திங்கள், 8 ஜூலை, 2013

இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்

மதிப்புமிகு குமாரசாமி அவர்கள் முதல்வராக இருந்த பொழுது பேராசிரியர் சி.இலக்குவனார் அவர்கள் எழுதிய அமைச்சார் யார்? நூல் வெளிவந்தது. இந்நூலில் காங்கிரசு அமைச்சர்களை எல்லாம் தாக்கி எழுதியிருப்பதாகத் தவறான பரப்புரை மேற்கொள்ளப்பட்டது. உடனே முதல்வரான குமாரசாமி அவர்கள், தொலைவரி மூலம் இந்நூலின் படி ஒன்றினை அனுப்புமாறு வேண்டினார். அவ்வாறு நூல் அனுப்பி அது கிடைக்கப்பெற்றதும் அந்நூலின் விலையை உடனே அனுப்பி வைத்தார். நூலாசிரியரை மதிக்கும் திறமும் அவர் நாணயமும் இதனால் வெளிப்பட்டன. பணத்தை எதிர்பார்த்துப் புத்தகம் அனுப்பப்படவில்லை. எனினும் கட்டணமின்றி நூலைப் பெறக்கூடாது என்ற அவரது நேர்மை நூலின் விலையை அனுப்பச் செய்தது. புத்தகத்தைப் படித்துப்பார்த்த அவர், திருவள்ளுவர் திருக்குறளில் வெளிப்படுத்தி உள்ள கருத்துகளைத்தான் இந்நூலில பேராசிரியர் எழுதி உள்ளார் என்பதை உணர்ந்தார். உடனே இது குறித்து அவருக்குப் பாராட்டு மடல் அனுப்பிவிட்டு, அந்நூலைப்  பிறரும் படிக்க வேண்டும் என்பதற்காகத் தம் ஊரில் உள்ள நூலகத்திற்கு அனுப்பி விட்டார். அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன் /தமிழே விழி! தமிழா விழி! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்!

இப்படியும் இருந்தார் ஒரு தலைவர்...

இந்தியாவிலேயே முதல் முறையாக கைராட்டின நூல் நெசவுத் தொழிற்சாலை துவக்கப்பட்ட பெருமைக்குரிய ராஜபாளையம் நகரில் 1898 ஜூலையில் பிறந்தவர் பி.எசு.குமாரசாமி இராசா.
ராஜபாளையம் நகர்மன்றத் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர், சென்னை மாகாண முதல்வர் (ஏப்ரல் 6, 1949 - ஏப்ரல் 10, 1952), ஒரிசா மாநில ஆளுநர் (1954-56) என பல்வேறு பதவிகளை வகித்தவர்.
ராமநாதபுரம் மாவட்ட காங்கிரஸ் தலைவராக பதவி வகித்து, தமிழ் மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவராகவும் உயர்ந்தவர். ஆட்சியிலும், கட்சியிலும் பல்வேறு பதவிகளை வகித்திருந்தாலும் வகித்த அனைத்துப் பதவிகளுக்கும் பெருமை சேர்த்தவர். எந்தப் பதவியும் வேண்டாம் என்று ஒதுங்கி இருந்தபோதும் நேரு, ராஜாஜி போன்ற தலைவர்களின் வற்புறுத்தலுக்காகவே ஒரிசா மாநில ஆளுநர் பதவியை ஏற்றவர்.
1946-இல் முதல்வராக டி.பிரகாசம் தேர்வு செய்யப்பட்டபோது அவரது அமைச்சரவையில் வேளாண்மைத்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்டார்.
இது அவருக்கே தெரிவிக்கப்படாத நிலையில், வானொலி மூலம் இதனை அறிந்து கொண்ட அவரது உறவினர்களும், நண்பர்களும் அவரது வீட்டுக்கு (ராஜபாளையம்) இச்செய்தியைச் சொல்ல வந்தனர்.
அப்போது தனது வீட்டுத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தார் ராஜா. அமைச்சராக நியமிக்கப்பட்ட செய்தியை அவரிடம் சொன்னபோது எந்தவித பூரிப்பும் அடையவில்லை.
""அமைச்சர் பதவி என்பது எனது சொந்த நலனுக்காகக் கொடுக்கப்படவில்லை, மக்களுக்கு சேவை செய்வதற்காக மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது. இப்பதவியின் மூலம் நேர்மையாகப் பணியாற்றி மக்களால் பாராட்டும்படி நடந்து கொள்வதுதான் அமைச்சர் பதவிக்கு சிறப்பாக இருக்கும்'' என தன் இல்லத்துக்கு வந்தவர்களிடம் சொல்லி அவர்களது உள்ளத்தில் இடம் பிடித்தார். அப்படிச் சொன்னது மட்டுமின்றி அவ்வாறே வாழ்ந்தும் காட்டினார்.
1952 பொதுத் தேர்தல் முடிந்து முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கும் இரவு நேரத்தில் எப்போதும் போல இரவு 10 மணிக்கு தூங்கச் சென்று விட்டார். அப்போது அவரது பத்திரிகைத்துறை நண்பர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு அவரை எழுப்பி, "தேர்தல் முடிவுகளைத் தெரிந்து கொள்ளாமல் தூங்கப் போகிறீர்களே?' எனக் கேட்டார்; "தேர்தல் முடிவு வெற்றியாகவோ அல்லது தோல்வியாகவோதான் இருக்கும். அதற்காகத் தூங்காமல் இருக்க முடியுமா?' என்று கூறிவிட்டு மீண்டும் தூங்கச் சென்றுவிட்டார். அந்தத் தேர்தலில் அவர் தோற்றுப்போய்விட்டதாகத் தகவல் வந்தபோது சிரித்துக் கொண்டே, "அப்படியா, சரி பரவாயில்லை' என்று பதிலளித்துவிட்டு தனது பணிகளை வழக்கம் போலவே செய்யத் தொடங்கினாராம்.
முதல்வராகப் பதவி வகித்தபோது நிர்வாகத்துறையும், நீதித்துறையும் ஒன்றாக இருந்ததை இரண்டாகப் பிரித்து நீதித்துறையை தனியாக உருவாக்கினார். நிர்வாகம் எப்போதும் நீதிமன்ற விவகாரங்களில் தலையிடக்கூடாது என்றும் அவ்வாறு செயல்பட்டால் மட்டுமே மக்களுக்கு நியாயமான தீர்ப்பு வழங்க முடியும் என்றும் சொன்னார்.
சமூக நலத்துறையிடம் இணைந்திருந்த ஹரிஜன நலத்துறையைத் தனியாகப் பிரித்து அத்துறைக்கென தனியாக ஒரு அமைச்சரையும் நியமித்து அம்மக்களின் உயர்வுக்காக பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வகுத்தளித்தார்.
தமிழகத்தில் இருந்த 60 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களையும் கணக்கெடுத்து அவையனைத்தையும் இரண்டே ஆண்டுகளில் விளை நிலங்களாக மாற்றினார்.
ஏழை விவசாயிகளை இனம் கண்டு அவர்களுக்கு இலவசமாகவே பட்டாவும் தந்து உதவினார்.
தமிழகத்தில் ஜமீன்தார்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஏராளமான இடங்களை மீட்டு அவையனைத்தையும் அரசின் கீழ் கொண்டுவந்து ஜமீன்களே இல்லாத முதல் குடியரசு தின விழாவை 1950-இல் கொண்டாட வைத்தார்.
சென்னை மாகாணத்தின் "பிரதமர்' என அழைக்கப்பட்ட பி.எஸ்.குமாரசாமி ராஜா, இந்தியாவின் புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி நாடு குடியரசு ஆனதும், பிரதமர் என்ற பதவி எடுக்கப்பட்டு முதல் முதலாக "முதலமைச்சர்' எனும் புதிய பெயரில் அதே பதவியினைத் தொடர்ந்து அலங்கரித்தார்.
தமிழகத்தில் பூரண மதுவிலக்குத் திட்டத்தை அமல்படுத்தியதுடன் ""தமிழகம் முன்னேற வேண்டுமானால், குடும்பங்கள் மதுவால் சீரழியாமல் இருக்க வேண்டுமானால் மக்கள் அனைவரும் பூரண மதுவிலக்குத் திட்டத்துக்கு ஆதரவு தாருங்கள்'' என்று மக்களிடையே மன்றாடினார்.
இத்திட்டத்தை அமல்படுத்தினால் அரசின் வருமானம் குறைந்துவிடும். மக்கள் மீது தேவையில்லாமல் அதிக வரி வசூலிக்க வேண்டிய சூழ்நிலை வந்துவிடும் என்று தலைவர்கள் சிலர் குரல் எழுப்பியபோது, "நல்ல திட்டங்களைச் செயல்படுத்தும்போது சில தியாகங்களையும் செய்யத்தான் வேண்டும், மக்களின் முன்னேற்றம் பூரண மதுவிலக்கில்தான் இருக்கிறது'' என்று பதிலளித்தார்.
மக்களின் நலனுக்காகத்தான் அரசு செயல்பட வேண்டுமே தவிர வியாபாரம் செய்வதற்காக அரசை நடத்தக் கூடாது என்று சொன்னதோடு நில்லாமல் காவல்துறையில் மதுவிலக்குப் பிரிவையும் துவக்கினார். இத்திட்டம் பெண்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதால் வெற்றியையும் தொட்டது.
இதனால் சென்னை மாகாண அரசு செயற்கரிய செயலை செய்திருப்பதாக மத்திய அரசும் பாராட்டியது. ஊழல் செய்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை முதல்வரே நேரடியாக அழைத்து விசாரித்ததால், லஞ்சமே இல்லாத நேர்மையான ஆட்சி இவரது ஆட்சிக் காலத்தில் நடந்தது.
முதல்வராக, ஆளுநராகப் பதவி வகித்த இவர், தேச விடுதலைக்காக பட்ட துயரங்கள் எண்ணிலடங்காதவை. பதவியில் இருந்தபோதும், இல்லாதபோதும் தொண்டு செய்யும் தியாக உணர்வோடும், பரந்த மனப்பான்மையோடும் எதையும் எதிர்பார்க்காமலும், மிகைப்படுத்தாமலும் வாழ்ந்து காட்டியவர்.
இத்தகைய அப்பழுக்கற்ற மனிதருக்கு அவரது பிறந்த ஊரான ராஜபாளையத்தில் 115-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது.
தான் வாழ்ந்த வீட்டையே பொதுமக்களுக்கு தானமாக தந்துவிட்டு அரசுக்குச் சொந்தமான கூட்டுறவு காலனியில், குடியிருக்க மட்டும் வீடு ஒதுக்க முறைப்படி மனுச்செய்து அந்த வீட்டில் சென்று தங்கி வாழ்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக