ஞாயிறு, 7 ஜூலை, 2013

இரிகேசில் திருவள்ளுவர் சிலை - ஆறு. அழகப்பன் பணி

திருவள்ளுவர் படிமம் கோவிலூர் மடத்தில் முனைவர் ஆறு.அழகப்பன் அவர்களால் நிறுவப்பட்ட செய்தி குறித்து ஆசிரியர் பகிர்ந்துள்ளதை அவரிடம் தெரிவித்தேன்.  சித்திரின் சிலை எனக் கருதுவதாக ஆசிரியர் குறிப்பிட்டுள்ளதைக் குறிப்பிட்டுத் தெய்வப்புலவர் திருவள்ளுவர் பற்றி  தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தியிலும் எழுதி வைக்க ஆவன செய்யுமாறு வேண்டினேன். உடன் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தார். கோவிலூர் மடத்தினரும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இச் செய்தியைப் பகிர்ந்த ஆசிரியருக்கு நன்றி. அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!/


இந்த வார க் கலா இரசிகன்








உத்தரகாண்ட் சோகத்தை நேரில் கண்டறிய "தினமணி' ஆசிரியர் குழுவைச் சேர்ந்த சுந்தரேஸ்வரன், வெங்கடேசன், புகைப்படக் கலைஞர் ராமகிருஷ்ணன் ஆகியோருடன், ரிஷிகேஷில் உள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்தில் தங்கியிருந்தேன். அதற்கு அடுத்தாற்போல இருக்கும் ஆசிரமம் காரைக்குடி கோவிலூர் மடம்.
கோவிலூர் மடத்திற்குள் நுழைந்தபோது, அங்கே கம்பீரமாகத் திருவள்ளுவர் சிலையொன்று அமைக்கப்பட்டிருந்ததைக் கண்டோம். அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்ற முனைவர் ஆறு.அழகப்பன்தான், அந்தச் சிலையை எடுத்துச் சென்று அங்கு நிறுவியதாகத் தெரிவித்தார் மடத்தின் நிர்வாகியான விசாலாட்சி ஆச்சி.
உள்ளூர்க்காரர்களுக்குத் திருவள்ளுவர் பற்றித் தெரியாதாம். அது ஏதோ ஒரு சித்தரின் சிலையாக இருக்கும் என்று கருதி வணங்குபவர்களும் இருக்கிறார்களாம். வள்ளுவப் பேராசானுக்கு ரிஷிகேஷத்தில் சிலை நிறுவியதற்காக முனைவர் ஆறு.அழகப்பனைப் பாராட்டுவது நமது கடமை.

-------------------------------------

இராஜாஜியைப் பற்றிய ஒரு பதிவு இங்கே தரப்பட்டுள்ளது.
""சேலம் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரைக் குறித்து நான் கண்டது முழுவதும் எழுத வேண்டுமானால் விரிந்து பெருகிவிடும். 1917-ஆம் வருடம் ஆகஸ்டு மாதம் முதற்கொண்டு நாங்கள் இருவரும் ஒன்றுபட்டு இந்தியாவின் சுதந்திரத்திற்காக இடைவிடாது சேவை செய்திருக்கிறோம். எனக்கு அவரிடத்தில் உண்டாகியிருக்கும் மதிப்பு அளவற்றதாகும். சமய, சமூக அரசியல் திட்டங்களில் அவர் கொண்டுள்ள கருத்துகள் பெரும்பாலும் எனக்கு உடன்பாடானதாகவே இருந்திருக்கின்றன. சென்ற 30 ஆண்டுகளில் மூன்று தடவைகளில் எனக்கும் அவருக்கும் மாறுபாடான அபிப்ராயங்கள் உண்டாயிற்று.
குறிப்பாக பாகிஸ்தான் விஷயத்தில், அன்றும் இன்றும் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருடைய கொள்கையில் நான் முற்றும் மாறுபட்டவனாகவே இருக்கின்றேன். இதில் யாருடைய நோக்கம் தவறானது என்பதை வருங்காலத்து மக்களே முடிவுகூற வேண்டியிருக்கின்றது.
இவ்வளவு மாறுபாடான அபிப்ராயம் இருந்தும் என்னுடைய அன்பு ஆச்சாரியாரிடம் தங்கி உறுதி பெற்றிருப்பதைக் குறித்து மட்டும் இங்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.
மக்களுக்கும் தான் பிறந்த நாட்டுக்கும் சேவை செய்ய முன்வருபவர் குறிப்பாகச் சில லட்சணங்கள் பெற்றிருக்க வேண்டும். களங்கமற்ற மனதும் வெகு பரிசுத்தமான வாழ்க்கையும் மிகவும் அவசியமாகும். நான் கண்ட தேசியத் தலைவர்களில் தம்முடைய சொந்த வாழ்க்கையில் பரிசுத்தமாயிருந்தவர்களில் ஒரு சிலரைத்தான் நான் கண்டிருக்கிறேன். அவர்களில் மூன்று பெயர்களைக் கூறுவதாயின் மகாத்மா காந்தி, ராஜேந்திர பிரசாத், ராஜகோபாலாச்சாரியார் என்று சொல்வேன். இவர்களிடத்தில் நெருங்கிப் பழகும் பாக்கியம் எனக்கிருந்திருக்கின்றது. சொந்த வாழ்க்கையில் சுத்தம் இல்லாதவன் உலகத்தை ஏமாற்றிவிடலாம். ஆனால் உண்மையில் உயர்ந்தவராக முடியாது.
சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் உண்மையில் பெரியவர். பரிசுத்தமான வாழ்க்கையைக் கடைப்பிடித்தவர். ஆச்சாரியாரை அண்டிப் பிழைக்கும் வெறும் ஆட்களைக்கொண்டு யாரும் ஆச்சாரியாரை மதிப்பிடக்கூடாது. இனம், ஜாதி என்ற பூசலினால் ஆச்சாரியாரின் உயர்வைத் தென்னாட்டு மக்கள் அறியத் தவறிவிட்டார்கள். ஆச்சாரியாரை எதிர்த்து பலமாகக் கிளர்ச்சிகளை நானும் நடத்தியிருக்கிறேன். அவருடைய ஒழுக்கம், தேசபக்தி, தியாகம் ஆகிய குணங்களைக் குறித்து ஒரு நாளாவது அந்தரங்கமாகவோ, பகிரங்கமாகவோ நான் குற்றம் சொன்னதில்லை. ஆச்சாரியாரைப் போன்ற ஒரு தலைவர் நமது சேலத்தாராயிருக்கிறாரே என்று நான் பெரிதும் பெருமை அடைகிறேன்.
சேலம் முனிசிபல் சேர்மனாயிருந்தவர் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாகியது அரசியல் சூழ்ச்சியால் அல்ல. காங்கிரசு தலைவர்களின் தயவினால் அல்ல. அவருக்கு அமைந்திருக்கும் யோக்கியதையினாலேயே ஆச்சாரியார் கவர்னர் ஜெனரலானார் என்பதே எனது தெளிவான அபிப்பிராயமாகும்.
திறமையில் அவருக்கு ஈடாக வடநாட்டுத் தலைவர்களில் நான் ஒருவரையும் எடுத்துக்காட்ட முடியவில்லை. மக்கள் யாவரும் சமம், ஒரு குலம் என்றாலும், ஆற்றலும் அறிவும் தோற்றமும் பெற்றவர்கள் லட்சத்தில் ஒருவர்கூட இல்லை. அவ்வாறு பொறுக்கி எடுத்த உலகத்துப் பெரியோர்களில் ஆச்சாரியாரும் ஒருவர்.
இந்நாட்டு மக்கள் அவரைப் பரிபூரணமாக அறிந்துகொள்ளவில்லை. நான் கண்ட ஆச்சாரியாருக்கு பணத்தின் மீது ஆசையில்லை. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கையில் ஒருநாளும் களங்கம் நான் காணவில்லை. அரசியல் ஆட்சி நடத்தும் அதிகாரம் தனக்கு வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு உண்டு. அந்நிய ஆட்சியில் அடங்கி நடக்க அவர் விரும்பவில்லை. தம்முடைய தேசீயக் கொள்கையின்படி சுயேச்சையான அதிகாரம் பெறவேண்டும். அதைத் தாமே நடத்திக்காட்ட வேண்டுமென்ற கருத்து அவர் உள்ளத்தில் வெகு காலமாக இருந்து வந்ததை நான் அறிவேன். இதில் குற்றம் இல்லை. கவைக்கு உதவாதவர்களும்கூட இதுபோன்ற ஆசையில் அடிபட்டு, நாட்டைப் பாழ்படுத்தி வரும்போது, சகலத்தையும் தம்முடைய நாட்டின், மக்களின் நலனுக்காகவே தியாகம் செய்ய வேண்டுமென்ற மிகமிக உயர்ந்த லட்சியத்தை அடிப்படையாகக் கொண்டுள்ள ஆச்சாரியார் அரசியலை நடத்த விரும்புவதில் என்ன தவறு?
தனக்கென்று வாழாது, நாட்டுக்கென்று வாழ்வதே ஈசன் வழிபாடு என்ற எண்ணமுள்ள ஆச்சாரியார் போன்றவர்களே இந்நாட்டுக்கு இப்போது தேவையாகும். இப்போதுள்ள சட்டசபையின் போக்கையும், சர்க்கார் நிர்வாகத்தின் துர்பாக்கியமான நிலைமையையும் கவனிக்கும்போது, சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாரை சுதந்திர இந்தியாவின் "சர்வாதிகாரி'யாக நியமித்துவிட்டால் நாட்டுக்கும் அதன் குடிமக்களுக்கும் நன்மையாயிருக்குமென்று நான் கருதுகிறேன்''.
இப்படி ராஜாஜி பற்றிக் கூறியிருப்பவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். ராஜாஜி தமிழக முதல்வராக இருக்கும்போது கொண்டுவந்த குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்துப் பேராடிய டாக்டர் வரதராஜுலு நாயுடுதான் மேலே சொன்ன கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
"பெரியாரின் நண்பர் - டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு' என்கிற பழ. அதியமானின் புத்தகத்தில் வரதராஜுலு நாயுடு பற்றியும், அவரது சமகால அரசியல் தலைவர்கள் பற்றியும் பல அரிய தகவல்களும் சம்பவங்களும் காணக்கிடைக்கின்றன. படிக்க வேண்டிய புத்தகம்.
ஏ ஏ ஏ ஏ

கடந்த வாரம் "கல்கி' வார இதழில் வெளியாகி இருந்தது கொ.மா.கோ. இளங்கோ எழுதிய "ஒண்ணாங்கிளாஸ்' என்கிற கவிதை.

வீட்டுப்பாடம் எழுதிமுடித்த
வீணா குட்டியின்
நோட்டைச் சரிபார்க்கும்
வேலை இனி அப்பாவுக்கு...

அப்பாவை அருகில் அழைத்து
உட்காரச் சொல்லி ஒரு விளையாட்டை
இப்படித்தான் தொடங்கினாள் வீணா குட்டி

""அப்பா...
நீ ஒண்ணாங்கிளாஸ் பையனாம்
ஒனக்கு நான் டீச்சராம்
வீட்டுப்பாடம் எழுதுன நோட்டை
விருட்டுன்னு எடுத்துகிட்டு வா பாக்கலாம்!''

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக