ஞாயிறு, 7 ஜூலை, 2013

மாற்றத்திற்கு ஆயத்தமாக வேண்டும்!

மாற்றத்திற்கு ஆயத்தமாக வேண்டும்!

நீரை அதிகம் உறிஞ்சும் நெல் சாகுபடியைத் தவிர்த்து, மாற்று விவசாயம் பற்றி கூறும் வேளாண் வல்லுனர், கலைவாணன்: கடந்த ஆண்டைபோலவே, குறுவை சாகுபடி சாத்தியப்படாத நிலையில், அதற்கு ஏற்ப, மாற்று விவசாயம் பற்றிய தெளிவு, விவசாயிகளிடம் இருப்பது அவசியம். கடந்த அக்டோபர் மாதத்திற்கு பின், பருவ மழை சரியாக இல்லாததால், டெல்டா பாசனத்திற்கு பயன்படுத்தப்படும் ஆற்றில், தண்ணீர் இல்லை. இதனால், வரும் செப்டம்பர் மாதம் வரை, ஆற்றிலிருந்து தண்ணீர் எடுப்பதற்கு வாய்ப்பு இல்லை. அதனால், தண்ணீர் அதிகம் தேவைப்படும் நெல்லை பயிரிடுவதற்கு மாற்றாக, குறைந்த அளவே தண்ணீர் தேவைப்படும், எள், உளுந்து, கடலை மற்றும் காய்கறிகளை பயிரிடுங்கள் என, வேளாண் துறை எவ்வளவோ சொல்லியும், டெல்டா மாவட்டங்களில், பல ஆயிரம் ஏக்கரில் நிலத்தடி நீரை உறிஞ்சி,
நெல் சாகுபடி செய்யப்பட்டது. இதனால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. இது தொடர்ந்தால், கடலில் உள்ள உப்பு நீரும் சேர்ந்து,நிலமும், விவசாயமும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, இப்போது பொழியும் குறைந்த அளவு மழையை பயன்படுத்தி, மண் வகைகளை பொறுத்து, எள், உளுந்தை பயிரிடலாம். கம்பு மற்றும் சிறுதானிய
ங்களை பயிரிட்டால், அதன் அறுவடையின் போது பருவ மழை துவங்கி, அதிக பாதிப்பு ஏற்பட்டு, தொழிலில் நஷ்டம் ஏற்படும். அதனால், எள், உளுந்து அறுவடைக்கு பிறகு, மார்கழியில் காய்கறி, சிறுதானியம் மற்றும் பயறு வகைகளை பயிர் செய்யலாம். இப்படி செய்வதால், குறுவையில் ஏற்படும் இழப்பை, சரி செய்யலாம். கடந்த காலத்தை போன்று, அரசுகளை நம்பி, நஷ்டத்தை அனுபவிப்பதில், அர்த்தமில்லை. எனவே, நீரற்ற வறட்சியான காலங்களில், நீரை அதிகம் உறிஞ்சும், நெல் போன்ற குறுவை சாகுபடியில் ஈடுபடாமல், மாற்று பயிர்களை பயிரிடும் விழிப்புணர்வை, விவசாயிகள் வளர்த்துக் கொள்வது, எதிர் காலத்தில் நன்மை பயக்கும்.

மிதியூர்தி ஓட்டுநர்களின் உணவகம்

சவாரி கிடைக்காத ஓய்வு நேரங்களில், ஓட்டல் தொழில் செய்து முன்னேறும், ஆட்டோ சங்கத்தின் தலைவர் சீனிவாசன்: நான், புதுச்சேரியை சேர்ந்தவன். எங்கள் ஆட்டோ சங்கத்தில், 25 ஓட்டுனர்கள், உறுப்பினர்களாக உள்ளனர். காலையில், முதல் ஆளாக யார் வருகின்றனரோ, அந்த வரிசைப்படியே சவாரிக்கு செல்ல வேண்டும். ஒரு சில நாட்களில், ஐந்து முதல் ஆறு சவாரிகள் மட்டுமே வரும் போது, மற்ற, 20 ஓட்டுனர்களும், வேலை இன்றி இருக்க வேண்டிய சூழ்நிலை உருவானது.
தற்போது, இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டதால், ஆட்டோ தொழிலில், பெரிய லாபம் பார்க்க முடியாத நிலையும் உள்ளது. எந்த சவாரியும் கிடைக்காததால், வரவு ஏதுமின்றி, எங்களின் காசை போட்டே, உணவு உட்கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. வருமானம் இல்லாமல் செலவு அதிகரித்ததால், இப்பிரச்னைக்கு தீர்வு காண முயற்சித்தோம். எங்கள் சங்கத்தின், 25 ஓட்டுனர்களும் ஒன்றிணைந்து, எங்களுக்கும், மற்ற பொது மக்களுக்கும் பயனுள்ள விதத்தில், குறைந்த விலை சிற்றுண்டி உணவகத்தை, காலையில் மட்டும் நடத்தலாம் என்ற எண்ணம் தோன்றியது. 25 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று, புதுவையின் பிரதான சாலையான, காந்தி வீதி, ஈஸ்வரன் கோவில் அருகே, சாலையோர சிற்றுண்டி உணவகம் ஆரம்பித்தோம். ஓட்டல் வேலைக்கு ஆள் வைக்காமல், எல்லா வேலைகளையும், நாங்களே செய்தோம். எங்கள் உணவகத்தில், காலை 10:00 மணி வரை, சிற்றுண்டி கிடைக்கும். பின், ஜூஸ் மட்டுமே விற்போம். குறைந்த விலை என்பதால், விற்பனையும் அதிகரித்து, முதலீட்டுக்காக வாங்கிய கடனையும், அடைத்து விட்டோம். காலை டிபனை, இங்கேயே முடித்து விடுவதால், உணவிற்கு என, தனியாக செலவு செய்ய தேவையில்லை. உணவகத்தில் கிடைக்கும் லாபத்தை, சரிசமமாக பிரித்து கொள்வோம். இதனால், ஆட்டோ வருமானத்தை தாண்டியும், அதிக வருமானம் கிடைக்கிறது. வாய்ப்பு தானாக வந்து, நம் கதவை தட்டாது என்பதால், நாங்களே புதிய வாய்ப்புகளை உருவாக்கினோம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக