புதன், 10 ஜூலை, 2013

இலங்கைத் தூதருக்கு அழ‌ைப்பாணை : செயலலிதா வலியுறுத்தல்

இலங்கை த் தூதருக்கு  அழ‌ைப்பாணை அனுப்ப செயலலிதா வலியுறுத்தல்

தமிழக மீனவர்கள் அவ்வப்போது கைது செய்யப்படுவது குறித்து இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்ப தமிழக முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழக மீனவர்கள், கடலில் மீன்பிடிக்கும் போது இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்படுவது அடிக்கடி நிகழும் நிகழ்வாகிவிட்டது.
சமீபத்தில் 49 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்டு, கடந்த 5ம் தேதி 25 மீனவர்களும், 6ம் தேதி 24 மீனவர்களும் விடுவிக்கப்பட்டனர். இதற்கிடையே கைது செய்யப்பட்ட 8 மீனவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை ராமநாதபுரத்தைச் சேர்ந்த மீனவர்கள் 21 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதனால், தமிழக மீனவர்கள் வாழ்வாதாரமான மீன்பிடி தொழிலே முடங்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இந்திய கடல் எல்லையில் தமிழக மீனவர்கள் சுதந்திரமாக மீன்பிடிக்க இயலாத நிலை உள்ளது. ஆயுதமின்றி, நிராதரவாக இருக்கும் தமிழக மீனவர்களை, இலங்கை கடற்படையினர் தாக்குவதும், மீன் பிடி வலைகளை அறுப்பதும், கைது செய்வதும் என தொடர்ந்து அட்டூழியம் செய்து வருகின்றனர்.
இது குறித்து ஏற்கனவே பல கடிதங்கள் வாயிலாக உங்களது கவனத்துக்குக் கொண்டு வந்தும், இலங்கை கடற்படையினர் விஷயத்தில், மத்திய அரசு ஒரு  துறவியைப் போல மௌனம் காத்து வருகிறது.
எனவே, இந்த விஷயம் குறித்து மத்திய அரசு உடனடியாக தலையிட்டு, புது தில்லியில் உள்ள இலங்கை தூதருக்கு சம்மன் அனுப்பி, இந்தியா தரப்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்து, கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், தற்போது இலங்கை சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் எவ்வித வாய்தாவும் இன்றி உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்த வேண்டும் என்று கடிதத்தில் முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக