செவ்வாய், 18 ஆகஸ்ட், 2015

இறையன்பு செலுத்த அருகதையற்றோர் யார்? – சொ.வினைதீர்த்தான்


தொண்டரடிப்பொடியாழ்வார்
தொண்டரடிப்பொடியாழ்வார்
  தொண்டரடிப்பொடியாழ்வார் இறையன்பு செலுத்த அருகதையற்றோர் யார் என்று அற்புதமாகப் பின்வரும் பாசுரத்தில் பதிவுசெய்து  இறைப்பற்றின் நோக்கத்தை அழகுற உணர்த்திவிடுகிறார்.
“மனத்திலோர் தூய்மை யில்லை வாயிலோர் இன்சொ லில்லை
சினத்தினால் செற்றம் நோக்கித் தீவிளி விளிவன் வாளா
புனத்துழாய் மாலை யானே பொன்னிசூழ் திருவ ரங்கா
எனக்கினிக் கதியென் சொல்லாய் என்னையா ளுடைய கோவே.”
மனத்தூய்மை வாய்மையால் காணப்படுமென்றது வள்ளுவம். மனத்தினில் தூய்மையில்லாமல் “நமநம” என்று பேசுவதாலும், தலங்கள்தோறும் அலைவதாலும், புறச்சின்னங்களாலும் அரங்கனின் அருள் கிடைத்துவிடாது. கள்ளநெஞ்சத்திற்குப்  பற்று – பக்தி – வசப்படாது என்கிறார் ஆழ்வார். “யாவர்க்குமாம் இன்னுரை” என்றது திருமந்திரம். வாய் கோபுரவாசல் என்றார்கள். கோபுரவாசலில் அசிங்கம் செய்யலாமா? மனத்தினில் தூய்மையில்லாவிடில் வாக்கினிலே எப்படி இனிமையுண்டாகும்? அதுவுமில்லை. தூய்மையற்ற உள்ளம்; சொல் கடுஞ்சொல்; அங்கு கோபம் தன்னாலே குடிகொள்ளும் அல்லவா?. சினம் என்னும் சேர்ந்தாரைக்கொல்லி என்கிறது வள்ளுவம். சினம் கொன்ற பிணத்திற்கு திருமால் அருளுவதென்பதேது?
அற வழியில் இருந்து  விலகியுள்ள அழுக்காறு, அவாவுள்ள உள்ளம், இன்னாச்சொல், வெகுளி இவற்றை மாற்றிக்கொண்டால்தான் இறைவன் அருளுவான் என்பதனை அழுத்தம்திருத்தமாக ஆழவார் இங்கு உரைக்கிறார். ஒழுக்கத்துடன் இயைந்த  பற்றே – பக்தியே – கதி என்பது வெள்ளிடைமலை.
இக்கருத்தினையே மேலும் வலியுறுத்துகிறார் தொண்டரடிப்பொடி யாழ்வார்.
“பேசிற்றே பேசலல்லால் பெருமைஒன்றஉணரல் ஆகாது
ஆசற்றார் தங்கட்கு அல்லால் அறியல் ஆவானும் அல்லன்;
மாசற்றார் மனத்துளானை வணங்கிநாம் இருப்பதல்லால்
பேசத்தான் ஆவதுஉண்டோ பேதைநெஞ்சே நீ சொல்லாய்”
இறைவன் விரும்பி உறையும் பாற்கடலும், வைகுந்தமும், அரங்கமாநகரும் மாசற்றார் மனமே என்கிறார் ஆழ்வார். உள்ளத்தினாலும், சொற்களினாலும்,செயல்களாலும் குற்றமிழைக்காதவர்களால்தான் இறைவனை அடையமுடியும் என்பது ஆழ்வார்கள் கருத்து.
– சொ.வினைதீர்த்தான்
so.vinaitheerththaan02


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக