல்படுகின்றன.. இந்தக் கல்விநிறுவனங்களுக்குப் பின்னர் அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், சமூகப் பகைவர்கள் எனப் பலர் உள்ளனர். இப்பொழுது தமிழகத்தில் கல்விவணிகம் நன்றாக நடக்கிறது என அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான கல்விநிறுவனம் நடத்துபவர்கள் தேனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, நாகர்கோவில், கோயம்புத்தூர் போன்ற பகுதிகளைக் கணக்கில் எடுத்து தமிழக கல்வி அதிகாரிகளுக்கு பணக்கட்டை தூக்கி எறிந்து தமிழக அரசு ஆணையை குப்பையில் போட்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஒவ்வொரு வணிகத்திலும் போட்டி என்று வந்துவிட்டால் விலை குறையும் என்பது அனைவரும் அறிந்த உண்மை. ஆனால் கல்வி மற்றும் மருத்துவத்தில் போட்டி என்று வந்துவிட்டால் அந்த நிறுவனங்கள் பெருமுதலை நிறுவனங்களாக மாறிப் பணத்தைத்தான் கறக்குமே தவிர விலையைக் குறைக்கா. பதின்நிலைப் பள்ளிகள் எவ்வாறு இயங்கவேண்டும் என்று கடந்த 31.07.215 ஆம் ஆண்டு பதின்நிலைப் பள்ளிகளின் இயக்குநர் அலுவகலத்திற்குத் தகவல் பெறும் உரிமைச்சட்டப்படி தகவல் கேட்டிருந்தோம். அதற்குப் பொதுத்தகவல் அலுவலராக இருக்கும் திருமதி சிரீதேவி என்பார், ஏறத்தாழ 20 பக்க அளவில் விதிமுறைகளை நமக்கு அனுப்பி இருந்தார். இந்த விதிகளை அனைவரும் படிப்பதோடு மட்டும் அல்லாமல் ஏன் என்று கேள்வி கேட்டாலே வணிகநிறுவனங்களாகக் கல்வி நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை நிறுத்துவதற்கு வாய்ப்பு உண்டாகும். இல்லையெனில்
இடிப்பாரை இல்லார ஏமாரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்
என்ற வள்ளுவர் வாய்மொழிக்கேற்ப தான்தோன்றித்தனமாக நிறுவனங்கள் செயல்படும். நமக்கு வழங்கப்பட்ட தகவல் பதின்நிலைப் பள்ளிகள் விதித்தொகுப்பு, தமிழகத்தில் பதின்நிலைப் பள்ளிகள் நடத்துவதற்கு விதிமுறைகளான அரசாணை எண் 48, பள்ளிகல்வித்துறை, அரசாணை எண் 131, பள்ளிக்கல்வித்துறை வழங்கிய நாள் 10.8.2006, அரசாணை எண் 270, பள்ளிகல்வித்துறை வழங்கிய நாள் 22.10.2012 ஆகியவற்றை நமக்கு அனுப்பி உள்ளார். முதலில் அரசாணை 270 இன்படியான விவரத்தை நாம் தெரிந்து கொள்வோம்.
கட்டடங்கள்
   பள்ளிகளில் கட்டட வரைபட இசைவு உரிய அலுவலரிடம் பெற்ற பின்னரே கட்டடங்கள் கட்டவேண்டும் எனவும், பள்ளி ஆய்வகத்தில் வெப்பம் வெளியேற வெப்பப்போக்கி (exhaust fan) அமைக்கவேண்டும் எனவும், மாடிப்படிக்கட்டுகளில் உள்ள கைப்பிடி அமைப்பின்மீது மாணவர்கள் சறுக்கு விளையாடுவதைத் தவிர்க்க, உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் வகுப்பிற்குள்ளும், வெளியேயும் ஆசிரியர் கண்காணிப்புப் பணியில் இருக்கவேண்டும் எனவும், மாடிப்பகுதியில் பாதுகாப்பான போதிய உயரத்திற்குச் சுவர் ஏற்படுத்தவேண்டும் எனவும் பள்ளி வளாகத்திற்குள் இயல்பான கதவுகள்தான் அமைக்கவேண்டும் எனவும் இழுவைக்கதவுகள், உருளைக்கதவுகள் ஆகியவற்றைக் கண்டிப்பாகத் தெரிவிக்கவேண்டும் எனவும் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள திறந்த வெளிக்கிணறு, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள், கழிவுநீர்த்தொட்டி ஆகியவை முறையாகப் பேணப்பட்டுப் பாதுகாப்பாக மூடப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்கள்.
குடிநீர்
   20 மாணவர்களுக்கு 1 குழாய் என்ற விகிதத்தில் குடிநீர்க் குழாய்கள் ஏற்படுத்தவேண்டும் என்றும் பாத்திரங்கள் கழுவ, கை, கால்களைக் கழுவ 20 மாணவர்களுக்கு 1 குழாய் என்ற அளவில் தண்ணீர் வசதி ஏற்பட்டிருக்கவேண்டும் என்றும் வழுக்கல் தரை இன்றித் தரைஅமைக்கவேண்டும் என்றும் குடிநீர்க் குழாய்த் தொட்டிகள் தூய்மையான முறையில் பேணப்படுவதோடு எப்போது யாரால் எப்படி தூய்மை செய்யப்பட்டது என்பதற்கான பதிவேடு பேணப்படவேண்டும் எனவும் விதிமுறை வகுத்துள்ளார்கள்.
(தொடரும்)
vaikaianeesu_name