வியாழன், 11 ஜூலை, 2013

குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்!

குழந்தைகளை ஊக்குவிக்க வேண்டும்!

தன்னை ப் போன்றே, தன் குழந்தைகளும் இருக்க வேண்டும் என, எதிர்பார்க்கக் கூடாது என்று கூறும், முனைவர் ஒய்.சிம்சன்: நான், சிறப்புக்கல்வி ஆலோசகராக, வேலூரில் பணியாற்றுகிறேன். இன்றைய காலத்தில் கணவன், மனைவி இருவருமே நன்கு படித்து, அதிக சம்பளத்தில் வேலைக்கு செல்கின்றனர். அவர்களை போன்றே, குழந்தைகளும் நன்கு படிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பில், சிறந்த பள்ளிக் கூடத்தில் சேர்த்து, படிக்க வைக்கின்றனர்.
குழந்தையின் படிப்பில் சிறிய குறை இருந்தாலும், என்ன பிரச்னை என, ஆசிரியரிடம் கேட்காமல், ஒவ்வொரு பாடத்திற்கும், ஒரு டியூஷன் வைக்கின்றனர். எனினும், 80 சதவீதத்திற்கும் மேல், மதிப்பெண்கள் வாங்க முடியவில்லை. இதற்கு காரணம், பெற்றோரிடம் உள்ள திறமைகளை போன்றே, அவர்களின் பிள்ளைகளும் இருக்க வேண்டும் என, எதிர்பார்ப்பதே.
பெற்றோரின் எதிர்பார்ப்பில் நியாயம் இருந்தாலும், இது முற்றிலும் தவறு. இதனால், குழந்தைக்கு படிப்பின் மீதான வெறுப்பு ஏற்பட்டு, தற்போதுள்ள தேர்ச்சி விகிதம் கூட, குறையும் நிலை ஏற்படலாம். பெற்றோரின் திறமைகள், குழந்தைக்கும் தொடர வேண்டும் என, எந்த அவசியமும் இல்லை. ஏனெனில், பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும், தனித்துவம் உண்டு.
"வசதியான குடும்பத்தை சேர்ந்த நான், ஏன் படிக்க வேண்டும்' என்ற மிதப்பான போக்கும், சில குழந்தைகளிடம் இருக்கிறது. அவர்களிடம், "படிப்பு என்பது வெறும் வேலை செய்து சம்பாதிப்பதல்ல; வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கி, சாதனை படைக்க உதவுவதே கல்வி' என்பதை, புரிய வைக்க வேண்டும்.
குழந்தைகளின் திறன் அறிந்து, அதற்கு ஏற்ப ஊக்கப்படுத்த வேண்டுமே தவிர, எடுத்ததுமே, 100 சதவீத வெற்றியை பெற வற்புறுத்த கூடாது. மேலும், பள்ளி சூழ்நிலையை, மகிழ்ச்சியாகவும், ஆர்வமுள்ளதாகவும் மாற்றினாலே, படிப்பின் மீதான ஆர்வம் ஏற்படும். குழந்தைகளை கண்டிப்பதற்கு பதில், அவர்களின் உற்சாகம் மற்றும் ஈடுபாடு குறைவுக்கான காரணத்தை கண்டறிந்து, அவற்றை நிவர்த்தி செய்து ஊக்குவித்தாலே, படிப்பின் மீதான ஆர்வம் அதிகரிக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக